|
| சகோ.தினகரனின் மரணத்துக்குமுன் |
இந்த உலகத்திலுள்ள எல்லாருக்கும் தாம் ஒருநாள் மரிப்போம் என்று பொதுவாக அறிவர். ஆனால் எப்போது
மரணம் சம்பவிக்கும் என்று அறியமாட்டார்கள். ஆனால் சகோ.தினகரன் அவர்களுக்கோ தன் சரீர உறுப்புகள் இருதயத்திலிருந்து, கிட்னிவரை பலமுறை புதிதாக பொருத்தியும் பிரயோஜனமற்று, ஒவ்வொன்றாய் செயலிழப்பதை, அங்கு வைக்கப்பட்டுள்ள சிறப்புகருவிகள் காட்டுகிறதை வைத்துமட்டுமல்ல, தனக்குள் ஏற்படும் செயலிழப்பின் தாக்கம்மூலம் தெளிவாக அறிந்துக்கொண்டார். முடிவாக நுரையீரல் பாகத்தின் நுண்ணிய ஓட்டைகள் அடைப்படுவதையும் மூச்சு இழுத்துவிடமுடியாமல் போனதையும் தானே உணர்ந்து தான் உலகவாழ்வின் கடைசி நிமிடத்துக்குள் வந்துவிட்டோம் என்பதை உணர்ந்தார். உடனே வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது செயற்கை சுவாசம்மூலம் நுரையீரலை இயங்கவைத்தனர். ஆனால் அவரின் உயிர் அவரைவிட்டுபோய் பலமணிநேரங்களாகிவிட்டது என்றும், சிலநாட்களும் கடந்துவிட்டது என்றும் அப்போல்லோ ஆஸ்பத்திரியிலிருந்து எனக்கு வந்த செய்திகள், முகம் அறியாத மருத்துவர்கள், செவிலியர்கள் மூலமாக எனக்கு தகவல்களாக வந்து கொண்டிருந்தது. இதை அறிந்த நான் என் மனதிற்குள் ஏற்பட்ட எந்த மாற்றத்தையும் முகத்தில் உண்டான கவலையையும் என் வீட்டாருக்கும் காட்டாமல் என் வீட்டில் நான் மற்றவர்களுக்குமுன் எப்போதும் போலத்தான் காணப்பட்டேன். எனக்கு வந்துக்கொண்டிருந்த செய்திகள் ஒருவேளை தவறானதாகவும் மிகைப்படுத்தப்பட்டதாகவும்கூட இருக்கலாம். ஆகவே சகோதரனின் அப்போதையை நிலைமைகளைப் பற்றிய செய்திகளை என் குடும்பத்தினருக்குக்கூட நான் அறிவிக்கவில்லை. ஆனால் எனக்குமுன் அமெரிக்காவிலுள்ள மிக முக்கிய நபர்களுக்கும், குவைத்திலுள்ள நபர்களுக்கும் சகோதரனைப்பற்றிய
அப்போல்லோ ஆஸ்பத்திரி செய்திகள் போய்க்கொண்டேயிருந்தன. அமெரிக்காவிலிருந்து எனக்கு வந்த செய்தியையும், அப்போல்லோ ஆஸ்பத்திரியிலிருந்து எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியையும், இவர்களோடு, சென்னையில் உள்ள பிரபல அரசியல்வாதி ஒருவர் எனக்கு அனுப்பிய செய்திகள் யாவையும் ஒன்றுப்படுத்தி
சகோ.தினகரன் பிப்ரவரி 20ம் தேதிக்கு சில நாட்களுக்கு முன்பே மரித்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினேன். ஆனால் அதிகாரப்பூர்வமான மரணசெய்தி சகோ.தினகரன் வீட்டிலிருந்து இன்னும் வெளி உலகுக்கு அறிவிக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் சகோ.தினகரன் அவர்களின் மூச்சு அடங்கவும், சுயநினைவு இழக்கவும் சுமார் 4 நாட்கள் இருக்கும்போது
Dr.புஷ்பராஜ் ஆகிய நான் என் தனிமையில், நான்
1974ம் வருடத்துக்கு முன் குறிப்பாக காருண்யா கல்லூரிப்பற்றிய வேதனையுள்ள விளம்பரம் தொடங்குவதற்குமுன், இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால் சகோதரனின் முதல் அறிவிப்பான
இளம்பங்காளர் திட்டம் என்னும் பிழையான திட்டம் அறிவிக்கப்படும் முன்பு வாழ்ந்த அந்த ஆரம்பகால தினகரனாகிய
என் இனிய நண்பரும், என் குடும்ப நண்பருமான சகோ.D.G.S.தினகரன் என்ற அந்த
மாபெரும் மனிதரை நினைத்து என் மனம் ஏங்கினது. உயிர் பிரிய இன்னும் 4 நாட்கள் இருந்தபோது கர்த்தரோடு கெஞ்சினேன். நான் கெஞ்சியது அவர் சுகமாகவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, இந்த ஆபத்தான கடைசி கட்டத்தில்
தன் ஆத்துமாவையும், 1974ம் வருடத்துக்குபின் தான் தொடங்கிய தவறான ஊழியத்தில் நடப்பித்த பல தவறுகளையும், செத்துப்போனவர்களோடு பேசுவதைபோன்ற பலதவறான
போதனைகளைக் குறித்தும் காருண்யா தொடங்கிய தவறைக்குறித்தும் சகோதரன் அவர்கள் கர்த்தரிடம்
மன்னிப்பு கேட்டிருக்கவேண்டுமே! அப்படி ஜெபித்திருப்பாரா? என்ற
மனஏக்கம் என்னுள் வந்தது! என்றாலும் என்ன பிரயோஜனம் அவர் அத்தியாயம் முடிந்துப்போய் விட்டதே!? சகோ.தினகரன் அவர்கள் உயிரோடு இருந்தபோது அந்த ஆரம்ப காலத்திலிருந்தே தனிப்பட்டமுறையில்
மதிக்கும், கனம்பண்ணும் ஒருவர் உண்டு. அவர்தான் சகோ.தினகரனின் ஆவிக்குரிய
தகப்பனும், தேவமனிதனுமான அப்போஸ்தல சபை ஸ்தாபகரும், பாஸ்டருமான பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் ஆவார்கள். அவர் இப்போது கர்த்தரிடம் சென்றுவிட்டார். பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் என்னிடம் தனிப்பட்டமுறையில்
நேரில் கூறியதும், அவர் எனக்கு எழுதிய கடிதத்தின் வாசகங்களும் இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது. அக்கடிதத்தை இதுவரை நான் வெளியிடவில்லை - அக்கடிதத்தை வெளியிடவேண்டாம் என்று அவர் வீட்டிலிருந்து எனக்கு கடிதம் வந்தபடியால் இதுவரை வெளியிடவில்லை. அக்கடிதத்தை அப்படியே இப்போதும் பாதுகாத்து வைத்துள்ளேன். சகோ.தினகரனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்று அப்போல்லோ ஆஸ்பத்திரியிலிருந்து செய்திகள் வந்தபோது, உடனே கைக்கூப்பி சகோ.தினகரனின் ஆத்துமாவுக்காக தேவனிடம் விண்ணப்பித்தேன். சகோ.தினகரனுக்கு கிடைத்த அந்தக்கடைசி 18 நாட்கள் யாருக்கும் கிடைக்காத நாட்கள். சகோ.தினகரனுக்கு கிடைத்த அந்த நாட்கள் அவர் தன்னை
பரிசோதிக்க கிடைத்த கடைசியான கிருபையுள்ள சந்தர்ப்பம் ஆகும். அவர் என்ன அறிக்கை செய்து ஜெபிக்கவேண்டும் என்பதை குறித்து நானும், பாஸ்டர்.சுந்தரம் அவர்களும், பல வருடங்களுக்கு முன்பே (பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் உயிரோடு இருக்கும்போது) (இப்போதுள்ள பாஸ்டர்.சாம் சுந்தரம் அல்ல) நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி பகிர்ந்துக்கொண்டு பாரப்பட்டோமோ அதையே அன்று ஜெபத்தில் குறிப்பிட்டு ஜெபித்தேன். ஆனால் எங்கள் பழைய நண்பரும், சகோதரருமான சகோ.தினகரன் அவர்கள் மரித்துவிட்டார் என்பதை
2008 பிப்ரவரி மாதம்
20ம் தேதிக்கு முன்பே அறிந்தேன். அதன்பின் அவருக்காக ஜெபிப்பதை நிறுத்திக்கொண்டேன். |
| நடிகர்.ரஜினிகாந்தின் அர்த்தமுள்ள பேச்சு |
அவர் மரித்தபின் அவர் சரீரத்துக்கு மரியாதை செய்ய வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திரு.ரஜினிகாந்த் அவர்களாகும். ரஜினிகாந்த் அவர்கள் கட்டிய அவர் சொந்த பிரம்மாண்டமான, அரண்மனை போன்ற புதிய வீட்டை சகோ.தினகரனுக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார். அந்த வீட்டில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற நியான் விளக்கு 24 மணிநேரமும் எரியவேண்டும் என்ற கன்டிஷனுடன் சகோ.தினகரனுக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.
சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் அந்த சினிமா நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் சகோ.தினகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின், கூறிய வார்த்தை மிகவும் கருகலானது.
சகோ.தினகரன் எல்லாருக்காகவும் ஜெபித்தார். ஆனால் அவர் தனக்காக ஜெபிக்கவில்லை. அதுதான் எனக்கு (ரஜினிகாந்திற்கு)
மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்றார். (ஆதாரம்: இயேசு அழைக்கிறார். மார்ச் 2008)
|
| இப்போதுள்ள அவர் ஆத்மா எங்கே போயிருக்கும்? |
இது ஆயிரக்கணக்கான ஜாமக்காரன் வாசகர்களின் கேள்வியாக இருந்தது. இந்த கேள்விக்கேட்டு பிரபல ஊழியர்கள், விசுவாசிகளிடமிருந்து எனக்கு வந்த கடிதங்கள் ஏராளம்! தொலைப்பேசியில் அந்த விவரத்தைப்பற்றி என்னிடம் கேட்டவர்கள் ஏராளம்! என்னவோ என் வீட்டில் மரணம் நடந்தது போல, என் வீட்டுக்கு போன் செய்து மரணவிவரம் கேட்டு விசாரித்துவந்த தொலைப்பேசி விசாரணைகள் கடிதங்கள் மூலம் வந்த விசாரிப்புகள், ஏராளம்! ஏராளம்!! இப்போது அவர் ஆத்துமா எங்கிருக்கும் என்பதற்கான பதில் சகோ.D.G.S.தினகரன் அவர்களுக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரியும். நானோ, நீங்களோ, அவர் குடும்பத்தினரோ, அவரவர் ஆவிக்குரிய நிலைமையின் அடிப்படையில் மரித்த சகோதரனின் ஆத்துமாவின் இப்போதுள்ள நிலையைப்பற்றி யூகிக்கலாம். ஆனால் வெளியே கூறக்கூடாது. அப்படி கூறினால் அது நம்முடைய சொந்தத்தீர்ப்பாக மாறிவிடும். ஆகவே யாரும் யாரைக்குறித்தும் தீர்ப்புகூற இயலாது. அப்படியே தீர்ப்பு கூறவும் கூடாது.
சகோ.தினகரனுக்காக தேவனைத்துதிக்கிறேன்.
சகோ.தினகரனின் ஆரம்பகால அற்புதமான ஊழியங்களுக்காக தேவனைத் துதிக்கிறேன்.
சகோ.தினகரனின் ஆரம்பகால ஜெபவாழ்க்கைக்காக தேவனைத் துதிக்கிறேன்.
சகோ.தினகரனின் ஆரம்பகால எளிமையான வாழ்க்கைக்காக தேவனைத் துதிக்கிறேன். |
சகோ.தினகரன் அவர்களோடு ஆரம்பக்காலத்தில் நானும், அவரும் தமிழ்நாடு அரசாங்க திருவள்ளுவர் துரிதபஸ்ஸில் பிரயாணப்பட்டு திருநெல்வேலியில் இறங்கி, டவுன்பஸ்ஸில் ஏறி
சுரண்டையில் உள்ள அவருடைய பழையகால உறவினர்களையும், நண்பர்களையும் வீடுவீடாய் சந்தித்ததையும், இரண்டு நீண்ட பெஞ்சுகளை ஒன்றாக சேர்த்து இருவரும் ஒன்றாக இரவுபடுத்த அந்த எளிமையான படுக்கையின் காட்சியையும், சகோதரரின் அந்த எளிமையான ஆரம்பகால வாழ்க்கையையும் இப்போதும் நினைத்து தேவனைத்துதிக்கிறேன். நாங்கள் இப்படி அடிக்கடி பஸ்ஸில் பயணப்படும்போதெல்லாம் இரவு சுமார் 1 மணிக்கு மதுரை ரோட்டின் ஓரமுள்ள
கையேந்திபவன் என்று அழைக்கப்படும் சிறிய இட்லிகடையில் சுடசுட இட்லியும், கொத்து புரோட்டாவும் தட்டோடு கையில் வாங்கி நாங்கள் இருவரும் நின்றுக்கொண்டே சாப்பிட்ட அந்த நாட்களை நினைத்து தேவனைத்துதிக்கிறேன். அவர்
State Bank விஷயமாக சேலம் வந்தபோது, சேலம்
இரண்டாவது அக்ரஹாரம் போகும் வழியிலுள்ள தெருவில் வில்வாத்திரி ஓட்டலின் சமீபமுள்ள மிக
சாதாரண லாட்ஜில் (இப்போது அந்த லாட்ஜ் அங்கில்லை) நாங்கள் இருவரும் ஒரு இராத்திரி மட்டும் தங்கின நாளையும், அன்று என்னுடைய இருசக்கர மோட்டார் வாகனமாகிய
புல்லட்டில் அவரை பின்னால் உட்காரவைத்து பல இடங்களுக்கு அவரைக் கூட்டிச்சென்று, அலுவலக வேலையாக உள்ள சந்திப்பு முடிந்தவுடன் நானே,
மேட்டூர் என்ற ஊரிலுள்ள அவர் பேங்க்வீட்டில் கொண்டுபோய்விட்டுவிட்டு, நான் என் ஆஸ்பத்திரிக்கு திரும்பின நாட்களையும் நினைக்கிறேன். இவைகள்
1971ம் வருடம் நடந்த நிகழ்ச்சியாகும்.
1971ல் உபவாசத்துக்காக அவர் என் வீட்டுக்கு வந்தபோது, என் வீட்டில்
மின்சாரம் இல்லாத அந்த நாட்களில் ஜன்னல் இல்லாத என் படுக்கையறையில் கட்டிலில் முழங்காலிட்டவாரே மணிக்கணக்காக ஜெபித்த அன்றைய அந்த தேவதாசனை நினைத்துப்பார்க்கிறேன். என் தாய் என்னிடம் ஒரு
பனைஓலை விசிறி கொடுத்து அந்த தம்பி(தினகரன்)யிடம் கொடுப்பா உஷ்ணத்தால் மிகவும் கஷ்டப்படுகிறார் என்று என் தாய் அன்று அவருக்கு அன்புடன் செய்த உபச்சாரத்தை சந்தோஷத்துடன் அவர் ஏற்றுக்கொண்டார். அன்றைய உண்மையான அந்த
தேவபக்தனை நினைத்துப்பார்க்கிறேன். அந்த நிகழ்ச்சிகளை, அந்த சம்பவங்களை சகோ.தினகரன் கடைசிவரை மறக்கவில்லை என்பதற்கு அடையாளமாக அநேக ஆண்டுகள் கழித்து சகோ.தினகரன் அவர்கள்
Bank-ல் கிரேடு-2 ஆபீசராக மிகப்பெரிய பதவி உயர்வு பெற்று 24 மணி நேரமும் அவர் ஏர்கன்டிஷனில் வாழ்ந்துக்கொண்டிருந்த காலம் அது. அப்போது ஒருநாள் திடீரென்று தன் அலுவலக விஷயமாக சேலம் வந்தபோது எதிர்பாராத நேரத்தில் திடீர் என்று டாக்சியில் என் வீட்டுக்கு வந்து, என் அம்மாவிடம் நான் அன்று ஓய்வெடுத்து உபவாசித்து ஜெபித்த
அந்த அறையை பார்க்கவேண்டும் என்று கேட்டு அந்த குறிப்பிட்ட அறைக்குள் சென்று பார்த்து, அந்த அறையில் நின்று ஜெபித்த அந்த எளிமையான
அன்பு தினகரனை நினைத்து நினைத்து தேவனைத்துதிக்கிறேன்.
சகோ.தினகரன் அவர்கள் சென்னைக்கு மாற்றலாகியபின் எப்போதெல்லாம் என்னுடன் இணைந்து ஜெபிக்கவேண்டும் என்று சகோ.தினகரனுக்கு தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் தொலைப்பேசியில் எனக்கு அறிவிப்பார். நானும் லீவ் எடுத்து சேலம் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்க, அவர் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலம் வந்தவுடன், சேலம் ஜங்ஷன் அருகேயுள்ள
துவாரஹா ஹோட்டல் என்ற பெயர்கொண்ட ஓட்டலில் (இப்போது இந்த ஓட்டலும் இடிக்கப்பட்டுவிட்டது)
ஏர்கன்டிஷன் அறையை வாடகைக்கு எடுத்து நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டு சிலமணிநேரங்கள் நாங்கள் ஒன்றாய் இணைந்து ஜெபித்து அன்று மாலையே அவர் கோவை எக்ஸ்பிரஸ்ஸில் சென்னை திரும்பிய அந்த தினகரனை நினைத்து தேவனை இப்போதும் துதிக்கிறேன்.
ஒருமுறை
BYM மிஷனரி ஸ்தாபகரும், வெல்லுர்
CMC ஆஸ்பத்திரி என்ஜினியருமாயிருந்த சகோ.R.ஸ்டான்லியின் மனைவி
Dr.லில்லியின் ஸ்டான்லி,M.B.B.S,DCH., அவர்கள் மேட்டூரில் சகோ.தினகரன் வழக்கமாக நடத்தின புதன் ஜெபக்கூட்டத்துக்கு வந்திருந்தனர். தனியாக சகோ.தினகரனிடம் ஜெபித்துவிட்டு வெளியே வந்தபோது சகோதரி
Dr.லில்லியன், சகோ.தினகரனைப்பற்றி கூறியது அவருக்கு பயங்கர
X-Ray Eye (எக்ஸ்ரே கண்கள்) அப்படியே உள்ளத்தின் நிலைகளை கூறிவிட்டாரே! என்று கூறி ஆச்சரியப்பட்டார். அந்தக்காலத்தில் கர்த்தர் சகோதரன்.தினகரனை அத்தனை அற்புதமாக உபயோகப்படுத்தினார் என்பதற்காக இதை குறிப்பிடுகிறேன்.
அன்றைய நாட்களில் எப்போதெல்லாம்
உபவாசம் எடுத்து ஜெபிக்கவேண்டும் என்று சகோ.தினகரனுக்கு தோன்றுகிறதோ அப்போதெல்லாம் தன் மனைவி சகோ.ஸ்டெல்லா தினகரன் அவர்களுடன் சேலம் வந்து, என்னையும் உடன் அழைத்து
சேலம் ஏற்காடுமலையில் உள்ள காவேரி பீக் எஸ்டேட்டில் உள்ள கெஸ்ட் ஹவுசில் தங்கி
காப்பி செடிகளின் மறைவில் நாங்கள் தனித்தனியாக ஜெபித்த நாட்களை நினைவுக்கூர்ந்து அந்தக்கால சகோ.தினகரனுக்காக தேவனைத்துதிக்கிறேன்.
அதன்பின் உபவாசித்து ஜெபிக்க நாங்கள் இடத்தை மாற்றினோம்.
ஜோலார்பேட்டை அருகேயுள்ள திருப்பத்தூர் ஆஸ்ரம அறைகளை அவர் தெரிந்தெடுத்தார். அப்போது அங்கிருந்த
ஜெயா அண்ணன், விக்டர் அண்ணன், தொண்டைமான் அண்ணன் ஆகியவர்கள் எங்களுக்காக அறைகளை ஆயத்தம் செய்து உதவினர்கள். இங்கு நாங்கள் செல்லும்போதெல்லாம் அவருடைய மனைவியும், என் மனைவியும் எங்களோடு சேர்ந்து உபவாசஜெபத்தில் பங்குக்கொள்வார்கள். அன்று டாக்டர்.பேட்டன், டாக்டர்.ராஜா சவுரிராயன் அவர்களும் உயிருடன் இருந்தனர். எங்கள் உபவாசம் முடித்து அந்த டாக்டர்களுடன் கீழே தரையில் உட்கார்ந்து சாப்பிட்டோம். அப்போது தையிலையிலும், அலுமினிய பிளேட்டிலும் அரிசிகஞ்சி, தேங்காய் துவையலும் சாப்பிட்ட அந்த அனுபவம் விவரிக்க இயலாது. அந்த நாட்களில் வேதத்தின் பல ஆழமான இரகசியங்களை நாங்கள் ஒருவருக்கொருவர் மணிக்கணக்காக பகிர்ந்துக்கொள்வோம்.
ஒருமுறை
FMPBயின் முதல் மிஷனரியாக என்னோடு வந்த சகோ.ஹேரிஸ் ஹில்டன், காடையாம்பட்டியில் உள்ள சகோ.வாசு என்ற சகோதரர்கள் என்னிடம் வந்து நீங்களும் தினகரனும் அடிக்கடி
திருப்பத்தூர் சென்று உபவாசிக்கிறீர்களே எங்களையும் அழைத்துசெல்லுங்கள் என்று கேட்க, அவர்களையும் ஒரே ஒருநாள் எங்களுடன் சேர்த்துக்கொண்டோம். அந்த ஜெபநாட்கள் இனிமையானது.
|
சகோ.தினகரன் அவர்கள் ஊழியத்தில் நான் டாக்டர் என்ற முறையில் கண்ட
முதல் அற்புதத்தை நினைத்துப்பார்க்கிறேன். தூத்துக்குடி டாக்டர்.அம்புரோஸ் என்பவரின் தகப்பனார்
தலைமையாசிரியராக இருந்து ரிட்டயர்ட் ஆனவர். எலும்பு(TB)வியாதியால் பாதிக்கப்பட்டு அவரின்
கால் எலும்பின் மத்திய பாகத்தில் எலும்பு அரித்துப்போய்விட்டது. அந்தக்காலை வெட்டியெடுக்க டாக்டர்கள் ஆலோசனை கொடுத்தபின் சகோ.தினகரன் அவர்களைப்பற்றி அந்த தலைமையாசிரியர் கேள்விப்பட்டு ஒரு போஸ்ட்கார்டில் (அன்று போஸ்ட்கார்ட் விலை 10பைசா) தன் நிலையை எழுதி ஜெபிக்க கேட்டுக்கொண்டார்.
சகோ.தினகரன் வீட்டில் ஒரு ட்டிரே டேபிளின்மேல் இருக்கும் அந்த ட்டிரேயில் ஜெபிக்க வந்த கடிதங்கள் வரிசையாக சாய்த்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அன்று ஒருநாள் திடீர் என்று அதிலிருந்து ஒரு போஸ்ட்கார்டுக்கு பதில் கடிதம் எழுதினார். அது அந்த தலைமை ஆசிரியருக்கு எழுதப்பட்ட பதில் கடிதம் ஆகும். அதில் உங்கள் எலும்பு கூடிவிட்டது, கர்த்தர் உங்களை சுகமாக்கி ஒருவாரம் ஆகிறது, எழுந்து நடவுங்கள், தேவனைத்துதியுங்கள் என்று மட்டும் சகோ.தினகரன் எழுதியிருந்தார். கடிதம் வாசித்தவுடன் தன் மகனாகிய டாக்டரை அழைத்து இதோ கடிதத்தைப்பார், கர்த்தர் என்னை சுகமாக்கி ஒருவாரம் ஆகிறதாம் என்னை நடந்து பார்க்க எழுதியுள்ளார். என்னை பிடித்துக்கொள் நான் நடந்து பார்க்கிறேன் என்றார். டாக்டர் மகனுக்கு நம்பிக்கையில்லை. அப்பாவின் ஆசைக்காக அவரை நடக்கவைத்தார். என்ன ஆச்சரியம்! யாருடைய தயவும் இல்லாமல் அவர் நடந்தார். உடனே மகன் அதை நம்பாமல், மறுபடியும் அவர் காலை எக்ஸ்ரே எடுத்தார். பழைய எக்ஸ்ரேயுடன் ஒப்பிட்டுப்பார்த்தபோது இரண்டு எலும்புகளுக்கும் மத்தியில் கிருமியால் அரிக்கப்பட்ட இடம் இப்போது
ஒன்று கூடியிருந்தது. அன்று அவரின் கால் வெட்டப்படவில்லை. இந்த
பெரிய அற்புதத்தால்தான் தூத்துக்குடியில் முதல் பெரிய கன்வென்ஷனை தாங்களே பொறுப்பெடுத்து சபையுடன் இணைந்துசெய்கிறோம் என்று அவர்கள் சகோ.தினகருக்கு எழுத, உடனே சகோ.தினகரன் என்னை தொலைப்பேசியில் அழைத்து தூத்துக்குடிக்கு நேரில் போய்வரச்சொன்னார். கூட்ட ஏற்பாடுகளை செய்ய
CSI சபையில்பேசி கமிட்டி கூடவைத்து கூட்ட ஏற்பாடுகளைச்செய்து திரும்பினேன்.
அன்றைய நாட்களில் சகோ.தினகரன்
பெந்தேகோஸ்தே சபையை சேர்ந்தவர் என்பதை அறிந்து பல
CSI சபைகளில் அவரை உபயோகிக்க விரும்பவில்லை. அந்த எண்ணங்களை போக்க கூட்டம் நடக்க இருந்த ஒவ்வொரு ஊரின்
CSI சபையின் குருவானவர்களையும், பொறுப்பாளர்களையும் சந்தித்து அவரைப்பற்றிய தவறான எண்ணங்களை நீக்க, அவர் உபதேச விஷயங்களை பேசமாட்டார் என்று உறுதிக்கூறினேன். |
(இந்த இடத்தில் சகோ.தினகரனின் சீஷனான சகோ.மோகன் சி.லாசரஸ் தன் கூட்டத்தில்
எயிட்ஸ் வியாதி, சர்க்கரை வியாதி சுகமாவதை என் பக்கத்தில் நிற்கும் இயேசு காண்பிக்கிறார். சுகமான அந்த நபரை அவர் மேடைக்கு வாருங்கள் என்று
பெயரை குறிப்பிட்டு அழைத்து பொய்யான தகவலை கூறினார். எயிட்ஸ் வியாதி அந்த நபருக்கு
சுகமாகவில்லை - சர்க்கரை வியாதி சுகமாகவில்லை. இதை இங்கு ஏன் ஞாபகப்படுத்துகிறேன் என்றால் தூத்துக்குடியில் சகோ.தினகரன் மூலமாக
எலும்பு சுகமடைந்த சாட்சியில் பழைய எக்ஸ்ரே - புது எக்ஸ்ரே மூலம் சுகமானது உறுதிப்படுத்தப்பட்டு ஆண்டவர் நாமம் மகிமைப்பட்டதே. அதைப்போன்ற
ஆதாரம் மோகன் சி.லாசரஸ்ஸால் கொடுக்கமுடியாமல்போன அந்த பொய்சாட்சி இப்போதும் நினைவுக்கு வருகிறது).
|
அன்றைய காலங்களில் சகோ.தினகரன் தன்னுடைய
தசமபாக
காணிக்கையை தூத்துக்குடியிலுள்ள
V.V.D Roadடில் உள்ள பாஸ்டர்.மத்யாஸ் என்பவருக்கு மாதமாதம் அனுப்புவார். அந்த பாஸ்டர் என்னை வைத்து பல கன்வென்ஷன்களை நடத்தியுள்ளார். பாஸ்டர்.அம்புரோஸ் என்பவர் தூத்துக்குடியில் முழு
இரவுஜெபம் நடத்த என்னை அழைக்கும்போது பாஸ்டர்.மத்யாஸ் என்னை வைத்து கன்வென்ஷனையும் நடத்திவிடுவார் (இப்போது பாஸ்டர்.மத்யாஸ் அவர்கள் இறந்துப்போனார்) பாஸ்டர்.மத்யாஸிடம் சென்று சகோ.தினகரன் கூறிய விவரம் அறிவித்து,
எலும்பு அற்புதம் நடந்த தலைமையாசிரியரை சந்தித்தேன். அதன்பிறகு அனைத்து சபைகளும் இணைந்து சகோ.தினகரன் கூட்டத்தை மைதானத்தில் நடத்தினார்கள். சகோ.தினகரனின் கூட்டம் அங்கு மிகச்சிறப்பாக நடந்தது. கர்த்தர் அந்த கூட்டங்களில் பெரிய காரியங்களைச் செய்தார். அங்கு இரவுகூட்டம் முடிந்து சகோ.தினகரன் அவர்கள் ஜெபத்தை முடிக்க இரவு
1.30 மணியானது.
காருண்யா கல்லூரி தொடங்கும்முன் சகோ.தினகரால் நடந்த அன்றைய அற்புதங்கள் எல்லாம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவால் நடத்தப்பட்டதாகும்.
அதன்பின் நடந்ததாக கூறும்
அற்புதங்களைக்குறித்து எழுத..................... என் மனம் விரும்பவில்லை.
சகோ.தினகரன் அவர்களின் மரணத்தால் வேதனைடைந்திருக்கும் அன்பு
சகோதரி.ஸ்டெல்லா தினகரன் அவர்களுக்கு நானும், என் மனைவி.வதனி புஷ்பராஜ், என் மகன்.Dr.சாமுவேல், மகள்.ஷீபா யாவரும் சேர்ந்து அவர்களின் வேதனையில் குடும்பமாக பங்குக்கொள்கிறோம். சகோதரியும், சகோதரன்.தினகரனும் எத்தனை அன்யோன்யமாய்,
அன்பான தம்பதிகளாய், இணைந்து ஜெபிக்கும் ஆவிக்குரிய தம்பதிகளாய், சாட்சியுள்ள குடும்ப வாழ்க்கை நடத்தியதை நாங்கள் அறிவோம். சகோ.தினகரன் அவர்களின் தாயாருக்கு பலவருடங்களாக வலிப்புநோயால் (Histirical
Fits) அவதிப்பட்டனர். அதனால் வீட்டிலும் பிரச்சனை. ஆகவே சகோ.தினகரனின் தகப்பனாரும்-தாயாரும் பல வருடங்கள் தனியாகவே வாழ்ந்தனர். சென்னைக்கு
IITயில் உள்ள பேங்கிக்கு மாற்றலாகிய பிறகுதான் பெற்றோரை தன்னோடு வைத்துக்கொண்டார்.
மாமியாருடன் சேர்ந்து வாழ்ந்தபோது ஸ்டெல்லாதினகர் அவர்கள் சகித்த விஷயங்கள் ஏராளம். தன் கணவராகிய
சகோ.தினகருக்காக மாமியாரை சகித்த சகோதரி.ஸ்டெல்லா அவர்களின் சாட்சியுள்ள சகல விஷயங்களையும் சகோ.தினகரன் பகிர்ந்துக்கொண்டதை இப்போதும் நினைக்கிறேன். அந்த சம்பவங்களை சகோதரன்.தினகரன் அவர்கள் எங்களோடு பலமுறை பகிர்ந்துக்கொண்டுள்ளார். கர்த்தரே சகோதரி.ஸ்டெல்லா தினகருக்கு ஆறுதலையும், பெலத்தையும், சமாதானத்தையும் அருளுவாராக. ஆமென். சகோ.தினகரனைவிட வேதவசன உபதேசங்களையும், வசன ஆழங்களையும் சகோதரி.ஸ்டெல்லா அவர்கள் அன்றே மிக நன்றாக அறிவார். சகோ.தினகரன் அவர்கள்
ஆறுதல் சம்பந்தமான வசனங்களை மட்டுமே அதிகம் வேதத்திலிருந்து தியானிப்பார். ஆனால் சகோதரி.ஸ்டெல்லா தினகருக்கு வேதஞானம் அதிகம் உண்டு.
சகோதரி.ஸ்டெல்லா தினகர் அவர்கள்
முதன்முதல் பொதுகூட்டத்தில் பெண்களுக்காகவே பேச வற்புறுத்தி பிரசங்கிக்க பழக்கப்படுத்தியது
Srivilliputhur என்ற ஊரில் நடந்த கூட்டத்தில் ஆகும். இதற்காக தான் தன்மனைவியை பேசவைக்கபோகிறேன் என்பதை 4 நாட்களுக்கு முன்பே என்னிடம் கூறி நாங்கள் இருவரும் அதற்காக ஜெபித்தோம்.
|
| மற்றும் சில அனுபவங்களை நினைத்துப்பார்க்கிறேன் |
சகோ.தினகரன் தம்பதியினருடன், நானும், என் மனைவியும்
1971ம் வருடம் மூணாறு என்ற மலைநாட்டு ஊழியத்துக்கு ஒரே காரில் பயணப்பட்டுப்போன நாட்களை நினைவுக்கூறுகிறோம். என் மகன்
Dr.சாமுவேல் அப்போது குழந்தையாக இருந்தார். சகோ.தினகரன் தன் மடியிலேயே அவனை வைத்துக்கொள்வார். என் பிள்ளைகளை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர் பிள்ளைகளை கொஞ்சும்போது வழக்கமாக அவர் உபயோகிக்கும் வார்த்தைகளை இப்போதும் அடிக்கடி நினைவுக்கூறுகிறோம். அந்த அன்பு கடைசிவரை அவருக்கு மாறவில்லை.
தம்பி.பால் சிறுபிள்ளையாக இருந்தபோது அவருக்கு எற்பட்ட ஒரு வியாதி காரணமாக சகோ.தினகரன் என்னிடம் ஒருநாள் அதிகாலை பகிர்ந்துக்கொண்டார். உடனே நானும் நேரில்வந்து மகன்.பாலை பரிசோதித்து பார்த்தேன். உடனே என் நண்பரும், அன்று சேலம்
Govt Hospital (DMOவாக) உயர் அதிகாரியாக பணிபுரிந்த
Dr.செல்வராஜ் என்பவரிடம் விவரங்களை பகிர்ந்துக் கொண்டு அவரின் சிபாரிசின்பேரில் ஒருகுறிப்பிட்ட பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும்வேண்டி நாங்கள் தனி கார் எடுத்து பலமைல்கள் பிரயாணம் செய்து மகன்.பாலை பரிசோதித்து மருத்துவம் செய்தோம். அன்று அதை கண்டுபிடிக்காமல் போயிருந்தால் அந்தவியாதியை சுகம் ஆக்கியிருக்க முடியாது. இன்று தம்பி.பாலுக்கு நல்லசரீரத்தை கர்த்தர் கிருபையாக அருளினார் என்றால் அன்று ஆரம்பத்திலேயே அளிக்கப்பட்ட சிகிச்சையே காரணமாகும். அன்று நான் எடுத்த அந்த ஆரம்ப முயற்சியும், உதவியும் தம்பி.பால் மறந்திருப்பார். ஆனால் அவரின் தாய் சகோதரி.ஸ்டெல்லா தினகரன் ஒருக்காலும் மறந்திருக்கமாட்டார்.
அன்று நான் அதை தக்க சமயத்தில் கண்டுபிடித்து வைத்தியம் செய்ய ஏற்பாடு செய்ததை சகோ.தினகரன் அவர்கள் பலவருடங்கள் மறக்காமல் அடிக்கடி என்னிடம் கூறி, ஞாபகப்படுத்தி நன்றியுடன் தேவனைத்துதித்துள்ளார்.
தம்பி.பால் தினகரனும், அவர் மனைவியும் மேலே நான் எழுதிய, மேலும் நான் எழுதாத வேறு பலவிஷயங்கள் எதுவும் அறியமாட்டார்கள் என்றாலும் அவர்களையும், கர்த்தர் இந்த
மரணம்மூலம் புதிய ஆவிக்குரிய வசன அடிப்படையில் புதிய தீர்மானங்களை எடுத்து ஊழியத்தை புதிய
சரியான பாதையில் தேவவசனத்தின்படி நடந்துசெல்ல அவர்களை ஆவியானவர் நடத்தவேண்டும் என்று ஜெபிக்கிறோம். பேரப்பிள்ளைகளையும் கர்த்தர் சாட்சியோடு வாழச்செய்வாராக. ஜெபிப்போம்.
தம்பி.பால் தினகரனுக்கும், சகோ.தினகரனின் குடும்பத்திலுள்ள பலருக்கும், சகோ.தினகரனின் அனுதாபிகள் பலருக்கும்
சகோ.தினகரனைப் பற்றி நான் ஜாமக்காரனில் தாக்கி எழுதியதைக் குறித்து கோபமும், வெறுப்பும் இருக்கும் என்பதை அறிவேன். அவர்கள் யாவரும் இந்த நேரத்தில் என்னை பொறுத்துக்கொள்வார்களாக. இப்படி நான் எழுதுவதால், நான் எழுதியதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று நினைக்கக்கூடாது. காரணம், நான் சகோதரன்.தினகரனைப்பற்றி எழுதியது யாவும் உண்மையானதாகும்.
இப்போதும் நான் கூறுகிறேன்
1974ம் வருடத்துக்கு பிறகு உள்ள சகோ.தினகரன், தம்பி.பால் தினகரன் இவர்களின்
பிழையான ஊழியங்களைப் பற்றி நான் ஜாமக்காரனில் விமர்சித்தது, நான் எழுதியது எதிலும் தவறில்லை. நான் எழுதிய விமர்சனம் அவர்களை வேதனையடைய செய்திருக்கலாம். ஆனால் அப்படி எழுதிய எனக்கு அது
பரமதிருப்தியையும், மனநிறைவையும் பெற்றிருக்கிறேன். இந்த விஷயத்தில் என் கர்த்தருக்குமுன் நான் குற்றமற்றவனாக நிற்க உதவிசெய்த என் தேவனாகிய கர்த்தருக்கும், என்னை அப்படி எழுத உணர்த்திய
ஆவியானவருக்கும் ஸ்தோத்திரம். சகோ.தினகரனைப் பற்றி ஜாமக்காரனில் நான் எழுதிய என் விமர்சனத்தால், என் எழுத்தால் ஒரு பெரும்கூட்டத்துக்கு பெரும் விழிப்புணர்வும் கிறிஸ்தவ மக்களில் பெரும்மாற்றமும் உண்டானது. அதுவேபோதும்! கர்த்தருக்கே மகிமை.
|
| தம்பி.பால் தினகரனின் இனியுள்ள நிலை |
சேலத்தில் அஸ்தம்பட்டி
இம்மானுவேல்
CSI ஆலயத்தில் ஞாயிறு காலை ஆராதனையில் தம்பி.பால் தினகரன் பேசும்போது என் தங்கை விபத்தில் மரித்த துக்கத்தில் எங்கள் குடும்பமே சொல்லொன்னா வேதனையில் இருந்த சமயம் ஒருசிலர் மட்டும் எங்களை தாக்கி எழுதி எங்கள் வேதனையை அதிமாக்கினார்கள் என்று ஆலயத்தில் பேசும்போது குறிப்பிட்டு இருக்கிறார். என்னைத்தான் அப்படி குறிப்பிட்டார் என்று ஜனங்கள் அறிவார்கள்.
சகோ.தினகரன்
மகள்.ஏஞ்சல் இறந்த அந்த குறிப்பிட்ட மாதத்தில் என் பத்திரிக்கையில்
காருண்யா கல்லூரி தேவனுடைய திட்டமல்ல என்பதற்கு ஆதாரங்களுடன் விமர்சித்து எழுதியிருந்தேன். அந்த விவரங்கள் அடங்கிய என் பத்திரிக்கையான ஜாமக்காரன் அச்சாகி வெளிவந்து தபாலில் சேர்க்கும் 2 நாட்களுக்குமுன், சகோ.தினகரனும், மகளும் கார் விபத்தில் அகப்பட்டு
மகளும், கார் டிரைவரும் அதே இடத்தில் மரித்துப்போனார்கள் என்ற செய்தி வந்தது. அது எங்களையும் கலங்கவைத்தது. அந்த சூழ்நிலையில் பத்திரிக்கையில் வெளிவந்த காருண்யா கல்லூரியை சகோ.தினகரன் அவர்கள் ஆரம்பிப்பது
தேவனின் திட்டமல்ல என்று எழுதிய அந்தக்கட்டுரை மகளை இழந்து வேதனையிலிருக்கும் அவர்களை மேலும் சோர்ந்துபோகபண்ணுமே! என்று நானும் வேதனைப்பட்டேன். தவியாய் தவித்தேன், ஆனால் அச்சடித்து வெளிவந்த அந்தமாத ஜாமக்காரன் பத்திரிக்கையிலிருந்து அந்தக்குறிப்பிட்ட பகுதியைமட்டும் எப்படி கிழித்து எடுப்பது? ஆகவே அவசரமாக அன்றைய நிலையை விளக்கி அந்தக்குறிப்பிட்ட கட்டுரையை
விபத்து நடந்தபின் நான் எழுதவில்லை என்றும், மகள்.ஏஞ்சல் மரித்த நிகழ்ச்சிக்கு எங்கள் சார்பில் வருத்தம் தெரிவிக்கிறோம் என்றும், காரணம் நாங்களும் குடும்பமாக நேசித்த
அன்புமகள் அல்லவா அவள்! ஆகவே உண்மையான எங்கள் மனவேதனையை துண்டுபிரதியாக அச்சடித்து, சப்ளிமென்ட்ரியாக வாசகர்கள் அனைவருக்கும் அறிவித்தோம். இந்த
இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் எதிர்பாராது நிகழ்ந்த நிகழ்ச்சியாகும். இந்த விவரத்தை உணராதது தம்பி.பால் தினகரனின் அனுபவக்குறைவே காரணமாகும். அதனால்தான் அன்று அவர் அப்படி பேசிவிட்டார்.
|
யாருக்கு உண்மையான மனவேதனை?
யாருக்கு போலியான மனவேதனை? |
வாசகர்கள் நிதானியுங்கள்: (எல்லாராலும் முறுமுறுக்கப்பட்ட நிகழ்ச்சி)
சகோ.தினகரன் மரித்து அவருடைய உடல் எல்லாருடைய பார்வைக்கும் வைக்கப்பட்ட நிலையில் பால் தினகரன் அறிவித்த செய்தி அங்கு கூடியிருந்த அநேக ஊழியர்களை, பிஷப்மாரை, விசுவாசிகளை அதிரச்செய்தது.
அப்பாவின் உடலை அடக்கம் செய்ய பணத்துக்கு நான் எங்கு போவேன் என்று கலங்கினேன் என்று வெளிப்படையாக
TV முன்னிலையில் தம்பி.பால் கூறியிருக்கிறார். எல்லார் முன்னிலையிலும் பால் அப்படி பகிரங்கமாக கூறியது
ஜனங்களின் அனுதாபத்தைப்பெறவா? அப்பாவின் அடக்க ஆராதனை செய்ய பணமில்லாதளவு இவர் ஏழ்மையானவரா? தன் தந்தையின் உடலை அடக்கம் செய்யமுடியாதளவு தான் ஒரு ஏழை என்பதை பொதுமக்களுக்கு அறிவிக்கவா? இப்படி கூறினார் அல்லது சிலர் கூறுவதைப்போல்
வருமானவரி இலாக்காவுக்கு இதன்மூலம் செய்தி அறிவித்தாரா? கருப்பு பணத்தை-வெள்ளையாக்கும் ஏற்பாட்டுக்கு இந்த அறிவிப்பு பிரயோஜனமாக இருக்குமா?
கோடீஸ்வர ஊழியர் என்று ஆங்கில பத்திரிக்கைகளால் புகழப்பட்டதாக கூறப்படும் ஒரு ஊழியர்,
தன் தகப்பனின் உடலை அடக்கம்பண்ண பணமில்லை என்று கூறியது வெட்ககேடான விஷயம். அதைக்குறித்து மக்கள் என்ன நினைப்பார்கள்?
நான் மார்ச்
7, 8, 9ல் திருநெல்வேலியில் இருந்தேன். அங்கு எல்லார் வாயிலும் இதே பேச்சு. சிலர் மதுரையில் இந்த விஷயத்தை குறித்து அச்சடித்த துண்டுப்பிரதியையும் காட்டி வேதனைப்பட்டனர். அடக்கம் செய்ய பணமில்லை என்று
பால் எப்படி கூறலாம்? என்று அவர்கள் கூறி மிகவும் வேதனைப்பட்டனர். இயேசு அழைக்கிறார் பங்காளர்களே பலர் இதைக்குறித்து கோபப்பட்டு பேசினர். தகப்பன் சாவிலும் ஒரு
வியாபாரமா? மேலே குறிப்பிட்ட இந்த அறிவிப்பை கூறியதும், துக்கம் விசாரிக்க வரிசையில் வந்த ஏழை மக்கள், பணக்காரர்கள் ஆகிய ஒவ்வொருவரும் தாங்களே முன்வந்து
500, 200, 100, 50, 20 என்று ரூபாய்களை
என் கையில் கொடுத்து அடக்க ஆராதனை செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி எனக்கு ஆறுதல் சொல்லிசென்றார்கள் என்று
பால் தினகரன் கூறியுள்ளார். வெளிநாட்டு விசுவாசி ஒருவர் பெரும் தொகையை தம்பி.பால் தினகரிடம் கொடுத்து
அப்பாவின் அடக்கசெலவுக்கு வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டராம். அப்போது பால் தினகரன் கூறினார் இவர்கள்தான் சகோ.தினகரனாகிய என்
அப்பாவை உண்மையாக நேசித்தவர்கள் ஆவார்கள். பெரியபெரிய ஊழியக்காரர்கள் வந்தார்கள், அவர்கள்
வெறும் ஆறுதல்மட்டும் கூறி ஜெபித்து சென்றார்கள். இந்த வெறும் ஜெபமும், ஆறுதல் வார்த்தையும்விட அந்த ஏழைமக்கள் கொடுத்த
பணமும், ஆறுதல் வார்த்தையும்தான் உண்மையானது என்று அவர் கூறியதை
TVயில் கண்டவர்கள் பலர் அதை எல்லாரிடமும்கூறி அறிவித்து கோபப்பட்டது, பல ஊழியர்களை வேதனையில் ஆழ்த்தியது மட்டுமல்ல அவர்களை
அவமானப்படுத்தியதுபோல் ஆயிற்று என்று பலர்கூறகேட்டது நமக்கு வெறுப்பை உண்டாக்குகிறது.
இதை வாசிக்கும் விசுவாசிகள் கூறுங்கள் ஒரு
அனாதை பிணத்தை வீதி ஓரத்தில் வைத்துக்கொண்டு அடக்கம்செய்ய பணம் வேண்டும் என்று சிலர் வீதியில் அங்கும் இங்கும் ஓடிஓடி பலரிடம் பணம் கெஞ்சிகேட்டு வாங்குவதை கண்டிருக்கிறீர்களா? அதற்கும் பால் தினகரன்
பணம் இல்லாமல் எப்படி அப்பாவின் பிணத்தை அடக்கம்செய்வது என்று தான் கலங்கியதாக கூறியதற்கும் வேறுபாடு உண்டா? பால் தினகரன் அப்பாவின் பிணத்தை வைத்து அழுதது சொல்லொன்னா வேதனைக்கொண்டா? அப்பாவின் சரீரத்தை அடக்கம் செய்யும் முன்பாகவே தம்பி.பால் தினகரன் இத்தனை ஞானத்துடன் தன்
MBA படிப்பின் தன்மையை வெளியே காட்டிவிட்டாரே! இனி இன்னும் என்னென்ன புதுமையான
வெளிப்பாடுகள், தரிசனங்கள் அப்பா சொன்னார் என்ற பெயரில் தம்பி.பால் தினகரன் வெளியிடப்போகிறாரோ?
இப்படிப்பட்ட விஷயத்தில் பால் தினகரனின்
தாய் சகோதரி.ஸ்டெல்லா தினகரன் அவர்கள் தலையிட்டிருக்கவேண்டும். சகோ.தினகரன் உயிரோடு இருக்கும்போது தம்பி.பாலை பல விஷயத்தில் கண்டித்தார். அதனால் வீட்டிலேயே பல வாக்குவாதங்கள் உண்டானது என்று அறிந்தேன். அப்போல்லோ ஆஸ்பத்திரியில் சகோ.தினகரன் படுத்தியிருந்த நாட்களில்கூட தம்பி.பாலுடன் கோபமாக பேசியதாக கூறக்கேட்டேன். ஏற்கனவே பிரச்சனைகள் சிலவற்றின் காரணமாக சகோ.தினகரன் வீட்டில்
இரண்டு சமையல்கள் நடப்பதாக சிலர் கூறினர். அதனால் சகோ.தினகரை தம்பி.பால் ஆரம்பத்திலேயே அவ்வளவாய் விரும்பமாட்டார். 9 வயது பாலகனாக இருந்தபோதே பால்தினகரனின் கோபத்தை நான் அறிவேன். அதன்பின் கல்லூரி பிரச்சனைகள் மூலமாக தகப்பன் அடைந்த வேதனையும் கோபமும் அறிந்தோம். தகப்பனுக்கும், மகனுக்கும் நெருக்கம் குறைவு. அதனால்தான் கூறுகிறேன்
மகனின் வழிகளை இனியும் வசனத்துக்குநேரே சகோதரி.ஸ்டெல்லா தினகரன் அவர்கள் திருப்பாமல் போனால்
பிசாசு இவர்கள் செய்யும் ஊழியத்திலும், ஸ்தாபனத்திலும் பயங்கரமாக
சிம்மாசனம் இட்டு இவர்களின் இயேசு அழைக்கிறார் ஸ்தாபனத்தின் ஆட்சியை நேரிடையாக தன்கையில் எடுத்துக் கொள்வான் என்பதில் சந்தேகம் இல்லை. சகோ.தினகரனின் மரணநாளில்
தீர்க்கதரிசனம் கூறி புகழ்த்திய பெரிய, சிறிய ஊழியர்களுக்கும், என் எழுத்துக்கும்
அறிவிப்புக்கும், எச்சரிப்புக்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள். ஆவியானவர் எங்களில்
யாரிடத்தில் இருக்கிறார்? என்பதை அறிவீர்கள். துக்கநிவர்த்தி கூட்டத்துக்கு வந்த எல்லா ஊழியர்களும் பால் தினகரனுக்கு பயந்து நன்மையான தீர்க்கதரிசனத்தைமட்டுமே கூறினார்கள். ஆனால்
பால் தினகரனை ஆவியானவர் பயங்கரமாக எச்சரிக்கும் ஒரு தீர்க்கதரிசனம் உண்டு. அதை யாரும்
இதுவரை கூறவில்லை.
இயேசு அழைக்கிறார் மார்ச்
2008 பத்திரிக்கையில் (விசேஷபதிப்பு) பக்கம்
16ல் இன்று பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள் நாளை அப்பாவை சந்திப்போம். இந்த வார்த்தையில்வரும் வசனம் வேதத்தில் எங்கு எழுதப்பட்டுள்ளது என்பதை கவனித்தீர்களா? இஸ்ரவேல்மக்கள் எரிகோ நகரத்தை பிடிக்கமுடியாமல் தவித்தபோது கர்த்தர் உரைத்ததாவது
இன்று உங்களை சுத்திகரித்துக் கொள்ளுங்கள் நாளை எரிகோ உங்கள் கையில், எந்த நிகழ்ச்சியை எதோடு சம்பந்தப்படுத்துகிறார்கள் கவனித்தீர்களா?
கடவுளுக்கு சமமாக தன் தகப்பன் சகோ.தினகரனை காண்பிக்கிறார். நீங்கள் பரிசுத்தமாவது
கர்த்தரை சந்திக்க அல்ல - தினகரனை சந்திக்கவே. இது தேவதூஷனம் ஆகும்.
நான்
எதிர்ப்பார்த்தப்படியே சகோ.தினகரன் மரித்தவுடனேயே வேதவசனத்துக்கு விரோதமான பல பயங்கர
திட்டங்கள், வெளிப்பாடுகள் வெளிவந்துவிட்டது. இனி சகோ.தினகரனையே தெய்வமாக்கும் பிசாசின்
தந்திரதிட்டம் வெளிவரப்போகிறது. மகள்.ஏஞ்சல் இனி பரலோகத்திலிருந்து வரமாட்டாள். ஆனால் சகோ.தினகரன் அடிக்கடி பரலோகத்திலிருந்து வருவார். பால்தினகரனுக்கு ஆலோசனை கூறுவார், புதுபுது திட்டங்களை கூறுவார். சீக்கிரமே நீங்கள் இதை கேள்விப்படுவீர்கள். அடுத்தது: சகோ.தினகரனை
பரலோக கமிட்டியில் ஒருவராக அறிவித்துள்ளார்கள். அப்படி அறிவிக்காமல் போனால் 3 லட்சம்போட்டு
தங்கசாவி வாங்கியவர்களின் வெறுப்புக்கும், கோபத்துக்கும் பால் தினகரன் ஆளாக நேரிடும். இனி
தங்கசாவி திட்டம் என்ன ஆகுமோ? பொறுத்திருந்துப்பார்ப்போம். இனி தங்கசாவி திட்டத்தில் யாரும் சேரமாட்டார்கள். அதற்கு பதில் அல்லது அந்த திட்டத்தை உறுதியாக்க
தினகரன் அவர்கள் ஏதாவது கூறுவார். மேலும் நான் கூறியதுபோலவே தன் தகப்பனார் சொன்னார் என்ற பெயரில் பல புதியதிட்டங்கள் வெளிவந்துவிட்டன. அதன் முதல்கட்டமாக
Dr.D.G.S.தினகரன் நினைவு நிதி (Dr.D.G.S.Dhinakaran
Endowment Fund) என்ற பெயரில் ஒரு புது ஊழிய வியாபாரம் தொடங்கிவிட்டனர். இன்னும் வேதவசனத்துக்கு விரோதமான பல வெளிப்பாடுகளை விரைவில் நீங்கள்
TVயிலும், இயேசு அழைக்கிறார் பத்திரிக்கையிலும் காண்பீர்கள். அதைத் தொடர்ந்து அதில் பணம் போட்டதின் ஆசீர்வாதம் என்று பலர் சாட்சி கூறிய விவரத்தையும் காண்பீர்கள்.
பயந்தது நடந்தது: Dr.D.G.S.Dhinakaran
Endowment Fund (Dr.தினகரன் நினைவு நிதி)
இன்று
பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள் நாளை அப்பாவை (சகோ.தினகரனை) சந்திப்போம்
இரண்டாம் வருகையில்
இயேசுகிறிஸ்துவோடு சகோ.தினகரனும் கூடவருவார் -
இயேசு அழைக்கிறார். மார்ச் விசேஷ பதிப்பு பக்கம் 18ல் காண்க.
|
இயேசு அழைக்கிறார் மார்ச்
2008 விசேஷ பதிப்பு பக்கம்
27
|
பரலோக கமிட்டி TRUST விவரம்.
பரலோகத்தின் ஆலோசனை குழுவில் சகோ.தினகரன் |
பரலோகத்தில் இயேசுகிறிஸ்துவுக்கு ஆலோசனை கொடுக்க ஒரு குழு இருப்பதைப்போலவும், அந்த ஆலேசனை குழுவில் சகோ.தினகரனை ஒரு அங்கத்தினனாக கடவுள் நியமிப்பாராம்.
அந்தகுழுவில்
முதலாவது
இயேசுகிறிஸ்து
இரண்டாவதாக அமர்ந்திருப்பவர்
ஆபிரகாம் மூன்றாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட
முற்பிதாகளில் சிலர் அமர்ந்திருப்பார்களாம்
நான்காவதாக இயேசுவின் சீஷர்களாகிய
அப்போஸ்தலர்கள் அமர்ந்திருப்பார்களாம்
ஐந்தாவதாக அப்போஸ்தலர்களுடன் சகோ.தினகரனும் அமர்ந்திருப்பார்களாம்.
ஏறக்குறைய ஒரு Trust
அறக்கட்டளை குழுப்போல அது அமைந்திருக்கும். எப்போதெல்லாம் ஆண்டவர் உலகக்காரியங்களைக் குறித்து தீர்மானம் செய்யும்போது (சகோ.தினகரனாகிய) உங்கள் ஆலோசனையையும் கர்த்தர் கேட்பார் என்று
தீர்க்கதரிசனம் ஆஸ்ட்ரேலியாவிலிருந்து உரைக்கப்பட்டதாம். நம்புகிறீர்களா?
இப்படி ஒரு
தீர்க்கதரிசனத்தையும் இப்படி ஒரு அமைப்பையும் நீங்கள் உலகத்தில் எந்த ஊழியக்காரர்கள் விஷயத்திலாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருவருக்கு
கிணறுவெட்ட, போர்வெல் போட, மாடுவாங்க பேங்க்கில் லோனுக்கு விண்ணப்பித்தால் ஒரு
Board கமிட்டி தீர்மானித்து பிறகு விண்ணப்பித்த நபர்
பணம்பெற அனுமதிக்கிறார்கள் அல்லவா? அதுபோல நீங்கள் ஜெபிக்கும், விண்ணப்பிக்கும் எல்லா விஷயத்துக்கும் இந்த பரலோகக்குழு
Board தீர்மானித்து அந்தக்குழுவில் பூலோகத்திலிருந்து புதிதாக வந்துசேர்ந்த
சகோ.தினகரன் அந்த போர்டின் அல்லது அந்த பரலோகக்குழுவின் அங்கத்தினன் ஆவார். இவர் மனதுவைத்து சிபாரிசு செய்தால்தான் உங்கள்
விண்ணப்பத்துக்கு பதிலும், பலனும் கிடைக்கும். ஆகவே இப்போதே பூலோகத்தில் உயிரோடு இருக்கும் மகன்.பால் தினகரனை பகைத்துகொள்ளாமல் அவரை திருப்திப்படுத்த
இளம்பங்காளர் திட்டம், திருமண திட்டம், போட்டோ திட்டம், தினகரன் நினைவு நிதி இவைகளுக்கெல்லாம் பணம் அனுப்பி ரசீது காட்டினால் மகன்.பால் தினகரன் உங்களுக்காக அப்பா
D.G.S.தினகருக்கு சிபாரிசு செய்வார். அதாவது பரிந்துரைப்பார். மகன் யார் பெயரை கூறுகிறாரோ அந்தபெயரை பரலோக கமிட்டியில் உள்ள
தினகரன் அறிவித்தமுன் பழையதிட்டமான கிருபாசனபெட்டியில் பத்திரங்களை வைப்பதுப்போல உங்கள் பெயரை சமர்பிப்பார். பிறகு என்ன?
Board கமிட்டியில் உள்ள தினகரன் சிபாரிசு செய்ததை, கமிட்டி மெம்பரோடு கமிட்டியிலுள்ள
இயேசுவும் கையெழுத்திட்டு உங்கள் விண்ணப்பத்துக்கு பதில் அனுப்புவார்.
திட்டம் எப்படி? அற்புதமாக இல்லை? இனி இயேசுவின் மூலமாய் கேட்டுக்கொள்கிறோம் என்பதற்கு பதில் சகோ.தினகரன் மூலமாய் கேட்டுக்கொள்கிறோம் என்று ஜெபிக்க வேண்டிவரும். இந்த வியாபாரதிட்டத்தை எத்தனை அருமையாய்
MBA தம்பி தீர்க்கதரிசனம் என்ற பெயரில்
வடிவமைத்து வெளியிட்டுருக்கிறார் என்பதை கவனியுங்கள்.
நம் கர்த்தருக்கு இன்னொரு பெயர்
ஆலோசனையின் தேவன் என்பதாகும். ஆனால் தம்பி.பால் தினகரன் அவர்கள், ஆஸ்ட்ரேலியா தீர்க்கதரிசனத்தின்படி
இயேசுவுக்கு ஒரு ஆலோசனைகமிட்டி, அந்த கமிட்டியிலுள்ள இயேசுவுக்கே ஆலோசனைக்கூற தன் தகப்பனார்
சகோ.தினகரன். இவைகளையெல்லாம் நம்புவதற்கும், தினகரன் நிதிக்கு பணம் கொடுக்கவும் வேதவசனம் அறியாத
பிஷப்மார்கள் கியூவில் நிற்கிறார்கள் தெரியுமா? குருமார்கள் கியூவில்,
வெளிநாட்டினர் கியூவில், உள்நாட்டில் வேதவசனம் அறியாதவிசுவாசிகள் இப்போது
லட்சக்கணக்கில் கியூவில் நிற்பது பாழாய்போன என் கண்களுக்கு மட்டும் தெரிவதேன்? ஆனால் இதை எழுதுவதற்கு முன்னே மேலே கூறப்பட்ட இதே என் சிந்தனையோடு உள்ளவர்கள் மிகஅதிகம் காணப்படுகிறார்கள். அவர்கள் தெளிவுப்பெற்று வளர்ந்துவிட்டது எனக்கு பெரிய ஆறுதலை தருகிறது.
இன்னும் பல வெளிப்பாடுகள் உண்டு, பல திட்டங்கள் உண்டு. அப்பாவின் பெயரிலேயே தம்பி.பால் தினகரன் விரைவில் வெளியிடபோகிறார். அதற்கு தாயின் சம்மதம் சாட்சியாக வெளிவரும்.
கர்த்தாவே! இந்திய கிறிஸ்தவர்களை இந்த
இயேசு அழைக்கிறார் கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றும் என்று ஜெபிப்போமா?
முன்பு
R.S.S, பஜ்ரங்தள், சிவசேனா
மேலும் பிசாசின் கிரியைகளிலிருந்து கிறிஸ்தவ மக்களை காப்பாற்றும் என்று ஜெபித்தவர்கள் எல்லாரும் இப்போது மேலே குறிப்பிட்ட ஜெபக்குறிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
செத்துப்போன மகளை பரலோகத்திலிருந்து அழைத்துக்கொண்டுவர இவர்களின் வேலைக்காரனாக
ஆவியானவரை சகோ.தினகரன் அறிவித்ததை அறிந்தோம்.
காலை
7 மணி ஜெபத்தில் தன் கட்டிலில் பக்கத்தில் தினசரி உட்கார்ந்து தன்னோடு பேசும்
இயேசு என்று சகோ.தினகரன் பிரசங்கித்ததையும் இப்படிப்பட்ட பல பரலோக விஷயங்களும், பல
பங்காளர் திட்டங்களும் 2008 பிப்ரவரி
20ம் தேதியுடன் முடிந்துவிட்டது. முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று பலர் எழுதினார்கள், அறிவித்தார்கள்.
ஆனால்....
இந்த திட்டங்களுக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. கமா ( , ) மட்டுமே வைக்கப்பட்டது. மீதி
மகன்.பால் தினகரன் மூலமாக பன்மடங்கு அதிகமாகவும், துணிகரமாகவும் வெளிவரப்போகிறதை இனிதான் காணப்போகிறீர்கள். துக்கநிவர்த்தி கூட்டத்தில் தெளிவாக இவைகளைப்பற்றி தீர்க்கதரிசனம் கூறிவிட்டார்களே! இதற்கெல்லாம் தலைமைத்தாங்க சில
பிஷப்மார்களும் இப்போதே புது அங்கிகளுடன் புகைப்படத்திற்கென்றே தயாராகி கொண்டிருக்கிறார்கள்.
அப்பா மரித்தநிலையில் உண்மையான மனவேதனை இருந்திருக்குமானால் இப்படிப்பட்ட குறுக்குவழி திட்டங்களை இப்படிப்பட்ட மரணநேரத்தில்
யோசிக்க மனம்வருமா?
சகோ.தினகரன் அவர்கள் மரணமடைந்தநிலையில் நான் இப்போது எழுதியது
தம்பி.பால் தினகரனுக்கு ஆறுதல் அளிக்காது. அவர் எரிச்சலின் உச்சக்கட்டத்துக்குப்போவார். சேலத்தில் இவர் பிரசங்கத்தில் கூறியபடி
தங்கையின் மரணத்தின் சூழ்நிலையில் தாக்கி எழுதினார் என்று குறிப்பிட்டாரே அன்று அவர் அப்படி கூறியதை, அறியாமை அல்லது முதிர்ச்சியற்றதன்மை என்றேன். ஆனால் இப்போது
அப்பாவின் அடக்க செலவுக்கு என்ன செய்வேன் என்று கலங்கியதாக கூறியது
அறியாமையும் அல்ல, முதிர்ச்சியற்றதன்மையும் அல்ல வெறும் வியாபார தந்திரமாகும்.
இப்போது வாசகர்கள் கூறுங்கள்: நான் இப்படி எழுதியதற்கு பெயர்
தாக்குதலா? இனி சகோ.தினகரன் - சகோ.பாலாசீர்லாரி மாதிரி பலரின் வீடுகளுக்கு நேரிலேயே வந்து
சுகம் கொடுத்தார், தரிசனம் கொடுத்தார், பணம் கொடுத்தார் என்று லாரியின் மகன் தன்பத்திரிக்கையில் வெளியிட்ட சாட்சிகளைப்போல, இப்படிப்பட்ட பல சாட்சிகள்
இயேசு அழைக்கிறார் நிகழ்ச்சிகளில் அல்லது பத்திரிக்கையில் வராமல் இருக்கவேண்டும் என்று ஜெபித்துக்கொள்வோம். |
| என் ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன். |
தம்பி.பால் தினகரன் அப்பாவை அடக்கம் செய்ய பணத்துக்காக கலங்கினேன் என்று கூறியாதாக நான் கேள்விப்பட்டவுடன் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
சகோ.தினகரன் என்ன அனாதை பிணமா? சகோ.தினகரன் அவர்கள் தன் மகன்.பால் தினகரனுக்கு என்ன குறை வைத்தார்? இந்த விஷயத்தில் இப்போது நான் ஆதங்கப்பட்டு எழுதுவது என்
ஆரம்பகால நண்பர் சகோ.தினகரனை நினைத்தே எழுதுகிறேன்.
சகோ.தினகரன் அவர்கள் தன் வாழ்க்கையில்
ஊழியத்துக்காக என்று தனக்கு வந்த காணிக்கையில் தன் குடும்பத்துக்காகவோ, தனக்காகவோ இதுவரை ஒரு பைசாகூட அதிலிருந்து எடுத்ததில்லை என்பதை நூற்றுக்குநூறு நான் அறிவேன்.
|
சகோ.தினகரன் அவர்கள் தன் வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது கிடைத்த
பெரும் தொகையை யாருக்காக பேங்க்கில் சேர்த்து வைத்தார்?.அதன் வட்டிவிகிதம் என்ன? அது யாருக்கு?
சென்னையில்
அரும்பாக்கத்தில் சகோ.தினகரன் அவர்கள் பேங்க்கில் லோன் எடுத்து அன்றே தன் இரண்டு பிள்ளைகளுக்காக
சொந்தமாக வீடுகளை கட்டிவைத்தார். அதில்தான் பல வருடங்கள் சகோ.தினகரனும் குடியிருந்தார். இப்போது அந்த வீடுகள் யாருக்கு?
மகள் திருமணத்துக்காக சேர்த்து வைத்த பெரும்தொகையும்,
தங்கநகைகளும் யாருக்கு?
மரித்துப்போன சகோ.தினகரனின் தாய்
Mrs.எப்சிபா துரைசாமி அவர்கள்
தங்கநகை பேரில் மிகவும் விருப்பமுள்ளவர். மரிக்கும்வரை தங்கநகைகளை தன் கழுத்திலேயே அணிந்திருந்தார்.
அந்த நகைகளும் மீதியுள்ள நகைகளும் யாருக்கு?
தன் தாயான சகோ.ஸ்டெல்லா தினகரனின் பெரும்தொகையுள்ள
நகைகள் யாருக்கு?
சகோ.தினகரனின்
பென்ஷன் தொகைகள் செலவழிக்காமல் பேங்க்கில் மாதாமாதம் வட்டியுடன் சேர்ந்துள்ளதே அத்தனை பணமும்
யாருக்கு?
பல இடங்களில் வாங்கிய கட்டிடங்களின்
வாடகைப்பணம் யாருக்கு?
மேலும் தம்பி.பால் தினகரன் தன் திருமணத்தின்போது வாங்கிய
ரொக்கம், நகைகள் அவைகள்கூட கையில் இல்லாத நிலையிலா தகப்பனின் சவ அடக்க செலவை நினைத்து கலங்கிப்போனார்? இவர்களுடைய ஆடிட்டர்களிடம் இவைகளைக்குறித்து கேட்டால்போதும் சொத்தின், பணத்தின் முழுவிவரமும் அறியலாம். |
நான் இப்போது மேலே குறிப்பிட்டதெல்லாம் குடும்பம் சம்பந்தப்பட்ட நகைகள், பணம், பேங்க் சேமிப்புகள் மட்டுமே. ஆனால் மற்ற சொத்து விவரங்கள் எதையும் இங்கு நான் குறிப்பிடவில்லை என்பதை வாசகர்கள் அறியவேண்டும்.
|
திருமணமாகாத
மகள்.ஏஞ்சலின் இறந்தபின் அவளின் அத்தனை பணமும் பால் தினகரனுக்குதானே! மகனுக்கு
பணக்கஷ்டத்தை உண்டாக்கிவிட்டா சகோ.தினகரன் மரித்துப்போனார்.
தன் இறுதி காலகட்டத்தில் சகோ.தினகரன் அருமையான ஏற்பாடுகளையும் எல்லா
அந்திம ஏற்பாடுகளையும் மிக அழகாய் திட்டமிட்டு செய்துவிட்டுதான்
சகோதரன்.தினகரன் அவர்கள் மரித்தார்கள். தன் அடக்கம் எப்படியிருக்கவேண்டும் எப்படியிருக்கவேண்டும் என்று எல்லாவற்றையும் ஒரு பேங்க் ஆபீசராக சரியாய் திட்டமிட்டு அறிவித்துவிட்டு தன் பெயரில் உள்ள அனைத்து பணத்தையும் மனைவிக்கும், மகனுக்கும் மாற்றி மரித்தபின் அந்த பணத்தை பெறயிருக்கும் சிரமம் இருக்கக்கூடாது என்று ஆடிட்டரை அழைத்துப்பேசி எத்தனை அழகாய் ஏற்பாடுகளை செய்துவிட்டு மரித்தார். பணம் இல்லாத நிலையை மகனுக்கோ, மனைவிக்கோ உண்டாக்குவாரா? மிக தெளிவாக ஏற்பாடுகளை செய்தார் என்பதை அறிந்தேன். இப்படியிருக்க
அனாதை பிணத்தை அடக்கம் செய்ய பணம் கேட்பதைபோல் அப்பாவை அடக்கம்செய்ய
பணத்துக்கு நான் எங்கு போவேன் என்று கலங்கியதாக எப்படி அறிவிக்கலாம்? இது பிணத்தை வைத்து வியாபாரம் செய்ததற்கு ஒப்பாகும் அல்லவா?
சகோ.தினகரனின் மரண செய்தியைக்கேட்டு குறிப்பாக தம்பி.பால் தினகரன் அறிவித்ததைக்கேட்டு எத்தனைபேர்
அமெரிக்காவிலும், இந்தியாவிலும், சிங்கப்பூரிலிருந்தும், ஆஸ்ட்ரேலியாவிலிருந்தும், கனடாவிலிருந்தும், ஜப்பானிலிருந்தும் சகோ.தினகரனின் அடக்க ஆராதனை செலவுக்கு என்று தனியாக ஏராளமானபேர் பணம் அனுப்பினார்கள் என்று கூறக்கேட்டேன்.
இந்தத்திட்டம்
கருப்பு பணத்தை - வெள்ளையாக மாற்றவா? என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். என்ன பதில் சொல்ல? இவைகளைக்குறித்து எழுதி மேலும் நான் பலரின் வெறுப்புக்கு உள்ளாவேன் என்று நான் வேதனைப்படவில்லை. ஆனால் என் ஆரம்பகால நண்பனின் அடக்க ஆராதனையை நடத்த
பணமில்லை என்று கூறிக் கொச்சைப்படுத்தினதின் ஆத்திரத்தில்தான் இவைகளை எழுத வேண்டியதானது.
சகோ.தினகரன் அவர்கள்
குடும்பத்தினரோ - உறவினர்களோ - நண்பர்களோ - அனுதாபிகளோ நான் எழுதி அறிவித்த இந்தவிவரத்தை வாசிக்க நேர்ந்தால் நான் இப்படி எழுதியதில் தவறு உண்டா? அல்லது உண்மைக்கு புறம்பான தகவல் இதில் எதுவும் உண்டா? என்பதை உணர்ந்து, அப்படி உண்டென்றால் தயங்காமல் எனக்கு எழுதுங்கள். நான் திருத்திக்கொள்கிறேன். திருத்திக்கொண்டதை அப்படியே வெளியிடுகிறேன்.
நான் எழுதியது மரணவீட்டாருக்கு மேலும்
துக்கத்தை உண்டாக்க அல்ல! அவர்களில் பலர் மேலே குறிப்பட்டவைகளைக்குறித்து
விளக்கம் கேட்டதால் எழுதினேன். ஜெபிக்கிறேன்.
|
|
|
|