நினைத்துப்பார்க்கிறேன்

சகோ.D.G.S.தினகரன் அவர்கள் ஊழியத்தில் மிகப்பெரிய அளவு உயருவதற்குமுன் ஆரம்பகாலத்தில் நாங்கள் இருவரும் எப்படி அறிமுகமானோம் என்பதையெல்லாம் நினைவு கூர்ந்து தேவனைத்துதிக்கிறேன். ஆஸ்பத்திரியில் அவரின் மரணவேளையில் அவர் மரித்துவிடுவார் என்று உறுதியானபின் அவரின் ஆரம்பகால ஊழியங்களுக்காகவும் தேவனை துதிக்கத்தொடங்கினேன்.

நான் எழுதப்போகும் விஷயங்கள் எதுவும் அவரின் சரித்திரம் எழுதுபவர்கள் அல்லது சகோ.தினகரனைப் பற்றி அவர் குடும்பத்தினர் எழுதும் புத்தகங்கள் எதிலும் நான் எழுதும் செய்திகளை வெளிவர அனுமதிக்கமாட்டார்கள் என்பதை நன்கு அறிவேன்.        அதனால் என் வாசகர்கள் மட்டும் அவைகளை அறியவேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

சகோ.தினகரனைப்பற்றி விமர்சித்து ஜாமக்காரனில் நான் அடிக்கடி எழுதும்போது என் வாசகர்கள் உட்பட பலர் என்னை சகோ.தினகரனின் எதிரியாகவும் நான் அவரை வெறுப்பதாகவுமே நினைத்தார்கள்.    அதைக் குறித்து நான் எப்போதும் கவலைப்பட்டதில்லை.    என் மனசாட்சியின்படியும், ஆவியானவரின் ஏவுதலின்படியும் என் வாசகர்களுக்காகவும் ஜாமக்காரனில் பல பிரச்சனைகளை எழுதியதால் லட்சக்கணக்கானவர்களின் வெறுப்புக்குள்ளானேன்.


சகோ.தினகரன் அவர்களின் ஊழிய ஆரம்பம்

Cross  சகோ.தினகரனின் சொந்த ஊர் நெல்லைமாவட்டம் சுரண்டையானாலும், தகப்பனரின் வேலையினிமித்தமும், தன் படிப்பினிமித்தமும் சொந்த ஊரைவிட்டு வெளியேறவேண்டியிருந்தது.    இவைகளை உங்களில் பலர் அவரின் இயேசு அழைக்கிறார் பத்திரிக்கை மூலமாகவும்,    அவர் பிரசங்கம் மூலமாகவும் அறிந்திருப்பீர்கள்.      ஆனால் அவர் கூறியபடி மிக ஏழ்மை சூழ்நிலையில் அவர்களின் குடும்பம் வாழ்ந்திருக்கவில்லை என்பதற்கு சகோ.தினகரனின் உறவினர்களே சாட்சி. சுமாரான, நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்தவர் எனலாம். அவருக்கு சொந்தவீடு இருந்தது. குடும்பத்தில் எங்கள் குடும்பம்போல் வதவத என்று சுமார் 10 பிள்ளைகளை பெற்றெடுக்காமல், ஒரே ஒரு மகனாய் சகோ.தினகரன் பிறந்தார்.

அவர் வீட்டில் அவர் அம்மா திருமதி.எப்சிபா அவர்களும், அப்பா  திரு.துரைசாமி அவர்களும் ஒன்றாக நின்று எடுத்துக்கொண்ட பழங்காலத்து போட்டோ உண்டு.    அதில் சகோ.தினகரனின் தாய் அந்தகால பிரிட்டிஷ் ஆட்சியின்போதே கழுத்து நிறைய நகைகளை பட்டையாக அடுக்கி அணிந்து நிற்பதை காணுபவர்கள் அவர் குடும்பம் வறுமையின் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பம் அல்ல என்றும், நடுத்தர குடும்பம் என்றும் அறியமுடியும்.

Cross  சகோ.தினகரன் காருண்யா கல்லூரிக்காக பணம் திரட்டும்போது ஒவ்வொரு கூட்டத்திலும் மனப்பாடம் செய்தததைப்போல கூறும் சம்பவம் என்னவென்றால் என் தகப்பனார் என்னை அழைத்துக்கொண்டுதான் படிக்க சீட் கேட்டு ஒவ்வொரு கல்லூரியாய் ஏறிஏறி இறங்கினார் என்பதாகும். அந்த  கல்லூரி கேட்ட பணம் (டொனேஷன்) கொடுக்க முடியாமல் தகப்பனார் கண்ணீர் விட்டார் என்று கூறியதை வானொலியில் கேட்டவர்கள், கூட்டங்களில் கேட்டவர்கள் இன்றும் உயிரோடுயிருக்கிறார்கள். டொனேஷன் கேட்காத கல்லூரி இந்தியாவில் உருவாகாதா என்று நான் ஏங்கி கண்ணீர் விட்டேன் என்று அப்போதே சகோ.தினகரன் கூறினார்.        அதன்பின்தான் கர்த்தர் என்னைக்கொண்டே ஏழைகளுக்கென்று கல்லூரியை கட்டச்சொல்லி ஆரம்பித்ததுதான் இந்த காருண்யா கல்லூரி என்று கூறுவார். அந்த காருண்யா கல்லூரியில் படிக்க சேர்ந்த அத்தனை மாணவ, மாணவிகளையும் கேட்டாலே போதும் அல்லது அவர்கள் பெற்றோர்களை கேட்டாலும் போதும், அவர்களை மட்டுமல்ல, நம் சபை குருவானவர்கள் அல்லது தினகரனின் ஒவ்வொரு கூட்டத்திலும் தலைமை ஏற்கும் பிஷப்மார்களையும் கேட்டாலே போதும் காருண்யா கல்லூரி வாங்கிய டொனேஷனைப்பற்றி அறியலாம். அந்த  விஷயத்தைப்பற்றி பல வருடத்துக்கு முன்பே ஜாமக்காரனில் நான் எழுதிவிட்டதால் அதை மீண்டும் விவரிக்க விரும்பவில்லை.

