சபையின் மரண அறிவிப்பு-2

இவர்கள் என்ன ஆவியை உடையவர்கள்?

பிப்ரவரி 2008 ஜாமக்காரனில் சபையின் மரண அறிவிப்பு என்ற தலைப்பில் திருநெல்வேலி CSI      டையோசிஸ்ஸில் பதவி அடிப்படையில் ஏற்பட்ட சண்டையும் அதன் விளைவாக குருமார்கள் வீதியில் தங்கினதையும் சபைக்குள் போலீஸ் புகுந்ததையும் குறித்து எழுதியதை வாசித்தீர்கள்.

நிலைமை அமுங்கிவிடும்,        சரியாகிவிடும் என்று பலர் பாரத்துடன் எதிர்ப்பார்த்தனர்.      ஆனால் நிலைமை மிக மோசமாக மாறி பிரச்சனை உச்சக்கட்டத்தில் சென்றுள்ளதை இப்போது வெளியிடப்பட்ட படத்தை காணும்போது அறியலாம்.

பிஷப் அவர்கள் குருவானவர்களின் விசேஷ கூட்டத்தை பாளை-ஊசிகோபுர ஆலயத்தில் கூட்டினார்.    அதில்பேச பிஷப் வரும்போது சிலர் ஆலயத்தின் உள்ளே புகுந்து பிஷப் அவர்களை தாக்கி முகத்தில் குத்தி, அவருடைய அங்கிகளை கிழித்து பாளையங்கோட்டை கதீட்ரல் ஆலயத்தின் பொருள்களை உடைத்து, பிஷப் அவர்களின் கார் நொறுக்கப்பட்டது. பிஷப் அவர்களை பாதுகாக்கவந்த குருமார்களில் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர். பிஷப் அவர்களும், அடிப்பட்டவர்களும் அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பழைய லேசெயலர் A.D.J.தினகர், அவர்களுடைய சகோதரர்களான ராபர்ட் மனோகர் இவரது மைத்துனர்.ஜெபக்குமார் இவர்களுடன் சேர்ந்து மொத்தம் 36 பேர்களின்மீது பிஷப்பை கொலைசெய்ய முயன்றதாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.      எலக்ஷனில் ஜெயித்த பார்ட்டியிலும் சிலரை கைது செய்து உள்ளனர். இந்த காட்சிகள் நெல்லை, தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் தினசரி செய்திதாள்களில் பக்கம் பக்கமாக புகைப்படங்களோடு செய்திகளாக வெளிவந்ததை கண்ட அனைத்து CSI கிறிஸ்தவர்களும் அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளிவரவில்லை. பிஷப்பை தாக்கிய கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை மிகவும் அசிங்கப்படுத்திவிட்டனர். இது  நியாயம் கிடைக்க ஏற்பட்ட சண்டையல்ல, பதவி கிடைக்கவில்லையே என்றும் தாங்கள் கேட்டுக்கொண்டபடி நடைபெறவில்லையே என்ற ஆத்திரத்திலும், ஏமாற்றத்திலும் உண்டான கோபத்தின் வெளிப்பாடுகளாகும். பிஷப்பை குத்தியவர்களும், உடையை கிழித்தவர்களும் அடியாட்களைப் போல் நடந்துக்கொண்ட CSI அங்கத்தினராவர். அடித்தவர்கள் யாரும் பதவி கேட்கவில்லை பதவி கேட்டவர்கள் அதாவது அம்பை எய்தவர்கள் வெளியே இருக்க மற்றவர்கள் அவர்களின் சார்பில் நடத்திய தாக்குதல்களைத்தான் நீங்கள் படத்தில் காண்பது. எல்லோரும் ஒருவருக்கொருவர் உறவினர்களே! இப்போது இவைகளைப்பற்றி எழுதும் நான் பிஷப் அவர்கள் செய்தது நியாயமா? அநியாயமா? அல்லது பிஷப்பை அடித்தவர்களும் அதற்கு காரணமாக இருந்தவர்களின் பக்கமும் நியாயம் உண்டா?      சட்டம் மீறப்பட்டதா? அநியாயம் நடந்ததா?      என்பதையெல்லாம் ஆராய இதை எழுதவில்லை. உண்மையில் பிரச்சனை என்ன என்று எனக்கு சரியாக தெரியாது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்   -   பாதிப்பை உண்டாக்கியவர்களுக்கும் நான் கேட்கும் கேள்வி என்ன? நாம் யாவரும் கிறிஸ்தவர்கள்தானே! குறிப்பாக நீங்கள் யாவரும் கிறிஸ்தவர்கள்தானே? கிறிஸ்துவின் முக்கிய சாட்சிகளாக நம்மை மற்றவர்களுக்கு காட்டவேண்டியவர்கள் அல்லவா? நடந்துகொண்டமுறை அதாவது அணுகுமுறை சரியானதுதானா? என்று  நீங்கள் தற்பரிசோதனை செய்யவே இதை எழுதுகிறேன். இந்தக்கட்டுரை அனைத்து கிறிஸ்தவர்களும் அறியவேண்டிய முக்கியவிஷயமாகும். குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கள் டையோசிஸ்ஸிலும் மற்ற டையோசிஸ்ஸிலும் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.

Cross  இந்த சம்பவத்தில் பழைய லே செயலர் A.D.J.தினகர் அவர்கள் பத்திரிக்கைகளுக்கு கொடுத்த அறிக்கையில் பிஷப் அவர்களை அடியாட்கள் அடித்தது நியாயம்தான் என்பதைப்போல் பேசியிருக்கிறார்.      பிஷப்பின் செயல்பாடுகளில் மக்கள் வெறுப்படைந்ததால் இந்த தாக்குதல் நடைபெற்றது என்கிறார். இதற்கு உதாரணத்திற்கு இயேசு சாட்டையை எடுத்து என் பிதாவின் வீட்டை கள்ளர்குகையாக்கினீர்களே என்று பிஷப்பை போன்றவர்களை இயேசுகிறிஸ்துவே சாட்டையில் அடித்துவிரட்டினார்.    அதுபோல் பிஷப்பின் செயல் ஜனங்களுக்கு மத்தியில் வெறுப்பையும், ஆத்திரத்தையும் தூண்டியதால் (சபைமக்களும், என் நண்பர்களும் இயேசுவாக மாறி) இப்படிப்பட்ட தாக்குதலை ஜனங்கள் நடத்தியுள்ளார்கள் என்று அறிவித்துள்ளார். (தினத்தந்தி 10.2.2008). இப்படி திரு.A.D.J.தினகர் கூறியது தாக்குதல் நடத்த ஜனங்களை மீண்டும் தூண்டுவதுபோலாகும்.      தமிழ்நாட்டு அரசியலில் அன்றைய முதல்வரை கேட்டார்களாம்: உங்கள் கட்சி ஆட்கள் இப்படி தாக்குதல் செய்யலாமா, கட்சி தலைமையில் உள்ள நீங்கள் அதை தடுக்கக்கூடாதா என்று கேட்டதற்கு அந்த அரசியல் தலைவர் கூறியது என்ன தெரியுமா? அந்த தாக்குதலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. மக்கள் என்மேல் உள்ள ஆர்வகோளாறினால் அப்படி செய்தார்கள் என்றார்கள். ஏறக்குறைய திரு.தினகரின் பதிலும் அப்படித்தான் அமைந்துள்ளது.

பிஷப்பின் ஸ்தானத்தில் உள்ளவர்கள் எடுக்கும் எந்த தீர்மானத்தையும் அது தவறானாலும் சரியானாலும் கோர்ட்டுக்கு கொண்டுப்போனால் எந்த கோர்ட்டும் அவைகளை விசாரிக்கும்.        ஆனால் பிஷப்பை தண்டிக்க கோர்ட்டுக்கு அதிகாரமில்லை என்று சட்டவல்லுனர்கள் கூறகேட்டிருக்கிறேன்.      ஆகவே திரு.தினகர் அவர்கள் பிஷப்பின்மேலும்,      பிஷப் தீர்மானத்தின்மேலும் குற்றசாட்டுகள் கூறி எத்தனை கோர்ட்டுக்கு போனாலும் அவருக்கு சாதகமான தீர்ப்பு வராது. பிஷப்பின் செயலை கோர்ட் கண்டிக்கும், தவறு என்று கூறும். ஆனால் கோர்ட் கண்டித்தவற்றை செயல்படுத்த பிஷப்பை கோர்ட் கட்டாயப்படுத்த முடியாது.      ஆகவேதான் கடந்தகால கோர்ட் நடவடிக்கையில் ADJ.தினகர் பார்டி தோல்வி கண்டதாலும், பிஷப்பை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று அறிந்ததாலும் அந்த கோபத்தில் இப்போது சிலர் தாக்குதலில் இறங்கியிருக்கிறார்கள்.        இனி பிஷப் சுதந்திரமாக இயங்கமுடியாதபடி,        பல ஊர்களுக்கு ஆலய வைபவங்களுக்கு பிஷப் செல்லமுடியாதபடி அடியாட்களை வைத்து பயமுறுத்தி பிஷப் செயல்பட இயலாமல் இவர்களால் செய்யமுடியும். அவ்வளவே! அதற்குமேல் பிஷப்பை இவர்கள் ஒன்றும் செய்யமுடியாது.    இப்போதும் சில வாரங்களாக பிஷப் அவர்கள் வீட்டிலேயே அடைந்துகிடக்கிறார் என்று கேள்விப்பட்டேன். நற்போதக பத்திரிக்கையில் அவர் பிரயாண விவரங்களை காணும்போதே எவ்வளவு பயந்து அடைந்து கிடக்கிறார் என்பது விளங்குகிறது.


வேதம் கூறுவதென்ன?

Cross  இப்போது வேதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்: நான் இப்போது எழுதும் ஆலோசனை இயேசுவை உண்மையாக நேசிப்பவர்கள், வசனத்துக்கு கீழ்ப்படிய வாஞ்சை உள்ளவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளமுடியும்.

Cross  1 கொரி 6:7ல் நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது.    அப்படி செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தை சகித்துக்கொள்ளுகிறதில்லை. ஏன் நஷ்டத்தைப் பொறுத்து கொள்கிறதில்லை? நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள்.      நஷ்டப்படுத்துகிறீர்கள் சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே. இந்த வசனத்தில் உண்மையான கிறிஸ்தவ விசுவாசி அநியாயத்தை பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று போதிக்கிறதை கவனியுங்கள். இயேசு சவுக்கை எடுத்தார்? உண்மைதான். அவர் தெய்வம். நீங்கள் இயேசு அல்லவே! அவருக்கு தண்டிக்க, அரவணைக்க உரிமையுண்டு. அவர் கர்த்தர் நியாதிபதி.

ஆனால் நமக்கு கொடுக்கப்படுகிற வேத ஆலோசனையை கவனியுங்கள். லூக்கா 9ம் அதிகாரத்தில் குறிப்பிட்ட ஒரு ஊர்க்காரர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று இயேசுவின் சீஷர்கள் அறிந்தவுடன் (வசனம் 53, 54 இயேசுகிறிஸ்துவின் சீஷராகிய யாக்கோபும், யோவானும்.... ஆண்டவரே எலியா செய்ததுபோல் வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை (ஏசுவை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களை) அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்கு சித்தமா! என்று கேட்டார்கள். அதற்கு இயேசுவின் பதில் என்ன? அவர்களை திரும்பி பார்த்து நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி(Rebuked)னார் அல்லது (கண்டித்தார்). கிறிஸ்தவர்களாகிய நாம் எந்த ஆவியை பெற்றிருக்கிறோம். ஊழியர்களை அடிக்கும் ஆவியையா? இயேசு சொன்னார்: உங்களை சினேகிக்கிறவர்களையே சிநேகித்தால் அதில் பலன் என்ன? உங்களை வெறுக்கிறவர்களை சிநேகியுங்கள். இந்த வசனம் இயேசுவின் மிக ஆழமான தத்துவத்தை உங்களுக்கு காண்பிக்கவில்லையா?.

Cross  எலக்ஷன் நடத்தியது தவறு! அதை அறிவித்த முறை தவறு! தில்லுமுல்லு செய்து ஜெயித்துவிட்டார்கள். இவையாவும் உண்மையாகவே இருக்கட்டும், கிறிஸ்துவின் சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது என்று வேதம் போதிக்கும்போது அந்த இயேசுவின் சிந்தை என்ன?      என்பதை யோசித்துப்பாருங்கள். மத் 20:28 மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல் ஊழியஞ்செய்யவும், ஜீவனைக் கொடுக்கவும் வந்தார். அதைத்தானே பவுல், பேதுரு போன்றவர்களும் மிஷனரிகளும், இரத்தசாட்சிகளும் செய்தார்கள். சபை செயலர், கமிட்டி மெம்பர், மூப்பர்கள் இவர்கள் யாவரும் சபையில் பதவிவகிப்பவர்கள் அல்ல. ஊழியம் செய்பவர்கள், மூப்பர் என்பது ஒரு பதவியல்ல ஊழியம். ஊழியத்தை கோர்ட்டுக்கு சென்றா கேட்டு வாங்குவது? அல்லது பிஷப்பை முகத்தில் குத்தி அலங்கோலப்படுத்தி, பயப்படுத்தி ஒரு ஊழியத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள முயலலாமா! அது ஊழியம் ஆகுமா? தேவன் அதில் பிரியப்படுவாரா? தயவுசெய்து யோசியுங்கள்.

வானத்தையும், பூமியையும் உண்டாக்கின தேவன் அடிமைபோல கால்களை கழுவினதை வாசிக்கவில்லையா?    சவுக்கை கையில் எடுத்ததை மட்டுமே வாசித்த உங்களுக்கு இயேசுவின் இந்த முக்கிய சாட்சியுள்ள உபதேசத்தை கேட்கவும்,        கீழ்படியவும் மனதில்லையா?        நீங்கள் எந்த ஆவியை பெற்றிருக்கிறீர்கள்?

Cross  சபையில் ஒரு பொறுப்பில் இருந்தால் மட்டுமே ஆலயத்துக்கு திருப்பணிவிடை செய்ததாகுமா?      பொறுப்பில் இல்லாமலேயே மணவாட்டி சபையின் சரீரமான சபைக்கு, திருமண்டலத்துக்கு ஊழியம் செய்யமுடியாதா? அரசியல்கட்சியின் அணுகுமுறை வேறு!      திருச்சபையில் நம்முடைய அணுகுமுறை வேறு! நீங்கள் என்ன அரசியல்கட்சியா நடத்துகிறீர்கள்?

Cross  நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஆலயத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த வெள்ளைக்கார குருவானவர் ஒருவரை சபையின் செயலர் புல்பிட்டில் ஏறி குருவானவரின் கன்னத்தில் அறைந்து உங்களை ஆராதனை நடத்தவேண்டாம் என்று எச்சரித்தும் ஏன் வந்தீர்கள் என்றார். பிஷப் அவர்களின் கடிதத்தை காண்பித்து பிஷப் கட்டளைப்படி ஆராதனை நடத்தவந்தேன் என்றார். அவருடைய அங்கியை பிடித்து தரதரவென்று இழுத்து ஆலயவாசல்படியில் கொண்டுபோய்விட்டார். குருவானவர் ஒரு சிறு ஜெபம் நின்றவாரே செய்துபின் தன் குருமனைக்கு திரும்பிசென்றுவிட்டார்.          சபைமக்கள் யாரும் எழுந்திருக்கவில்லை ஸ்தம்பித்துவிட்டனர். அதன்பின் உபதேசியார் போன்ற ஒருவர் ஜெபித்து ஆராதனையை முடித்தார். வருடங்கள் கடந்தது. நானும் டாக்டராகி, ஊழியனாகி திருப்பணி செய்துகொண்டிருக்கும்போது ஒருநாள் CSI அல்லாத வேறு சபையை சேர்ந்த ஒரு சகோதரி தன் வீட்டருகே ரோட்டில் ஒருவர் விழுந்து கிடக்கிறார் மரிக்கும் நிலையில் இருக்கிறார், கடைசி நேரத்தில் அவருக்கு சுவிசேஷம் கூறி ஜெபிக்கவேண்டும் என்று மிகுந்த உண்மையான ஆத்மபாரத்துடன் என்னை அழைத்தார்.        நானும் உடனே சென்றேன். விழுந்துகிடந்த நபர் வயதுமுதிர்ந்த நபர். நாக்கு தொங்கி வெளியே தெரிகிறது, கையும், காலும் தளர்ந்துவிட்டது. ஒருகைமட்டும் செயல்படுகிறது. அந்த கைக்கொண்டு தளர்ந்த கையை தூக்கி என்னிடம் காண்பிக்கிறார். கண்களில் கண்ணீர்! என்ன சொல்ல விரும்புகிறார் என்று தெரியவில்லை. அவருக்கு இயேசுவை அறிவித்தேன். பாவமன்னிப்பைப்பற்றி அறிவித்தேன், ஜெபித்தேன். அதற்குள் விவரமறிந்து அந்த நபரின் உறவினர்கள் ஓடிவந்து அவரை தூக்கிச்சென்றனர். பிறகுதான் அந்த நபர் யார் என்பதை அறிந்தேன். அநேக ஆண்டுகளுக்குமுன் குருவானவரை கைநீட்டி அடித்து வெளியேற்றிய என் சபையின் நிரந்தர செயலர் ஆவார். ஜாக்கிரதை! இந்த நிலை உங்கள் யாருக்கும் வராமல் இருக்க உடனே மன்னிப்பு கேளுங்கள். ஊழியர்கள் தவறு செய்யலாம். அவர்களும் மனிதர்களே. ஆனால் அவர்களை கைநீட்டி அடிக்க தேவன் ஒரு நாளும் அனுமதிக்கமாட்டார். அதன் பலன் நிச்சயமுண்டு. (நிரந்தர செயலர் என்று நான் குறிப்பிட்டதின் அர்த்தம் திரும்பதிரும்ப அந்த செயலர் பதவிக்கு தானே வரவேண்டும் என்று பிடிவாதம் செய்பவர். இவர் பல குறுக்குவழிகளில் எலக்ஷனில் ஜெயித்து செயலராகிவிடுவார். அவர்தான் எங்கள் சபையின் நிரந்தர செயலர் எல்லாரையும் மிரட்டிகொண்டிருப்பவர். எந்த குருவானவர் வந்தாலும் அவர்முன் ஒரு அடிமைப் போல இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர். ஏறக்குறைய ஒரு ரௌடியின் ஆட்சியைதான் எங்கள் சபை அனுபவித்தது. அவர்தான் நிரந்தர செயலர்).

Cross  சபையில் ஒருவன் தவறு செய்தால் அதை எப்படி அறிவுறுத்தவேண்டும் என்று ஒரு ஒழுங்குமுறை உண்டு.      (மத் 18:15-17)      இந்த வசனத்தை வாசித்துப்பாருங்கள். நான் என் ஜாமக்காரனில் பல ஊழியர்களின் தவறுகளை வாசகர்களுக்கு சுட்டிக்காட்டி எழுதுகிறேன்.          நானும் மேற்கண்ட வசனத்தின்படிதான் படிப்படியாக செயல்படுகிறேன்.      வேத ஒழுங்கை நான் மீறவில்லை.


பிஷப்மார்களுக்கு வசனம் கொடுக்கும் ஆலோசனை

Cross  பிஷப்மார்கள் என்பதால் அவர்கள் ராஜாக்கள் அல்ல, அவர்களும் சாதாரண ஊழியர்களே. ஆனால் மிகப்பெரிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு. ஊசியின்மேல் நிற்பவர்கள்போல் அவர்கள் நிலைமை இருக்கிறது. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நியாயம் பிறழாமல்,      யாரையும் சாராமல் யாருக்கும் அடிமையாகாமல் செயல்படவேண்டும். யாரிடமாவது கைநீட்டி பணமோ, பரிசு என்ற பெயரில் எதை வாங்கினாலும் அவர்களுக்கு அடிமையாகிவிடுவீர்கள். ஜாக்கிரதை!

இயேசு கூறிய வசனம் இவர்களுக்கும் பொருந்தும். ஊழியம் கொள்ள நான் வராமல் ஊழியம் செய்யவே வந்தேன் என்ற வசனத்தை மனதிலிருந்து நீக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Cross  ஒரிசா மிஷனரியான Rev.ஸ்டெய்ன்ஸ் கிரஹாம் அவரையும், அவரது இரண்டு பிள்ளைகளையும் காரின் உள்ளே தள்ளி நெருப்பு வைத்து உயிரோடே கொளுத்தி சாகடித்தார்கள். அவரின் மனைவியிடம் அதைப்பற்றி கேட்டபோது அந்த அம்மையாரின் பதில் BJP அரசாங்கத்தையும், RSS, பஜ்ரங்தள் போன்ற தீவிரவாதிகளையும் சிந்திக்க வைத்தது. அந்த அம்மையாரின் பதில் உலகமே பாராட்டியது. என் கணவரையும், என் இரண்டு செல்லப்பிள்ளைகளையும் கொன்றவர்களை என் இயேசு மன்னித்து விட்டார். நானும் அவர்களை மன்னிக்கிறேன் என்றார்.      இந்த மாதிரியை நெல்லை பிஷப் அவர்கள் பின்பற்றியிருந்தால் இந்த பிரச்சனை இத்தனை தீவிரமாகி சாட்சி கெட்டுபோயிருக்காது.            தன்னை தாக்கியவர்களையும்,            உடந்தையாக கருதப்பட்டவர்களையும், வேலைநீக்கம் செய்யப்பட்ட குருவானவர்களையும் மன்னித்தேன் என்று ஒருவார்த்தை கூறியிருந்தால் பிஷப் அவர்களின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கும்.    மக்களின் அனுதாபமும், ஆதரவும் பிஷப் அவர்களுக்கு கிடைத்திருக்கும்.        ஆனால் பிஷப் அவர்களுடன்கூட இருப்பவர்களின் தூண்டுதலினால் பிஷப் அவர்கள் பெரிய தவறு செய்துவிட்டார்.        பிரச்சனையில்லை,        இப்போதும் திருத்திக்கொள்ள நல்ல அவகாசம் உண்டு.

Cross  பல பிஷப்மார்கள் பதவி ஏற்றவுடன் தனக்கு எதிராக வாக்களித்தவர்களை, குருவானவர்களை பழிவாங்கவும், டிரான்ஸ்பர் செய்து தன் கோபத்தையும், வெறுப்பையும் தணித்துக்கொள்கிறார்கள். ஒருகாலத்தில் தானும் சாதாரண குருவானவராக பணியாற்றி இப்படிப்பட்ட பல பிரச்சனைகளை அனுபவித்ததை இவர்கள் பதவி ஏறியவுடன் மறக்க இவர்களை செய்துவிடுகிறது.          பிஷப்பை தாக்கியவர்களும்,          அதற்கு காரணமானவர்களும், பிஷப்பும், பிஷப்பை தூண்டிவிட்டு கோர்ட்டுக்குபோக காரணமானவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை சிலுவை தியானத்தை எப்படி நடத்தியிருப்பார்களோ?

Cross  சிலுவையில் இயேசுகிறிஸ்து கூறிய முதல் வார்த்தையை தியானிக்கும்போதே இவர்களுக்கு குற்ற உணர்ச்சி வராதுபோயிருந்தால் இவர்கள் யாருமே,        பிஷப்பையும் சேர்த்து கூறுகிறேன் கிறிஸ்துவை உடையவர்கள் அல்ல. இயேசு சிலுவையில் கூறிய முதல் வார்த்தையைப்பற்றி உணர்ந்து இவர்களில் யாராவது ஒப்புரவாகாமல் பிரசங்கித்திருந்தால் அல்லது தொடர்ந்து அடுத்த ஆறு வார்த்தைகளையும் கேட்க ஆலயத்தில் அமர்ந்திருந்தால் அதற்கு பெயர் மாய்மாலமாகும்.

Cross  நீங்கள் பிஷப்பை தாக்கியதையும், முகத்தில் குத்தியதையும் பத்திரிக்கையில் பொதுமக்கள் பார்த்தார்கள். குருத்தோலைஞாயிறு அன்று உங்களை ஊர்வலத்தில் அதே பொதுமக்கள் பார்த்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? கூச்சமாக இல்லையா? என்னைக்கேட்டால் குருத்தோலை கையில் எடுக்கவும் வேதபுத்தகத்தை கையில் எடுக்கவும், கிறிஸ்தவன் என்று வெளியில் யாரிடமும் கூறவும் நீங்கள் தகுதி அற்றவர்கள்.        கர்த்தர் எத்தனையாய் அழுதிருப்பார்.

Cross  நெல்லை திருமண்டலத்தில் நிமிஷத்துக்கு நிமிஷம் அரசியல் கட்சிப்போல நிலைமை தலைக்கீழாக மாறிக்கொண்டிருக்கிறது.        இந்த பத்திரிக்கை செய்தியை நான் மார்ச் 20ம் தேதி எழுதிக்கொண்டிருக்கும்போது திரு.வைகுண்டராஜ் அவர்கள் இந்துக்களின் கதையில் பாரதயுத்தத்தில்வரும் கிருஷ்ணனைப்போல் இப்போது எதிர்பார்டிக்கு தன் ஆதரவை அளித்துள்ளார் என்று புதுசெய்தி கேள்விப்பட்டேன். என்ன ஒப்பந்தமோ? என்ன நோக்கத்தில் அவர் பிஷப்பை கைவிட்டாரோ? தெரியவில்லை. இதை அறிந்து அழுவதா! சிரிப்பதா! என்றே புரியவில்லை.

Cross  நெல்லை - தூத்துக்குடி - மதுரை அத்யட்சாதீனத்தின் மக்கள் மிகவும் அதிகமாக ஜெபிக்க வேண்டியநிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் கன்வென்ஷன் பிரசங்கங்கள் கேட்டது போதும், அளவுக்கு அதிகமாக உங்களுக்கு செய்திகள் ஆவியானவரால் அருளப்பட்டாகிவிட்டது.        இனி கூடிகூடி ஜெபியுங்கள். தீர்க்கதரிசனம் கூறாமல் ஜெபம் மட்டும் செய்யுங்கள்.      சபைக்காக, சபை    பொறுப்பாளர்களுக்காக, குருமார்களுக்காக, உபதேசியார்களுக்காக, பிஷப்மார்களுக்காக கண்ணீர்விட்டு ஜெபியுங்கள். கன்வென்ஷன் உங்கள் அத்யட்சாதீனத்தை மாற்றாது.        உங்கள் டையோசிஸ்ஸில் உள்ள இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் கூடி ஜெபிப்பதின் மூலமே மாற்றம் உண்டாகும். நானும் ஜெபிக்கிறேன்.

Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM