(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
- 1 தெச 5:21.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
- 1 கொரி 2:15

முன்னுரை

கர்த்தருக்குள் அன்பானவர்களே,

உங்கள் யாவருக்கும் உயிர்த்தெழுந்தவரும்,              உயிரோடு இருக்கிறவருமாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்து கூறுகிறேன்.

Cross  இம்மாத ஜாமக்காரனை இந்தியகிறிஸ்தவ உலகமும், மற்ற நாடுகளில் உள்ளவர்களெல்லாரும் மிக ஆவலாக என்றுமில்லாத எதிர்ப்பார்ப்போடு எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிவேன். அந்த எதிர்ப்பார்ப்பு கடவுளைப்பற்றியது அல்ல,          வசனத்தைப் பற்றியதும் அல்ல, சகோ.D.G.S.தினகரனின் மரணத்தைப்பற்றி ஜாமக்காரன் என்ன சொல்லப்போகிறார் என்பதே!

வழக்கம்போல குறைகளை சொல்லி,            குற்றம் கண்டுபிடித்து அறிவிப்பவர்தானே ஜாமக்காரன்.            ஆகவே அதைத்தான் எல்லாரும் எதிர்ப்பார்ப்பார்கள் என்பதையும் அறிவேன்.      அந்த விஷயத்தில் உங்கள் எதிர்ப்பார்ப்பை ஒரளவு வீணாக்காமல் பார்த்துக்கொண்டேன்.

Cross  வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் 2 நாளாகமம் 18ம் அதிகாரத்தில் இரண்டு இராஜாக்கள் பேசிக்கொள்ளும் ஒரு சம்பாஷணையை வாசிக்கலாம். கர்த்தரிடத்திலிருந்து சரியான செய்தியை அறிய ஆசைப்பட்டவர்கள். அன்றைய காலத்தில் கர்த்தருடைய பதிலை அறிய தீர்க்கதரிசிகளையே தேடுவார்கள். தீர்க்கதரிசி என்றால் கர்த்தருடைய வார்த்தையை உரைக்கிறவன். தீர்க்கதரிசனம் என்றால் கர்த்தருடைய வார்த்தை என்பதாகும். வேதபுத்தகம் எழுதப்படாத காலத்தில் கர்த்தர் தீர்க்கதரிசிகள் மூலமாகத்தான் ஜனங்களோடும், இராஜாக்களோடும் பேசினார்.

Cross  இப்போது எயிட்ஸ் வியாதி சுகமானது. 18 பேர்களை உயிரோடு எழுப்பினேன் என்று கூறும் இப்போதைய கள்ளதீர்க்கதரிசிகளைப்போல் அந்தகாலத்திலும் இருந்தார்கள். பொய்யானவற்றை உரைக்கும் தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் அல்லது மக்கள் விரும்புகிற மாதிரி பிரசங்கிக்கும் தீர்க்கதரிசனம் கூறும் தைரியமில்லாத மாய்மாலதீர்க்கதரிசிகள் நிறையபேர் அன்றும் இருந்தார்கள்.

ஒரு முக்கியமான கட்டத்தில் கர்த்தரின் செய்தியை அறிய 2 இராஜாக்கள் ஓர் இடத்தில் கூடினார்கள். தீர்க்கதரிசிகள் பலர் கர்த்தர் சொன்னார் என்று அவர்கள் கூறிய தகவல் தவறானது என்றும் அவர்கள் கர்த்தர் கூறியதாகச் சொன்ன தகவல்களைக் குறித்து இந்த இராஜாக்கள் நம்பவில்லை.  உடனே யோசபாத் ராஜா உண்மை விவரமறிய சரியான ஊழியக்காரன் இங்கு இவர்களை தவிர வேறுயாரும் இல்லையா? என்றான். அதற்கு இஸ்ரவேல் ராஜா ஓர் உண்மையான ஊழியக்காரன் இருக்கிறான்.      அவன் உள்ளதை உள்ளதென்று தைரியமாக சொல்லுகிறவன். அவன் பெயர்.மிகாயா என்றான். ஆனால் அவன் உண்மையை அப்படியே கூறுகிறவன் என்றாலும் அவனுக்கு என்னை பிடிக்காது.    அவனை நான் பகைக்கிறேன்.    காரணம்,    அவன் என்னைக்குறித்து நல்ல விஷயங்களையே சொல்லமாட்டான். என்னைக்குறித்து தீமையானவைகளையே கூறுகிறவன் என்றான். (டாக்டர்.புஷ்பராஜ்க்கு குற்றம்சொல்லும் ஆவி இருக்கிறது ஊழியக்காரனின் குற்றத்தையே பார்த்து குறைசொல்லுகிறவன் பிசாசாக இருக்கிறான் என்று (சகோ.மோகன் சி.லாசரஸின்) திருப்பத்தூர் கூட்டணி கூறுகிறதே அதைப்போல இந்த இராஜாவும் மிகாயா என்ற அந்த ஊழியக்காரனைப்பற்றியும் அப்படியே கூறினான்). அதற்கு யோசபாத் ராஜா: இராஜாவே அப்படி சொல்லவேண்டாம் என்றான்.      இப்படி இந்த இராஜா கூறியப்படி மற்றவர்களின் தவறான அபிப்ராயத்தை "அப்படி சொல்லவேண்டாம்"    என்று மறுத்துகூற இப்போது நிறையபேர்கள் இல்லை. 8ம் வசனத்துக்குபின் வாசித்துப்பாருங்கள். ஒருவரை புகழ்த்தி உயர்த்தி ஒரு ஊழியன் பேசினால் அதை ஆதரித்துபேசி அப்படிப்பட்டவர்களை ஊக்குவிக்க ஏராளமான ஊழியர்கள் உண்டு.    இந்த லட்சணத்தில் இவர்கள் எல்லாரும் தங்களை தீர்க்கதரிசிகள் என்றும் ஊழியர்கள் என்றும் கூறிக்கொள்கிறவர்கள். அதுபோலவே அன்றும் எல்லா தீர்க்கதரிசிகளும் நலமானவற்றையே இராஜாவிடம் கர்த்தர் சொன்னதாக கூறினார்கள். கடைசியில் இராஜா கட்டளையின்படி மிகாயா தீர்க்கதரிசியை கூப்பிடபோனவர்கள் மிகாயாவிடம் அரண்மனையில் எல்லாரும் இராஜாவுக்கு சாதகமாக இராஜா விரும்புகிறபடி தீர்க்கதரிசனம் கூறியதை அவனிடம் கூறி நீயும் அப்படியே அந்த ஊழியர்கள் புகழ்ந்ததைப்போல நல்லவற்றை சொல் என்று கேட்டுக்கொண்டார்கள்.

Cross  ஆனால் மிகாயா என்ன பதில் கூறினான் தெரியுமா? என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்றான்.      அரண்மனையில் காணப்படும் அத்தனைபேரும் இராஜா உட்பட எல்லாரும் தன்னை பகைப்பார்கள் அல்லது வெறுப்பார்கள் என்று அறிந்தும் நல்ல பாகத்தையல்ல,      ஆறுதல் செய்தியையல்ல, மக்களை சந்தோஷப்படுத்தும் தாலாட்டும் வார்த்தையை அல்ல,      எச்சரிப்பின் செய்தியையும் சம்பவிக்கபோகும் உண்மையான நிலையையும் அறிவித்தான். தனக்கு ஏற்படும் பின் விளைவுகளைப்பற்றி அவன் பயப்படாமல் கர்த்தர் காண்பித்ததை கூறிமுடித்தான் (வச 17).      அதோடு உங்களிடம் இதுவரை பேசிய ஊழியர்கள் எல்லாரும் பொய்யர்கள் என்றான். பிசாசின் பொய்யின் ஆவி மூலமாக இந்த ஊழியர்கள் யாவரும் பிரசங்கித்தார்கள் என்றான்.    உடனே பொய் தீர்க்கதரிசனத்தை உரைத்த அத்தனை ஊழியர்களுக்கும் மிகாயாமேல் கோபம் மூண்டது.    அதில் ஒரு ஊழியக்காரன் கோபத்தின் உச்சக்கட்டமாக (திருநெல்வேலி பிஷப்பின் கன்னத்தில் குத்திய கிறிஸ்தவர்களைப்போல)    மிகாயாவின் கன்னத்தில் அறைந்தான். உடனே மிகாயா திருப்பி அவனை தாக்காமல் ஊழியக்காரனாகிய தன்னை அவன் அடித்ததால் அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் நேரப்போகும் தேவதண்டனையை தீர்க்கதரிசனமாக கூறினான்.      அவன் கூறியப்படியே மிகாயாவை அடித்தவனுக்கு சம்பவித்தது (வச 24). யாரையும் பயமுறுத்த இந்த சம்பவத்தை இங்கு கூறவில்லை.      அன்பானவர்களே, இப்போதும் மேலே நடந்ததைப்போல்தான் இன்றும் நம் கிறிஸ்தவ சமுதாயத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

Cross  சகோ.D.G.S.தினகரன் மரணத்தின்போது அவரைப் புகழ்ந்து பேசிய அத்தனை பேர்களைக்காட்டிலும் அதிக நெருக்கமாக பழகியவன் நான். அவர்களைக்காட்டிலும் அதிகம் அவரை நேசிக்கிறவன் நான். ஒரே அறையில் சிலமுறை, ஒன்றாய் தங்கி, ஒரே கட்டிலில் படுத்துறங்கிய நாட்களில், பலமுறை நாங்கள் ஒன்றாய் தனித்து உபவாசித்து ஜெபித்த நாட்களில் அவரிடமிருந்து படித்துக்கொள்ளவேண்டிய மிக சிறப்பான ஜெபிக்கும் முறையையும், மணிக்கணக்காக கன்கார்டன்ஸ் இல்லாமல் வேதத்தை வாசித்து தியானித்த முறையையும், ஊழிய பணவிஷயத்தில் அவருடைய உண்மையையும், பாவ சிந்தனை, பாவ வாழ்க்கை இல்லாத, பரிசுத்த ஜீவியம் செய்ய தன்னையும், தன் சரீரத்தையும் காத்துக்கொள்வது எப்படி என்பது போன்ற பல நல்ல விஷயங்களை சகோ.தினகரனிடமிருந்து நான் நேரிடையாக கற்றுக்கொள்ள கர்த்தர் கிருபை செய்தார்.

Cross  அவர் என் குடும்பத்தின்மீது வைத்த மாறாத உண்மை அன்பு கடைசிவரை நீடித்தது என்பதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன். சகோ.தினகரனின் ஊழியத்தைக் குறித்தும் கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் ஜெபிக்க ரூ.2000/-  வாங்கிய இளம்பங்காளர் திட்டத்தைக்குறித்தும் நான் மிகவும் தாக்கி எழுதிய நாட்களில் ஒருமுறை சேலத்தில் ஊழியத்திற்காக குடும்பமாக சகோ.தினகரன் வந்திருந்தார். என் மகன் அப்போது படித்துக்கொண்டிருந்தார். என் மகன் சகோ.தினகரனைக் காண தனியாகபோய் அவர் தங்கியிருந்த நேஷனல் ஓட்டலில் சந்தித்தார். என் பெயரை (Dr.புஷ்பராஜ்) சொன்னவுடனேயே என் மகனை கட்டிதழுவி அறைக்கு கூட்டிக்கொண்டுபோய் பேசிவிட்டு அம்மாவையும், தங்கையையும் நாளை கூட்டிக்கொண்டுவா என்றார். அப்போது நான் இலங்கைக்கு ஊழியம் செய்ய சென்று இருந்தேன். அடுத்தநாள் என் மனைவி,    என் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு நேஷனல் ஓட்டலுக்கு சென்றார்கள். என் பிள்ளைகளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஆளுக்கு 100 ரூபாய் கையில் கொடுத்து தன்மகன் பால்க்கும், மருமகளுக்கும் அவர்களை அறிமுகப்படுத்தி ஜெபித்து அனுப்பிய அந்த மறக்காத அன்பை என்ன சொல்வேன்? அந்த அன்பை மனுஷரில் இப்போது எங்கே காண்பேன்?

Cross  ஆனால் அதேசமயம் ஊழியத்தில் உயர்வு வந்தபோது வசனத்தைவிட்டு அவர் கொஞ்ச கொஞ்சமாக தொடர்ந்து வழிவிலகுவதைக்கண்ட நான் அதை மறுபடியும் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியவில்லையே!  ஆகவே மறுபடியும் அவருடைய வெறுப்புக்குள்ளானேன். எங்கள் இயேசு அழைக்கிறார் ஆரம்ப குழுவினரையே அவர் ஒதுக்க ஆரம்பித்தார். அவரை புகழ்கிறவர்களைமட்டும் அவர் விரும்பினார். அங்குதான் அவருக்கு ஆபத்தும், வீழ்ச்சியும் ஏற்பட்டது. அவருடைய குறைகளை சுட்டிக்காட்ட அவர் அருகில் எங்களைப்போல் யாரும் இல்லை. இப்படியாக சகோ.தினகரனின் வாழ்க்கை, ஊழியம் யாவும் வீழ்ச்சியில் முடிவுற்றது பெரும் துக்கத்தை உண்டாக்குகிறது.      இந்த சூழ்நிலையில் மற்றவர்கள் எல்லாரும் சகோ.தினகரனை புகழ்ந்து புகழ்மாலை சூட்டும்போது, சகோ.தினகரனின் மற்ற பக்கத்தையும் என் வாசகர்கள் அறியவேண்டியது இந்த சூழ்நிலையில் மிக முக்கியம் என்று கண்டேன். இந்த ஜாமக்காரனிலும் எழுதினேன். அவ்வளவே!


Cross  திருநெல்வேலி டையோசிஸ்ஸின் பிரச்சனையில் ஒரு முன்னேற்றமும் இல்லை.    பிரச்சனைக்கு காரணமான இரண்டு குழுக்களும்,    உண்மை கிறிஸ்தவர்களாக மாறும்வரை,      அவர்கள் தங்களுக்குள் கிறிஸ்துவை வரவழைக்கும்வரை அந்த டையோசிஸ்க்கு ஒரு மாற்றமும் உண்டாக வழியில்லை.

டையோசிஸ்ஸின் பல பிரச்சனைகளுக்கு பிஷப் அவர்களின் மனைவி அவர்களும் காரணமாக இருக்கிறார் என்று சபையின் பல குருமார்களும், சபை பெண்கள் ஐக்கியத்தில் உள்ளவர்களும் பரவலாக கூறுவது, முன்பே நான் கேள்விபட்டதுதான்.    தமிழ்நாட்டில் சில டையோசிஸ்களில் பிஷப்மார்களின் மனைவிமார் குருவானவர்களையே அதிகாரம் செலுத்துவதை அறிவேன். சபை ஊழியத்தில் இது நல்லதல்ல.    இதனால் பிஷப் அவர்களுக்கு கெட்டபெயர் நிச்சயமாக வரும்.

Cross  2008 பிப்ரவரி மாத ஜாமக்காரனில் நான் எழுதியதைப்போல பிரச்சனை உண்டாக்கும் எந்த நபருடனும் நட்புக்கொள்ள வேண்டாம். அப்படிப்பட்டவர்கள் கிறிஸ்துவை உடையவர்கள் அல்ல.    உங்கள் ஆத்துமா காப்பாற்றப்பட அவர்களை விட்டுவிலகியே இருங்கள். குருவானவர்களும் மேலேகுறிப்பிட்ட பிரச்சனை உண்டாக்கும் நபர்களை விட்டுவிலகுங்கள். எனக்கு தெரியும் அப்படி அவர்களை விட்டுவிலகினால் அதனால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், நஷ்டங்கள், இடமாற்றம், உங்கள் மனைவி, பிள்ளைகள் வேலை விஷயம், படிப்பு விஷயம் ஆகியவற்றில் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கநேரிடும் என்பதையும் பழிவாங்கப்படுவீர்கள் என்பதையும் நான் அறிவேன்,      என்றாலும் நீங்கள் அவைகளை சகித்து,      அந்த நஷ்டத்தை ஏற்று,      கர்த்தரின் சபைக்காக தியாகம்செய்து கர்த்தரைமட்டும் சந்தோஷப்படுத்தும் ஊழியர்களாக மாறினீர்களானால் உங்கள் ஆத்துமா காப்பாற்றப்படும்.    ஆசிரியர்களுக்கும், உபதேசியார்களுக்கும் இதே ஆலோசனையை கூறுகிறேன்.  தவறான எந்த காரியத்துக்கும்,      ரௌடித்தனமான எந்த காரியத்துக்கும் தயவுசெய்து துணைப்போகாதீர்கள்.

இயேசுவின் சவுக்கு உங்கள் பக்கம் திரும்ப அதிக நேரமாகாது. ஆகவே ஜெபியுங்கள். கண்ணீர்விட்டு ஜெபியுங்கள். ஜெபக்கூட்டங்களில் மட்டுமல்ல, தினசரி உங்கள் தனிஜெபத்தில் உங்கள் டையோசிஸ்க்காக அழுங்கள். நானும் ஜெபிக்கிறேன்.


Cross  10, +2 வகுப்புகளில் தேர்வு எழுதிய நம்முடைய பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்.    அவர்களுக்கு நல்ல ஞானத்தை கொடுத்த கர்த்தருக்கு நன்றி கூறுவோம். நாங்களும் தேர்வு எழுதிய பிள்ளைகளுக்காக ஜெபித்தோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.


கர்த்தரின் பணியில்
டாக்டர்.புஷ்பராஜ்

Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM