இயேசு அழைக்கிறார் என்ற ஸ்தாபனத்தின் ஸ்தாபகரும், பிரபல பிரசங்கியாருமான
சகோ.D.G.S.தினகரன் அவர்கள்
22-2-2008 அன்று சென்னை அப்போல்லோ ஆஸ்பத்திரியில் வைத்திய சிகிச்சை பலனின்றி மரித்தார். அவர் மரிக்கும்முன் சில நாட்களுக்குமுன்பே இனி சிகிச்சை பலனளிக்காது என்று டாக்டர்கள் குழு அறிவித்தனர். இது சகோதரனுக்கு சுயநினைவு உள்ளபோதே சகோதரன் அவர்கள் அறியும்வகையில் அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவருக்கும், மருத்துவம் தோற்றுப்போனதையும் அவர் கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டதையும் விவரித்து டாக்டர்கள் சகோ.தினகரிடமே அறிவித்துவிட்டனர். உடனடியாக செய்யப்பட வேண்டிய பெரும்பாலான முக்கிய பொறுப்புகளை சுயநினைவு உள்ளபோதே முறைப்படிசெய்து ஒப்படைத்து தான் மரித்தபின் தன் குடும்பத்துக்கு அறிவிக்க வேண்டிய, பொதுமக்களும் அறியவேண்டிய அறிவிப்புகளை, தன் ஊழியத்தை தாங்கியவர்களுக்கும், தனக்காக ஜெபித்தவர்களுக்கும், தன்
TV நிகழ்ச்சியை காண்பவர்களுக்கும்
TV மூலமாகவே அதை அறிவிக்கும் வண்ணமாக கைக்கூப்பி அறிவித்து விடைப்பெற்றார். அந்த விடைபெறும் நிகழ்ச்சியை படம்பிடிக்கும்போது தன் மனைவி, மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் அனைவரிடமும் விடைப்பெறும் காட்சியையும் அதோடு சேர்த்து அமைத்துக்கொண்டார். அவர் மரித்தபின் சில நாட்களுக்குமுன் எடுக்கப்பட்ட அந்த விடைப்பெறும் நிகழ்ச்சியை அப்படியே
TVயில் ஒளிபரப்பினார்கள். அது மிகவும் திட்டமிட்ட நல்ல ஏற்பாடாக அமைந்தது. சகோதரனின் இழப்பு மிகப்பெரிய இழப்பு. ஆனால் பல மாதங்களாகவே வியாதியின் வேதனையையும், கஷ்டத்தையும் பல நாட்கள் குடும்பத்தினர் நேரில் கண்டதால் அவர் அனுபவிக்கும் வேதனையிலிருந்து அவர் எடுத்துக்கொள்ளப்பட்டால் நல்லது என்ற எண்ணம் குடும்பத்துக்கு உண்டாகும்நிலை ஏற்பட்டதால், அவரின் மரணத்தை குடும்பத்தினரால் தாங்க முடிந்தது. கணவனை இழந்த
சகோதரி.ஸ்டெல்லா தினகர் அவர்களுக்கும், தம்பி.பால் தினகரனுக்கும் மருமகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும், உற்றார் உறவினர் அனைவருக்கும் குறிப்பாக சகோதரன்.தினகரன் அவர்களை நேசிக்கும் அவரின் அனுதாபிகள் அனைவருக்கும் கர்த்தர்தாமே ஆறுதலை அளிப்பாராக. என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும், ஜாமக்காரன் வாசகர்கள் சார்பிலும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். |