Cross  அந்த காலத்து B.Sc படிப்புக்கும் சரி, இன்ஜினிரியங் காலேஜ் படிப்புக்கும் சரி யாரும் எங்கும் டொனேஷன் வாங்கினது இல்லை என்பதை நாம் அறிவோம். அந்த குறிப்பிட்ட படிப்புக்கு மாணவர்கள் கிடைக்கமாட்டார்களா என்று ஒவ்வொரு கல்லூரியும் ஏங்கிய காலம் அது. அப்படியிருக்க தன் படிப்புக்காக டொனேஷன் கொடுக்க முடியாமல் சகோ.தினகரனின் தகப்பனார் கலங்கினார் என்று சகோ.தினகரன் கூறுவதை ஏற்கமுடியாது. இப்படி கூறுவது ஜனங்களின் இரக்கத்தை தன் பக்கம் கொண்டுவர உதவும். எப்படியோ B.Sc படிப்பை முடித்துவிட்டார். படிப்பு முடிக்கும் முன்னும், படிப்பை முடித்த பின்னும் ஏற்பட்ட தோல்வி, சோர்வு காரணமாக சகோ.தினகரன் தற்கொலைக்கு செல்ல, அவரின் சித்தப்பா (நானும் அவரை அறிவேன்)      சகோதரனை தடுத்து பெலப்படுத்தினார்.      அது அவரின் வாழ்க்கைக்கு பெரும் திசைதிருப்பமாக அமைந்தது. அதுவே இரட்சிப்புக்கு நேராகவும் அவரை வழிநடத்தியதாக அவரே பலமுறை கூறகேட்டிருக்கிறோம்.

Cross  சகோதரனுக்கு State Bank of India என்ற பேங்க் வேலை கிடைத்தது. அவர் லூத்தரன் சபையை சார்ந்திருந்தாலும் சென்னையில் இருக்கும்போது பாஸ்டர்.சுந்தரம் சபைக்குதான் ஆராதிக்க போவார். வேலைமாற்றல் காரணமாக கோயமுத்தூர் வந்து சேர்ந்தார்.    அங்குதான் அவரின் ஆவிக்குரிய ஊழிய வளர்ச்சி தொடங்கியது எனலாம்.    அதற்கு உறுதுணையாக சகோ.லைனல், பென்னி, சகோ.எட்வர்ட் பால், குறிப்பாக பாஸ்டர்.லெம்யூர் அவர்களும் காரணம் எனலாம்.

Cross  கோயமுத்தூரில் பாஸ்டர்.லெம்யூர் என்ற பாஸ்டர் காந்திபுரத்தில் பெந்தேகோஸ்தே சபை நடத்திக்கொண்டிருந்தார். அவர் சபையில்தான் சகோதரன் அவர்கள் திருவிருந்து கைக்கொள்வார். அந்த சமயம் இரண்டு சம்பவங்கள் அவர் வாழ்க்கையையும், ஊழியத்தையும் திசைத்திருப்பியது எனலாம்.

Cross  ஒன்று:  சகோ.தினகரன் கும்பநாடு (கேரளா) என்ற ஊரில் நடந்த பெந்தேகோஸ்தே சபைகளின் மிகப்பெரிய கன்வென்ஷனுக்கு பேச அழைக்கப்பட்டிருந்தார். நான்கு நாட்களும் சகோதரனை பேசவிடாமல், மற்ற பாஸ்டர்களை பேசவைத்தார்கள். இனி இங்கிருந்து பிரயோஜனமில்லை என்று உணர்ந்து பெரிய பாஸ்டரிடம் கடந்த 3 நாட்களும் என்னை நீங்கள் பிரசங்கம் செய்ய உபயோகிக்கவில்லை பின் ஏன் என்னை அழைத்தீர்கள்? ஆகவே நான் புறப்படுகிறேன் என்றார்.    உடனே பாஸ்டர் நாளை காலை ஆராதனையில் உங்களை உபயோகிப்போம் என்றார். ஆனால் ஏமாற்றப்பட்டார். அன்று காலை ஆராதனையில் அவரின் சாட்சியைமட்டும் 10 நிமிடத்தில் கூறச்சொல்லி அந்த பாஸ்டர் கேட்டுக்கொண்டார். இவரோ 3 நிமிடத்தில் தன் சாட்சியை கூறி முடித்து கோபத்துடன் உடனே புறப்பட்டுவிட்டார்.      அன்றுதான் முதன்முதல் பெந்தேகோஸ்தே சபையினரை சகோ.தினகரன் வெறுத்தார்.        அந்த சூழ்நிலையில் கோவை.பாஸ்டர்.லெம்யூர் அவர்களின் சபையில் சிறிய பிரச்சனை உண்டானது. அங்கு காலை கழுவியபின்தான் ஒவ்வொரு வாரமும் திருவிருந்து நடத்தப்பட்டது. அதை சகோ.தினகரன் எதிர்த்தார். TPM (CPM) சபையிலேயே வருடம் ஒருமுறைத்தான் கால்கள் கழுவி திருவிருந்து பரிமாறுகிறார்கள். அப்படியிருக்க நாம் வாராவாரம் கால் கழுவி ஆராதனை நடத்துவதால் நேரம் மிகவும் வீணாக செலவாகிறது என்றார். பாஸ்டர் அவர்கள் தான் உயிரோடு இருக்கும்வரை கால் கழுவிதான் திருவிருந்து நடத்தப்படும் என்றார். இதனிமித்தம் சபை இரண்டாக உடைப்படும் சூழ்நிலை உருவானதால், உடனே தமிழ்நாட்டில் மேட்டூர் டேம் என்ற சிறிய ஊரில் உள்ள ஸ்டேட் பாங்க்குக்கு தானே விரும்பி மாற்றல் கேட்டு வந்துசேர்ந்தார்.      மேட்டூர் வந்துசேர்ந்தவுடன் தான் பழைய லூத்தரன், CSI சபை அங்கத்தினன் என்று காண்பித்து மேட்டூர் Good Shepherd CSI சபையில் தன்னை அங்கத்தினனாக இணைத்துக்கொண்டார்.


மேட்டூர்

Cross  சகோ.தினகரனை ஊழியத்தில் உயர்த்திய ஊர் மேட்டூராகும். சகோ.தினகரன் வரம் உள்ள ஊழியனாக மக்களுக்கு அடையாளம் காட்டியதும் மேட்டூராகும்.

ஸ்டேட்பேங்க் அக்கவுன்டன்டாக பணியாற்றிய சகோ.தினகரனுக்கு மேட்டூரில் Branch  Manager    என்ற தற்காலிக பதவி கிடைத்தது.    பதவி வந்தவுடனே பெந்தேகோஸ்தே சபைகளை தேடாமல் நேரே Good Shepherd CSI சபைக்கு சென்று அங்கத்தினனானார். வாரம் ஒருமுறை புதன்கிழமைகளில் CSI ஆலயத்தில் ஜெபக்கூட்டம் நடத்த ஆசைப்பட்டார். ஆனால் ஜெபக்கூட்டம் நடத்த CSI Good shepherd Church அனுமதிக்கவில்லை.

ஆகவே அருகில் இருந்த CIG மிஷன் சபையை அணுகினார். CIG Mission Churchல் (Cylon & India General Mission Church) அப்போது ஒரு நல்ல பாஸ்டர் CT.பால் என்பவர் அந்த சபையின் பொறுப்பில் இருந்தார். அவரும் சபைமக்களும் சகோ.தினகரனுக்கு கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தனர்.

Cross  இந்த காலகட்டத்தில்தான் என்னை மேட்டூர் CSI கன்வென்ஷனில் பேச அன்று CSI குருவானவராக இருந்த Rev.Rayen என்பவர் தலைமையில் உள்ள கமிட்டி அழைத்தது. அன்று கன்வென்ஷன் கமிட்டியில் இருந்த சகோ.தினகரன் அவர்கள் என்னை தன்வீட்டில் தங்கவைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதுதான் எங்கள் இருவரின் முதல் சந்திப்பு ஆகும். என் பிரசங்கத்தை கேட்ட சகோ.தினகரன் தான் நடத்தும் புதன்கிழமை கூட்டத்தில் மாதம் ஒருமுறை பிரசங்கிக்க கேட்டுக்கொண்டார்.      அதன்மூலம் எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது.

சகோ.தினகரன் மேட்டூரில் நடத்திய அந்த ஒருநாள் கூட்டத்துக்கு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலிருந்தெல்லாம் வாலிபர்களாக குடும்பங்களாக கலந்துக்கொண்டனர். கர்த்தர் பெரிய காரியங்களை செய்தார். மேட்டூர் முழுவதும் அசைக்கப்பட்டது. பல குடும்பங்கள் எல்லா சபைகளிலும் சகோ.தினகரன் பிரசங்கத்தாலும் ஜெபத்தாலும் தொடப்பட்டனர்.

அங்கு கூட்டம் மிக அதிகமாக கூடியதால் கூட்டம் நடத்த கல்யாண மண்டபம் தேடினோம். அன்று மேட்டூரில் இருந்த ஒரே ஒரு கல்யாண மண்டபம் பாப்பம்மாள் கல்யாண மண்டபமாகும். அந்த கட்டிடத்தில் வைத்து கூட்டங்களை நடத்தினோம்.


பொதுகூட்ட அறிமுகம்

Cross  பொதுகூட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் சகோ.தினகரனை பேசவைத்து அறிமுகப்படுத்தியது பெங்களுர் கன்டோன்மென்ட்டில் உள்ள பாஸ்டர்.K.R.பால் என்பவராகும்.


முதல் பத்திரிக்கை

Cross  பெங்களுர் பாஸ்டர்.K.R.பால் அவர்களுடைய நெருக்கம் சகோ.தினகரனோடு அதிகமான உடன் இருவரும் சேர்ந்து பத்திரிக்கை ஊழியம் ஆரம்பித்தனர். அப்படி ஆரம்பித்த முதல் பத்திரிக்கையின் பெயர் The Living Star என்பதாகும். அந்த பத்திரிக்கையில் பாதி பாஸ்டர்.பாலின் செய்தியும், பாதி சகோ.தினகரன் அவர்களின் செய்தியும் ஊழியத்தைப்பற்றியும் வெளியிடப்பட்டது. ஆனால் உபதேச பிரச்சனை காரணமாக லிவ்விங் ஸ்டார் என்ற பத்திரிக்கையிலிருந்து சகோ.தினகரன் விலகினார்.


முதல் புத்தகம்

Cross  சகோ.தினகரன் பிரசங்கித்த பிரசங்கங்களை தொகுத்து ஒரு புத்தகமாக எழுதவேண்டும் என்று சகோ.தினகரன் ஆசைப்பட்டார். அந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அப்படியாக குணமாக்கும் தழும்புகள், வியாதி எதனால் வருகிறது என்ற தலைப்பில் எழுதினேன். அதன்பின் அதையே குணமாக்கும் தழும்புகள் என்ற பெயர்மாற்றி புத்தகத்தை சகோ.தினகரன் வெளியிட்டார். சகோ.தினகரன் அவர்கள் இதுவரை பிரசங்கித்த செய்திகளின் கருப்பொருளை வைத்து முதல் புத்தகத்தையும் எழுதிமுடித்தேன்.        அந்த புத்தகத்தின் முடிவுரையாக 5வது அத்தியாயத்தை மட்டும் சகோ.தினகரன் எழுதிமுடித்தார். அந்த முதல் புத்தகமான வியாதி எதனால் வருகிறது புத்தகத்தை பிரதிஷ்டை செய்ய பெரிய கூட்ட ஏற்பாடு செய்து அது வெளியிடப்பட்டது. ஏராளமானபேர் அதை வாசித்து பயன்பெற்றனர். வியாதி எதனால் வருகிறது என்ற அந்த புத்தகத்தை என் பத்திரிக்கை அச்சிடும் அச்சகத்திலேயே நான் கொஞ்சம் பணம்போட்டு, சகோ.தினகரன் கொஞ்சம் பணம்போட்டு, கொஞ்சம் கடனும் வாங்கி அந்த முதல் புத்தகத்தை அச்சிட்டு வெற்றிகரமாக வெளியிட்டோம். அந்த புத்தகம் அமோகமாக விற்றதால், வந்த பணத்தில் கடன்களை அடைத்து விட்டோம். அதன்பின் குணமாக்கும் தழும்புகள் என்ற பெயர்மாற்றி அந்த புத்தகத்தை பல பாஷைகளில் சகோ.தினகரனே பொறுப்பேற்று அச்சிட்டு வெளியிட்டார்.      அந்த புத்தகங்களில் முதல்பக்கத்தில் என் புகைப்படத்தை போட்டு அதை நான் எப்படி எழுதினேன் என்ற முகவுரையுடன் எல்லா பாஷை புத்தகங்களிலும் வெளியிடப்பட்டது. அதன்பின் என் புகைப்படம் நீக்கப்பட்டது. அதுவேறு விஷயம்.

Cross  அந்த நாட்களிலேயே 1969ம் வருடம் முதல் நான் கடிதமும், செய்தியும்  NEWS LETTER என்ற பெயரில் சொந்த பத்திரிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தேன்.


முதல் வானொலி ஊழியம்

Cross  1964ம் ஆண்டே நான் FEBAவில் நற்செய்தி என்ற வானொலி நிகழ்ச்சியில் நான் தொடர் பிரசங்கம் செய்துகொண்டிருந்தேன்.    Rev.ஆப்பில் பீ என்பவர் என்னை அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து உபயோகித்தார்.    சகோ.தினகரனும் ரேடியோவில் பேசவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு பெங்களுர் சென்று FEBA வானொலி நிலைய அதிகாரிகளுடன் பேசி, வாரம் 15 நிமிடம் பிரசங்கிக்க சிபாரிசு செய்தேன். ஆனால் அவர்கள் உடனே அனுமதிக்கவில்லை. காரணம், சகோ.தினகரனின் பிரசங்கத்தை எப்படியிருக்கிறது என்று முதலில் நாங்கள் கேட்கவேண்டும், அதன்பின்தான் நாங்கள் தீர்மானித்து முடிவுக்கு வரமுடியும் என்றார்கள்.    அந்நாட்களில் பிரசங்கத்தைபோட்டு காண்பிக்க கேஸட்டுகள் கிடையாது.    ஆகவே பிரசங்கத்தை பதிவுசெய்து அவர்களுக்கு காண்பிக்க முடியவில்லை. ஆகவே FEBA நிலைய அதிகாரிகளே தங்கள் நிலைய ஊழியரும், என் நண்பருமான Bro.வீரராஜ் என்பவரை மேட்டூரில் சகோ.தினகரன் பேசும் புதன்கிழமை கூட்டத்துக்கு பிரசங்கம் கேட்க அனுப்பி வைக்கப்பட்டு விவரம் அறிந்தனர். அதன்பின்தான் நிகழ்ச்சி ஒலிப்பரப்ப ஒத்துக்கொண்டனர். நானும், சகோ.தினகரனும் பெங்களுர் ரிக்கார்டிங் ஸ்டேஷனுக்கு சென்று சுமார் 6 மாதத்துக்கு சகோ.தினகரனின் தொடர்செய்தி வெளிவரும்வகையில் பிரசங்கம் நிகழ்த்தி பதிவு செய்யப்பட்டது. அறிமுகமும், அறிவிப்பும் நானே செய்தேன். அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பெயர் வைக்கவேண்டும் என்றனர். அப்படி பெயர் வைத்தால் அது ஒரு ஸ்தாபனமாக மாறிவிடும். ஆகவே பெயர் எதுவும் வேண்டாம் என்று சகோ.தினகரன் கூறிவிட்டார்.      ஸ்தாபனம் ஆரம்பிக்க கர்த்தர் என்னை அழைக்கவில்லை. சுவிசேஷம் அறிவிக்கவே என்னை அழைத்தார் என்று கூறி எந்த பெயரும் அந்த நிகழ்ச்சிக்கு கொடுக்காமல் நாங்கள் திரும்பிவிட்டோம். (அப்படிப்பட்ட ஊழிய உறுதியோடு இருந்த தினகரன்தான் இன்று கல்லூரியும், பல ஸ்தாபனங்களும் ஆரம்பித்து ஆரம்பத்தில் கொண்டிருந்த விசுவாசத்திலிருந்து விலகிப்போனார்)          நாள் நெருங்கநெருங்க FEBA நிலையத்திலிருந்து சீக்கிரம் (Identificationக்கு) நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த ஒரு பெயர் கண்டிப்பாக வேண்டும் என்று என்னை துரிதப்படுத்தினர்.


முதல் பத்திரிக்கை

Cross  சகோ.தினகரன் அவர்களின் பத்திரிக்கை ஊழியம் பெங்களுர் பாஸ்டர்.K.R.பால் அவர்களுடன் இணைந்து The Living Star என்ற பெயரில் வெளியிடப்பட்ட விவரம் முன்பே எழுதினேன். சகோ.தினகரன் அவர்களின் செய்திகளால் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் பாஸ்டர்.பால் அவர்கள் முழுகி எடுக்கும் ஞானஸ்நானத்தைப் பற்றியும், அந்நியபாஷையைப் பற்றியும் மாதம் தவறாமல் எழுதுவார். அது CSI, லூத்தரன்சபை வாசகர்கள் வட்டாரத்தில் பிரச்சனை உருவாக ஆரம்பித்தது. பிஷப்மார்கள் கேள்விகேட்க ஆரம்பித்தார்கள்.        சகோ.தினகரன் கூட்டத்தில் இரட்சிக்கப்பட்டவர்களை பாஸ்டர்.பால் அவர்கள் மேட்டூரில் காவேரிநதியில் ஏராளமான பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்ததும் அவைகளின் விவரங்களை லிவ்விங் ஸ்டார் பத்திரிக்கையில் சாட்சியாக வெளியிட்டதும் அதன் காரணமாக CSI சபைகளில் சகோ.தினகரனுக்கு ஊழியதடைகள் ஏற்பட்டது. அதை பாஸ்டர்.பாலிடம் கூறியும் அவர் ஞானஸ்நானத்தைப்பற்றி எழுதுவதை நிறுத்தவில்லை.

Cross  ஆகவே சகோ.தினகரன் லிவ்விங் ஸ்டார் பத்திரிக்கையிலிருந்து விலகி, இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் பத்திரிக்கை தொடங்கினார். அதன்பின் இயேசு அழைக்கிறார் பத்திரிக்கைக்கு மிக நல்ல வரவேற்ப்பு உண்டானது. இந்த இயேசு அழைக்கிறார் பெயர் எப்படி தெரிந்தெடுக்கப்பட்டது என்பதை இந்த கட்டுரையை கீழே தொடர்ந்து வாசித்தால் முழுவிவரமும் அறிவீர்கள்.


இயேசு அழைக்கிறார்

Cross  ஈரோடு பிரப் மெமோரியல் CSI ஆலயத்தினர் ஒரு பெரிய கூட்டத்தை பொது மைதானத்தில் சகோ.தினகரனைக் கொண்டு நடத்த ஏற்பாடு செய்தனர். முதல்நாள் கூட்டம் தனிப்பாடல்களை சகோ.லைனல் அவர் துணைவியார், Prof.பென்னி, சகோ.எட்வர்ட் பால் ஆகியோர்கள் வாத்திய கருவிகளுடன் மேடையில் பாடிக்கொண்டிருந்தனர்.

Cross  மேடையில் நான், என்னருகே சகோ.தினகரன் அவர் அருகே அன்றைய CSI சபைபோதகர் Rev.U.J.எபினேசர் அமர்ந்திருக்கிறோம். அப்போது சகோ.தினகரன் என்னை தன்பக்கமாக அழைத்து மேடையின் பின்புறம் உள்ள நீலநிற திரையை கவனியுங்கள் என்றார் திரும்பி பார்த்தேன். நீலநிற துணியில் இயேசு அழைக்கிறார் என்று கூட்டம் நடத்தினவர்களே அழகாக எழுதி வைத்திருந்தினர். இயேசு அழைக்கிறார் என்ற பெயரையே நம் வானொலி நிகழ்ச்சிக்கு வைத்தால் என்ன என்றார். உடனே நான் எதுவாக இருந்தாலும் சரி, 2 நாட்களுக்குள் பெயர் அறிவித்தாகவேண்டும் என்றேன். உடனே இதையே வைத்துவிடுவோம் என்றார். நானும் சம்மதித்தேன் உடனே என் ஒரு கையை இழுத்து டேபிள்மீது வைத்து,      அதன்மீது தன் ஒரு கையை பதித்து பிரதிஷ்டை செய்வோம் என்றார். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போதகரோ, வேறுயாரும் அறியாதவண்ணம் சந்தோஷத்தோடு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் நாமத்தில் எங்கள் வானொலி ஊழியத்துக்கு இயேசு அழைக்கிறார் என்ற பெயரை பிரதிஷ்டை செய்கிறோம்.        ஆண்டவரே இதன்மூலம் ஊழியர்கள் பிரவேசிக்கமுடியாத வீடுகளிலெல்லாம் உம் நாமம் ஒலிக்கப்படவும் மகிமைப்படவும்செய்யும் என்று சிறுஜெபத்தை செய்துமுடித்தோம். அந்த பெயர்தான் பிறகு சகோ.தினகரனின் ஸ்தாபனத்தின் பெயராகவும், தன் பத்திரிக்கைக்கும் இதே பெயரை வைத்து உலகமெல்லாம் அறியப்பட்டது. இதுதான் இயேசு அழைக்கிறார் ஊழியம் தோன்றியவிதமாகும்.

Cross  இந்த ஊழியத்தில் நாங்கள் 5 பேர் இணைந்து செயல்பட்டோம்.
                      1). சகோ.U.B.லைனல்,
                      2). Prof.பென்னி,
                      3). சகோ.எட்வர்ட் பால்,
                      4). Dr.புஷ்பராஜ்,
                      5). சகோ.தினகரன்
    ஆகியோர் இணைந்து "இயேசு அழைக்கிறார்" என்ற ஊழியத்தை ஒரு குழுவாக தொடங்கி நடத்தினோம்.    இந்த இயேசு அழைக்கிறார் ஊழியத்தில் நாங்கள் 5 பேரும் குடும்பமாக பல்வேறு இடங்களுக்கு சென்று சுவிசேஷ ஊழியத்தை சேர்ந்து நிறைவேற்றினோம்.      இதனுடைய படத்தை அடுத்த பக்கத்தில் காணலாம்.


முதல் இயேசு அழைக்கிறார் குடும்பம்

சுவிசேஷம் அறிவிப்பதற்கென்றே நாங்கள் 5 குடும்பங்களும்,    பல்வேறு இடங்களிலிருந்து ஒன்றாக சேர்ந்து செயல்பட்டோம்.    ஒன்றாக ஜெபித்து, ஒன்றாக உபவாசித்தோம். ஊழியத்துக்கு சென்ற சில இடங்களில் தரையில் பாய்விரித்து படுத்து தூங்கிய இடங்கள், பள்ளிக்கூட பெஞ்சுகளை ஒன்றாக இணைத்து கட்டிலாக உபயோகித்து படுத்த இடங்களும் உண்டு. ஒவ்வொரு பொது கூட்டங்கள் நடப்பதற்குமுன் நாங்கள் 5 குடும்பங்களும் இணைந்து ஜெபித்த அந்த ஐக்கிய நாட்களுக்காக தேவனைத்துதிக்கிறேன்.

படத்தில் நிற்பவர்கள்: 1).  என் மனைவி திருமதி.வதனி புஷ்பராஜ்,
2). டாக்டர்.புஷ்பராஜ் கையில் குழந்தையாக எங்கள் மகன்.சாமுவேல் புஷ்பராஜ்,
3). Prof.U.B.பென்னி (PSG கல்லூரி, கோவை),
4). அவர் மனைவி Mrs.பென்னி (KGF பாஸ்டர்.நிக்கல்சன் அவர்களின் மகள்),
5). திருமதி.எட்வர்ட்பால் (ஆசிரியை, கோவை),
6). திருமதி.ஸ்டெல்லா தினகரன்,
7). சகோ.எட்வார்ட்பால் கையில் அவருடைய மகன்,
8). நாற்காலியில் அமர்ந்திருப்பவர் சகோ.D.G.S.தினகரன்,
9). நிற்பவர்களில் சகோ.தினகரனுக்கு அருகே கமிஷனரான சகோ.U.B.லைனல் அருகே நிற்கும் சிறுவன் இன்றைய கிறிஸ்தவ பாடல்கள் வெளியிடும் பிரபல மியூசிக் டைரக்டர்.லெவ்லின் என்பவராகும்.
10). அருகே திருமதி.லைனலும் அவர்களின் ஒரே மகள்.

முதல் இயேசு அழைக்கிறார் குடும்பத்தில் சகோ.எட்வர்ட்பால் அவர்கள் நல்ல ஊழியம் செய்து கர்த்தரிடம் சென்றுவிட்டார்.


இயேசு அழைக்கிறார் ஊழியம் உடைந்தது

Cross  சகோ.தினகரன் முதன்முதல் அமெரிக்கா பயணம் சென்றுவந்தவுடன் அவர் சிந்தனை,        பாரம் எல்லாம் தலைகீழாக மாறியதை உணர்ந்தோம். அமெரிக்காவில் ஓரல்ராபர்ட் யுனிவர்சிட்டியை சென்று பார்த்து திரும்பியவுடன் அதைப்போன்ற ஒரு யுனிவர்சிட்டி இந்தியாவில் தொடங்க வேண்டும் என்றார். இந்த எண்ணத்தை முதன்முதல் கனடா நாட்டில் இவர் தங்கின வீட்டாராகிய கன்னியாகுமரி மாவட்டம் James  Townஐ சேர்ந்த Mr & Mrs.தங்கராஜ் அவர்களோடு அவர்கள் வீட்டு பேஸ்மென்ட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அதை பகிர்ந்துக்கொண்டார்.      இது முதல்சாட்சி. அதன்பின் இந்தியா திரும்பியவுடன் எங்கள் 4  பேர்களுடனும் பகிர்ந்துக்கொண்டார். ஆனால் அப்போதே எங்கள் குழுவில் சகோ.எட்வர்ட்பால் என்பவர் அந்த திட்டத்தை எதிர்த்துப் பேசினார். கர்த்தர் நம்மை கூட்டி சேர்த்தது, அழைத்தது சுவிசேஷம் அறிவிக்க மட்டுமே.      கல்லூரிகட்டி பிஸினஸ் செய்வதற்கல்ல என்றார்.      இத்திட்டத்துக்கு நாங்கள் யாரும் ஒத்துழைக்க மாட்டோம் என்றோம். ஏழைகளுக்காகவே கல்லூரியை நடத்துவோம் என்றார். ஆனால் நாங்கள் நால்வரும் ஒரே வார்த்தையில் கல்லூரி நடத்தக்கூடாது என்றோம்.        ஆனால் சகோ.தினகரன் பிடிவாதமாக கல்லூரி ஆரம்பித்தே ஆகவேண்டும் என்றார். அன்றே நாங்கள் நால்வரும் ஒரே நாளில் அவரைவிட்டு பிரிந்தோம். அதற்காக சகோ.தினகரன் கவலைப்படவில்லை. தன்னை தாங்க ஊக்குவிக்க இப்போது பிஷப்மார்களும்,      பெரிய பெரிய பணக்காரர்களும் பக்கபலமாக இருந்ததால் எங்கள் பிரிவை குறித்து அவர் கவலைப்படவில்லை.


காருண்யா தொடங்கப்பட்டது

Cross  முதல் பொய்:  சகோ.தினகரன் கூறியது ஒருநாள் தூதர்கள் சிலர் ஒரு கட்டிட பிளேனுடன் என்முன் தோன்றி காருண்யா கல்லூரியை உங்களைக் கொண்டுதான் ஆரம்பிக்க கர்த்தர் சொல்லி அனுப்பினார் என்பதாகும். ஏற்கனவே கனடாவில் ஒரு குடும்பத்தினரிடமும், எங்களிடமும் 5 வருடத்துக்குமுன்பே ஓரல்ராபர்ட் யுனிவர்சிட்டிபோல் ஒரு கல்லூரி ஆரம்பிக்கவேண்டும் என்று பகிர்ந்துக்கொண்டதை அவர் மறைத்துவிட்டார்.        ஆனால் இப்போதோ தூதர்கள்தான் முதன்முதல் இந்த ஆலோசனையை கொண்டுவந்தார்கள் எனக்கு ஒன்றும் தெரியாது என்றார். அப்போதே சகோதரன் அவர்கள் வழிவிலக ஆரம்பித்துவிட்டார் என்பதை உணர்ந்து நாங்கள் வேதனைப்பட்டோம்.

Cross  வானொலியிலும், கூட்டங்களிலும் அவர் செய்த முதல் பிரசங்கத்திலும் புதிதாக ஆரம்பித்த இயேசு அழைக்கிறார் பத்திரிக்கையில் அறிவித்ததும் ஏழைக்களுக்காகவே ஆரம்பிக்கும் கல்லூரிக்கு உதவுங்கள், காணிக்கைக் கொடுங்கள் என்பதாகும். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கூட்டத்திலும் அறிவித்தார்.    ஏராளமானவர்கள் காணிக்கைகளை அள்ளிக் கொடுத்தனர். கல்லூரி தொடங்கப்பட்டது. காணிக்கை கொடுத்தவர்களுடைய பிள்ளைகளுக்கு கல்லூரியில் முதலில் சீட் கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் அதன்பின்தான் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதை அறிந்தார்கள். லட்சக்கணக்கில் டொனேஷன் கொடுக்காமல் கல்லூரியில் யாரையும் அவர் சேர்க்கவில்லை.    ஏழைகுருவானவர்களின் பிள்ளைகளை பிஷப்மார் சிபாரிசு செய்தார்கள்,      மிஷனரி ஸ்தாபனம் தங்கள் மிஷனரி பிள்ளைகளை காருண்யாவுக்கு அனுப்பினார்கள்.      ஆனால் அவர் கொஞ்சம்கூட இரக்கம் பாரட்டவில்லை. அவர்கள் யாருக்கும் சீட் கொடுக்கவில்லை.

Cross  காருண்யாவில் மலையாளிகள் குவிந்தனர், அரேபிய நாடுகளில் வாழும் கொழுத்த பணமுடையவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக பல லட்சங்களை கொடுத்து தன் பிள்ளைகளை சேர்த்தார்கள். காருண்யாவில் பணம் பெருகியது. மகன்.பால் சகோ.தினகரன் அவர்கள் ஊழியத்துக்கு படிக்கவிடாமல் வியாபாரதுறைக்காக MBA படிக்கவைத்தார். வருடத்துக்கு, ஒரு வகுப்பில், ஒரே ஒரு ஏழை மாணவனுக்காவது ஒரு சீட் கொடுத்து, டொனேஷன் வாங்காமல் சேர்த்திருந்தால் ஆண்டவர் எத்தனை சந்தோஷப்பட்டிருப்பார்! எத்தனையோ பேர் டொனேஷனை எதிர்த்து கண்டன குரல் எழுப்பினர்,    துண்டுப்பிரதிகளை வெளியிட்டனர். அவர் கல்லூரி தொடங்கும்முன் ஏழைகளுக்காகவே என்று கூறிய விவரத்தை இதே கட்டுரையில் முதல்பக்கத்தில் படித்துப்பாருங்கள். எத்தனையோ ஊழியர்கள் கெஞ்சிப்பார்த்தும் ஏழைபிள்ளைகளுக்கு ஒரு சீட்கூட அவர் கொடுக்கவில்லை.


உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடுகிறேன்

Cross  பிரபல வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளரும், மிஷனரி ஸ்தாபன தலைவருமான பிரபல ஊழியர் ஒருவரின் மகளுக்கு சீட் கேட்டு சென்றார். சகோ.தினகரன் விமான நிலையம் சென்றுகொண்டிருப்பதாக அறிந்தவுடன் விமான நிலையத்திலேயே தன் மகளுடன் சகோ.தினகரனை சந்தித்தார். அந்த ஏழை மகள் தினகரன் மாமா! எனக்கு எப்படியாவது ஒரு சீட் கொடுங்கள் என்று கேட்க, உங்களுக்கு இல்லாத சீட்டா! என்று கூறி ஒரு சிபாரிசு கடிதம் எழுதி இதை கல்லூரி பிரின்சிபாலிடம் கொடுத்து மகளை காருண்யாவில் சேர்த்துவிடுங்கள் என்று கூறி ஜெபித்து அனுப்பிவைத்தார். ஆனால் கல்லூரியில் அந்த சிபாரிசு கடிதத்தை பொருட்படுத்தவில்லை. முதல் கேள்வியே எவ்வளவு பணம் கொடுக்கமுடியும்.    அந்த பிரபல ஊழியர் கூறினார் நான் மிஷனரி ஸ்தாபனத்தின் ஸ்தாபகனாக இருந்தாலும் மற்ற மிஷனரிகள் வாங்கும் சம்பளம்தான் நானும் வாங்குகிறேன். டொனேஷன் கொடுக்கும் அளவு எனக்கு பணசேமிப்பு இல்லை, கடன் வாங்கி மகளை படிக்கவைக்கும் நிலையிலும் நாங்கள் இல்லை என்றார்.    சரி அப்ளிகேஷனை வைத்துவிட்டுபோங்கள். பதில்  அனுப்புகிறோம் என்றார்கள்.      சில நாளிலேயே சீட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.        ஆனால் அந்த ஏழைபெண் பெரிய எதிர்பார்ப்போடு எல்லாரிடமும் தினகரன் மாமா எனக்கு காலேஜில் இடம் கொடுத்துவிட்டார் என்று கூறி அறிவித்து சந்தோஷத்தோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் இருந்தாள். ஆனால் இடம் இல்லை என்று அறிந்தவுடன் அந்த பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானாள்.      அந்த ஊழியரின் குடும்பம் இந்த தோல்வியை தாங்காமல் கண்ணீர்விட்டது. இத்தனைக்கும் சகோ.தினகரனின் செய்தியை தன் ஸ்தாபன வானொலியில் இலவசமாக ஒலிக்கசெய்து உதவினார்.      அவருடைய பிள்ளைக்கே இடமில்லை என்று அறிந்த பல ஊழியர்கள் மிகவும் கோபப்பட்டனர்.

Cross  ஆனால் இயேசு நல்லவர், ஊழியரின் அதே மகளுக்கு வெல்லூர் CMC ஆஸ்பத்திரியில் காருண்யாவைவிட உயர்ந்த படிப்பு படிக்க இடம் கிடைக்க செய்தார் கர்த்தர். MBBS முடித்து MD படிப்பையும் அந்தப்பெண் முடித்தார். இதை நான் கேள்விபட்டவுடன் சகோ.தினகரன் வானொலியில் அறிவித்த பொய் அறிவிப்புதான் நினைவுக்கு வந்தது.      ஏழைகளுக்காகவே இந்த கல்லூரி ஆரம்பிக்கப்படுகிறது, இதை ஜனங்கள் நம்புவதற்கு தன் தகப்பனார் கண்ணீர் விட்டார் என்றும் தான் படிக்க கல்லூரி தேடிசென்றபோது டொனேஷன் கொடுக்கமுடியாமல் தோல்வியுற்றவராய் தற்கொலைவரை சென்றதாக எல்லாம் சகோ.தினகரன் அறிவித்தது காணிக்கை அனுப்பிய அத்தனை பேரையும் முட்டாளாக்கியது. இப்படி நூற்றுக்குநூறு பொய் சொல்லிதான் காருண்யா கல்லூரியை ஆரம்பித்தார், இதை இல்லை என்று யாராவது நிரூபிக்க முடியுமா? நான் எழுதியதற்கு ஆதாரம் அவருடைய இயேசு அழைக்கிறார் பழைய பத்திரிக்கை செய்திகளே (ஆதாரம்) போதும். அதில் எழுதப்பட்பட அந்த விளம்பரத்தை வாசித்தால்போதும் நான் எழுதியது உண்மை என்று விளங்கும்.

Cross  அநேக வருடங்களாக ஜனங்கள் ஏமாற்றப்பட்டதை தொடர்ந்து ஜாமக்காரனில் இவைகளைக் குறித்து எழுதியதால் பலர் சகோ.தினகரன் அவர்களை கேள்வி கேட்க ஆரம்பித்தார்க்ள. அதன் பலனாக இப்போது சில வருடங்களாக ஒரு சில ஏழை மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கொடுத்துள்ளார் என்று அறிந்தேன். அதுவும் கல்லூரி டொனேஷன் சம்பந்தமாக எழுந்த குற்றசாட்டுகள் அனைத்தும் பொய் என்று நிரூபிக்க ஏழைகள் எங்கள் காருண்யா கல்லூரியிலும் உண்டு என்று காண்பிக்கவே இந்த தந்திர ஏற்பாடு என்கிறார்கள்.


கல்லூரியை யுனிவர்சிட்டியாக்க
இவர்களின் சாட்சியற்ற செயல்

Cross  காஞ்சி சங்காரச்சாரியார் தங்கியிருந்த இந்து ஆலயத்துத்துக்கே சென்று விக்கிரக பூஜை சாமான்களை அவருக்கு பரிசாக அளித்தது. கிறிஸ்தவர்கள் உள்ளத்தில் மிகுந்த வேதனையை கொடுத்தது. சங்கராச்சாரியருக்கு வேதபுத்தகம் பரிசளித்து இருக்கலாமே என்றார்கள்! இந்த  மோசமான செயலின்மூலம் சகோ.தினகரன்,      தம்பி.பால் தினகரனின் ஆவிக்குரியநிலை எவ்வளவாய் தாழ்ந்து சாட்சியில்லாமல்போனது என்று அன்றைய கிறிஸ்தவ பத்திரிக்கைகளும் தினசரி பத்திரிக்கைகளும் சுட்டிக்காட்டியதை யாவரும் அறிவார்கள்!          காருண்யா கல்லூரியை யுனிவர்சிட்டியாக மாற்ற எந்த விக்கிரகத்தின் கால்களிலும் விழத்தயார் என்பதல்லவா இதன் அர்த்தம். (இதன் முழுவிவரமும் சங்கராச்சாரியருக்கு பூஜைசாமான்களை பரிசாக கொடுக்கும் புகைப்படத்தோடுள்ள முழு விவரத்தையும் 2005 பிப்ரவரி ஜாமக்காரனில் காணலாம்).


தேவதண்டனை வந்தது

Cross  சகோ.தினகரனை சுவிசேஷம் அறிவிக்கவே கர்த்தர் தெரிந்துக் கொண்டார். ஆனால் அவரின் எண்ணம் தன் மகனுக்கு ஒரு தொழில் ஏற்படுத்தி கொடுக்கும் திட்டத்தில் இறங்கியது.      அதை நாங்கள் எல்லாரும் தடுத்தும் கேட்கவில்லை.        தேவன் சகோ.தினகரனை எச்சரிக்க தன் இரண்டாம் ஆயுதமாகிய சிட்சையை கையில் எடுத்தார். மகள் கார்விபத்தில் மரித்தாள் - இது விபத்தல்ல, தேவ தண்டனை! தேவனின் எச்சரிப்பு! என்பதை வாசகர்கள் நன்றாக கவனியுங்கள். எந்த கல்லூரியையும் ஆரம்பிக்கவேண்டாம், ஊழியத்தை மட்டுமே தினகரன் செய்யவேண்டும் என்று பலமுறை ஆவியானவர் எச்சரித்தும்,      கேட்காமல் கடன் வாங்கியாகிலும் காருண்யா கல்லூரியை கட்டிமுடிப்பேன் என்று பிடிவாதம் கொண்டார்.      அந்த கடன்தொகையான 12 கோடியை மங்களுர் சிண்டிகேட் பேங்கிலிருந்து வாங்கிவர சகோ.தினகரன் தன் மகளோடு சென்றபோதுதான் அன்புமகளை கார் விபத்தில் பறிக்கொடுத்தார்.

Cross  பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் என்னிடம் இதைப்பற்றி பகிர்ந்துக் கொண்டபோது ஒருவாரமாக பரிசுத்த ஆவியனாவர் என் இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கிறார். ஒரே பாரமாக இருக்கிறது. போய் தினகரிடம் சொல்லு! மகள்.ஏஞ்சல் மரணம் விபத்தல்ல! என் எச்சரிப்பு என்று தினகரிடம் போய் சொல்லு என்று ஆவியானவர் கூறுகிறார் என்றார்.      உடனே நான் பாஸ்டரிடம் கூறினேன்.      நாட்கள் கடந்துபோகும் முன் தயவுசெய்து போய்சொல்லிவிடுங்கள். உங்கள் வார்த்தைக்கு அவர் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.        நிச்சயம் கேட்பார்.        தயவுசெய்து சகோ.தினகரனை காப்பாற்றுங்கள். அவர் ஊழியம் நம் இந்திய தேசத்துக்கு மிகவும் தேவை. என்னைப்போல் அல்லது மற்ற பிரசங்கியார்களைப்போலல்ல அவருடைய பிரசங்கம்.        சகோ.தினகரனின் பிரசங்கதாலந்து மிக அற்புதமானது, வித்தியாசமானது.      அந்ததாலந்து இன்று யாரிடமும் இல்லை.      (அவரை காப்பியடித்து அவரைப்போல் கைகளை நீட்டி, கண்களை மூடி பாட்டுப்பாடி, ஜெபத்தில் பெயர்சொல்லி, தீர்க்கதரிசனம் என்ற பெயரில் இப்போது பலர் மேடையில் அவரை காப்பியடித்து நடித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் எயிட்ஸ் வியாதி, சர்க்கரை வியாதி சுகமானது என்று துணிந்து பொய்களை அள்ளிவிடுகிறார்கள்.    ஆனால் சகோ.தினகரன் இந்த போலிகளைப்போலல்ல. மேலே அடைப்புக்குள் குறிப்பிட்ட வரிகள் பாஸ்டர்.சுந்தரம் அவர்களிடம் நான் கூறாதவையாகும். இதை வாசகர்கள் அறியவேண்டி எழுதினேன்).

Cross  நான் பாஸ்டர்.சுந்தரம் அவர்களிடம் பேசிமுடித்து நான் புறப்படும்போது பாஸ்டர் அவர்கள் கூறினார்.  இன்னும் இரண்டு நாட்களில் நான் தினகரன் வீட்டுக்கு சென்று ஆவியானவர் கூறியதை அறிவிப்பேன் என்று கூறினார். அதைப்போலவே 5 நாட்கள் கழித்து பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் எனக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டுதான் தினகரிடம் கூறிவிட்டதாகவும், என் கடமை முடிந்துவிட்டது என்பதாகவும் அறிவித்தார்.      உடனே நான் சகோ.தினகரன் என்ன பதில் கூறினார் என்று கேட்டேன். அவர் அதற்கு பதில் கூறாமல் தயங்கியவண்ணம் சகோ.தினகரன் மிக உயரத்தில் போய்விட்டார், இறங்குவது கடினம் என்றார். இதே பதிலைத்தான் பாஸ்டர்.ஜீவானந்தமும் என்னிடம் கூறினார்.        (பாஸ்டர்.ஜீவானந்தம் அவர்களுக்கும் வானொலி ஊழியத்தை நான்தான் ஆரம்பித்து கொடுத்து நானே அந்த நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக இருந்தேன்).

Cross  ஆகவே கர்த்தர் ஆவியானவர் மூலமாக சகோ.தினகரன் அவர்களை போதுமான அளவு எச்சரித்துவிட்டார்,    மகள்.ஏஞ்சல் மரணம் மூலமாக பெரும் அதிர்ச்சி எச்சரிப்பை நிகழ்த்தினார். பல ஊழியர்கள் மூலமாகவும் எச்சரித்தார். இப்போது சகோ.தினகரனின் அத்தியாயம் முடிந்தது.


ஆபத்தும், எச்சரிப்பும்

Cross  சகோ.தினகரன் ஊழியமும், தனிப்பட்ட வாழ்க்கையும் முடிந்துபோனாலும் ஒரு பெரிய பிழையான ஊழியமுறையை வல்லமை முகாம் (Power Ministry) என்ற பெயரில் பல வருடங்களுக்கு முன் ஆரம்பித்து 10 நாட்கள் பயிற்சி கொடுத்து பிழையான ஊழியர்கள் பலரை உருவாக்கிவிட்டார்.      அதன் விளைவாகத்தான் அதில் பயிற்சி எடுத்தவர்கள் இன்று ஜெபத்தில் பெயர் அழைக்கிற ஊழியத்தை நடத்திவருகிறார்கள்.        இவர்கள்தான் எயிட்ஸ் சுகமாவதை கர்த்தர் காண்பிக்கிறார் என்ற பொய் வெளிப்பாடுகளை கூறுகிறவர்கள். இவர்கள்தான் கிறிஸ்தவர்களில் மிகப்பெரிய கூட்டத்தை வசனத்தைவிட்டு பிரித்து கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் கூட்டத்துக்கு பிஷப்மார்கள், குருமார்கள், கிறிஸ்தவ தலைவர்கள் தலைமை தாங்கினாலும் உண்மை கிறிஸ்தவர்கள் யாரும் இப்படிப்பட்ட ஊழியர்களை ஊக்குவிக்காமலும், பின்பற்றாமலும் இருக்க ஜாக்கிரதையாக இருங்கள் என்று அறிவிக்கிறேன்.

குறிப்பு: எனக்கும், சகோ.தினகரன் அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும், எங்கள் குடும்பத்துக்கும் உள்ள நெருக்கம், அன்பு, வெளிவுலகத்துக்கு தெரியாது. ஆகவே இந்த துக்கமான சூழ்நிலையில் பலவிதமான கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் தன்னிலை விளக்கமாக இவைகளை நான் எழுதுவது அவசியம் என்று உணர்ந்தேன். ஆதலால் இதை எழுதினேன்.

Cross  ஒருவர் மரித்தால் அந்த குடும்பம் ஆறுதல்பட மரித்தவரின் நல்ல விஷயங்களை மட்டுமே குறிப்பிட்டு அவரைப்பற்றி புகழ்த்தி எல்லாரும் பேசுவார்கள்.

Cross  ஆனால் சகோ.தினகரன் இந்தியா அனைத்திலும், உலகத்தின் பெரும்பகுதியிலும் அறியப்பட்டவர், ஆகவே அவரின் வாழ்க்கையின் நல்ல பகுதியையும், ஊழியக்காரர்கள் பின்பற்றக்கூடாத அவரின் வாழ்க்கையில் காணப்பட்ட பிழையான பகுதிகளையும் அறிந்துகொள்வது மிக முக்கியம். ஆகவே நான் அவரின் இரண்டு பகுதிகளையும் எழுதியுள்ளேன்.

Cross  ஜாமக்காரன் எல்லாரும் வாசிக்கும் பொதுவான பத்திரிக்கையல்ல. ஆகவே என் எழுத்தும் ஆலோசனையும் எச்சரிப்பும் என் வாசகர்களுக்கு மட்டுமே. என் வாசகர்களுக்கு நான் இதுவரை எதையும், என்னைப் பற்றியும்கூட மறைத்ததில்லை. இந்த பத்திரிக்கை மற்றவர் கையில் கிடைத்து அவிசுவாசிகளுக்கு இடறல் உண்டாக்கியிருக்குமானால் அதற்கு நான் பொறுப்பல்ல.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM