சபையின் மரண அறிவிப்பு
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.
- வெளி 3:1.

சரித்திர பிரசித்தப்பெற்ற மிஷனரிகள் இரத்தம் சிந்தி ஆரம்பித்து வைத்த திருநெல்வேலி CSI டையோசிஸ்ஸின் இன்றைய நிலையைதான் நீங்கள் படத்தில் காண்பது.      பிரச்சனைகளை சபைக்குள் வைத்து பேசி தீர்க்க வேண்டியதுதான் சரியான முறையாகும்.      ஆனால் பிரச்சனைகள் வீதிக்கு கொண்டுவந்துவிட்டனர். குருமார்கள் வீதியில் பிஷப் வீட்டின்முன் தரையில் உட்காரவைத்துவிட்டனர். அடுத்தபடம் தேவஆவியானவரின் அசைவாட்டம்தான் சபையில் காணப்படவேண்டும். தேவதூதர்கள்தான் சபையை பாதூக்கவேண்டும். ஆனால் இன்று சபையை போலீஸ் பாதுகாக்கவேண்டிய நிலை உருவாகிவிட்டது.            இவைகளை என்ன என்பீர்கள்?            திருநெல்வேலி டையோசிஸ்ஸின் அதிகார பூர்வசபையான கத்தீட்ரல் முழுவதும் (ஊசிகோபுரம்) போலீஸ் காவல் இருந்தும் மீட்டிங் நடந்த அந்த ஆலயத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.            கண்ணாடி,            ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. கிறிஸ்தவர்களின் சாட்சி பொதுமக்கள் முன் கெட்டுப்போயிற்று. இப்படங்கள் வாரப்பத்திரிக்கைகளிலும்,            தினசரி பத்திரிக்கை(தமிழ்-ஆங்கிலம்)களிலும் வெளிவந்து இந்தியாவே காணும்நிலை வந்தது, குறிப்பாக RSS இயக்கங்கள் சிரித்து மகிழ்ந்தது.

Cross  கோர்ட்டில் உள்ள இந்துமத நீதிபதியானவர் திருச்சபை கிறிஸ்தவ எலக்ஷன் எப்படி நடத்த வேண்டும், சண்டையை எப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கொடுத்தாக அறியப்படுகிறது. பெரும்தலைக்குனிவு ஆகும்.      சபையின் சட்டம் வேதத்தில் திட்டமாய் எழுதப்பட்டுள்ளது   -   கோர்ட் கூறியபடியல்ல.   ஆனால் வேதபுத்தகம் கூறும் சட்டப்படி செயல்படுத்த யாருக்கும் நாட்டம் இல்லை. இவர்களுக்கு வேதபுத்தகம் எதற்கு? வருங்கால திருச்சபை வாலிபர்களுக்கு இவர்களில் யாராவது கிறிஸ்தவ ஆவிக்குரிய அணுகுமுறை என்ன? என்பதை கூறி வழிகாட்ட முடியுமா? ஆகையால் பிரச்சனைக்கு காரணமான எலக்ஷனுக்கு நின்ற இரண்டு குழுவினரும் தங்கள் தகுதியை இழந்துவிட்டனர்.   அதனால்தான் இதை சபையின் மரண அறிவிப்பு என்றேன்.

கோர்ட்டுகளில் வழக்குகள்-எத்தனை! எத்தனை ஸ்டேஆர்டர்கள்!. பணத்தை லட்சங்களாய், கோடிகளாய், இறைக்கப்பட்டாலே ஸ்டே வாங்கவும், ஸ்டேயை உடைக்கவும் முடியும். இந்த லட்சங்கள், கோடிகள் யாருடையது. அவரவர்கள் தொழில்களில்! வியாபாரங்களில்! கிடைத்த லாபத்திலா? எடுத்து இவைகளுக்காக செலவழித்துகொண்டிருக்கிறார்கள்!?      அத்தனையும் சபைமக்களின் கண்ணீர் காணிக்கை பணம் ஆகும்.

நம் நான்கு மாநிலங்களில் குறிப்பிட்ட மூன்று இடங்களில் உள்ள CSI அத்யட்சாதீனத்தின் ஆடிட்டர் கணக்குகளை பார்க்கும் வேதனையான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அதில் வக்கீலுக்கு கொடுத்த பணம் 10 லட்சங்கள் என்று ஒரு அத்யட்சாதீனத்தின் கணக்கில் எழுதியுள்ளது.      வக்கீல் மூலமாக கொடுக்கப்பட்ட பணம் 75 லட்சங்கள் என்று மற்றொரு கணக்கு சொல்கிறது. இதில் உள்ள வித்தியாசத்தை கவனியுங்கள். வக்கீலுக்கு கொடுத்தது வேறு - வக்கீல் மூலமாக கொடுத்தது வேறு.   இந்த மூலமாக என்ற வார்த்தை எதைக்குறிக்கிறது? அது யாருக்கு போய் சேர்ந்திருக்கும். தீர்ப்பு கூறுபவர்களே நீதி சாவதற்காக பெட்டி வாங்குகிற கதிகேடு குறிப்பாக தமிழ்நாட்டில் ஏற்பட்டதே! கல்கத்தாசபை பெண்கள் ஐக்கிய சங்கம் தங்கள் பிஷப்புக்கு எதிராக வீதிகளிலும், பிஷப் அவர்களின் வீடுகளிலும் படை எடுத்தார்களே அந்த கேஸ் இப்போது என்ன ஆயிற்று அப்படியே நீதிமன்ற பெட்டிக்குள் அடக்கம் என்கிறார்கள். அதேநிலை தமிழ்நாட்டிலும் நடந்துள்ளது. சபைகளின் நியாயம்-நீதி யாவையும் பெட்டிகள் தீர்மானிக்கிறது.         நம் சபையின் இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் மூலக்காரணம் மூன்று 1.பதவிவெறி, 2.அரசியல்வாதிகளின் இரகசிய தொடர்புகள், 3.பதவியில் கிடைக்கும் ஆதாயம் ஆகியவைகளாகும்.

Cross  டையோசிஸ்ஸில் இப்போது போட்டியிடும் லேசெயலர் பதவிக்கு பிஷப்பைவிட பவர் அதிகம். அப்பாயின்மென்ட், பிரமோஷன், டிரான்ஸ்பர், அட்மிஷன், சொத்து பராமரிப்பு, மணல் விற்பனை, நில விற்பனை, 20 வருடம் அல்லது 99 வருடத்துக்கு டையோசிஸ்ஸின் வருமானம் கொழிக்கும் நிலத்தை லீஸ்சுக்கு விடுவது. இதில் எல்லாம் கொள்ளைலாபம் அல்லது பெரியதொகை கமிஷனாக பெரும் பதவியாகும். அதனால்தான் இத்தனை போட்டியும்,         வெறியும் பதவிகளை கைப்பற்றுவதில் காட்டுகிறார்கள். அதனால்தான் லட்சங்களை தண்ணீராக கோர்ட்டுக்கு செலவழிக்கிறார்கள்.


இதில் யாருக்கும் வெட்கம் இல்லை

Cross  இப்பிரச்சனையில் இரண்டு பிரிவினர் இப்போது போராடுகின்றனர். இது கிறிஸ்தவ சபைகளின் உள்பிரச்சனை ஆகும்.   இதில் அரசியல்வாதியான திரு.வைகுந்தராஜ் அவர்களுக்கு என்ன வேலை? அவரோடு தொடர்புபடுத்தி செய்திகள் பலவிதமாக பேசிப்படுகிறதே? எனக்கும் இவர்கள் பிரச்சனையில் சம்பந்தம் இல்லை. ஆனால் என் வாசகர்கள் இந்த டையோசிஸ் பிரச்சனையில் ஆலோசனை கேட்டார்கள். அதனால்தான் ஆலோசனையாக இதை எழுதுகிறேன்.

இப்போது கோர்ட்டுக்குபோகும் இரு பிரிவினரும் பாரம்பரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் இருவரும் தினசரி வெளியிட்ட துண்டுபிரதிகள் அனைத்தும் நான் வாசித்தேன்.   குறிப்பிட்ட அரசியல்வாதியுடன் தொடர்புக்கொண்டு அவரிடம் பணம்வாங்கி செலவழிக்கிறார்கள் என்று மற்ற குழுவினரை குற்றம்சாட்டியவர்களே, ஒருகாலத்தில் அதே திரு.வைகுந்தராஜ் அவர்களோடு தொடர்புகொண்டு லாபம் அடைந்தவர்கள்தானே? அப்போது அவர் அரசியல்வாதி என்று இருபிரிவினருக்கும் தெரியவில்லையா?

அதனால்தான் என் வாசகர்கள் ஏராளமானவர்கள் திருநெல்வேலி டையோசிஸ்ஸில் இப்போது நடக்கும் பிரச்சனைப்பற்றி ஆலோசனை கேட்டு எனக்கு தினம் ஒரு கடிதம் எழுதியும் அவர்களுக்கு உடனே ஆலோசனை கூற மனமற்று இருந்தேன்.      இருபிரிவினராலும் அல்லது வேறு எந்த பிரிவினரானாலும் சரி,   கிறிஸ்தவரல்லாத ஒரு இந்து அரசியல்வாதியுடன் தொடர்புவைக்கும்வரை,      திருநெல்வேலி டையோசிஸ்ஸானாலும் சரி - தூத்துக்குடி டையோசிஸ்ஸனாலும் சரி உருபடவே உருப்படாது. தேவபிரசன்னம் அங்கு இருக்காது.

Cross  மேலும் அத்யட்சாதீன விவகாரங்களை லாட்ஜில் வைத்து பேசுவது, பாட்டில்களோடு, விருந்துண்டு, வாய்சண்டை, கைசண்டையிட்டுக்கொண்டு இத்தனை ஆர்ப்பாட்டங்களோடா பரிசுத்ததேவனின் ஆலய பதவிகளை குறித்து தீர்மானிப்பது.   இப்படிப்பட்ட செயல்கள் பலவருடங்களாக நடப்பதுகுறித்து யாருமே மனவேதனை படவில்லையா?   யாருக்குமே இதைப்பற்றி கேள்வி எழுப்பவில்லையா?      இரட்சிக்கப்பட்ட அனுபவம் உள்ளவர் அப்படிப்பட்ட கூட்டத்தில் பங்கு கொள்ளலாமா? குருவானவர்கள் இப்படிப்பட்ட கூட்டத்தில் காணப்படலாமா?      தேவனின் இருதயத்தை ஏன் இப்படி நோகடிக்கிறீர்கள்?. சபையாகிய தேவனின் சரீரத்தை ஏன் குத்திக்குதறுகிறீர்கள்?

ஆசியாவிலேயே மிக அதிகமாக மிஷனரிகள் நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இந்த இரண்டு டையோசிஸ்களிலுமிருந்துதான் சென்றுள்ளார்கள். இவர்கள் தங்கள் பட்டம் இழந்து, பதவி இழந்து, தங்கள் வசதிகளை இழந்து, தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளின் பிற்கால வாழ்க்கையைப்பற்றியும் எதிர்பார்ப்புகளை பற்றியும் உள்ள ஆசைகளை எல்லாம் இழந்து காடுகளில், ஆதிவாசிகள் மத்தியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மிஷனரிகள் தங்களை தாங்கும் சபைகள் வீதிக்கும்,   கோர்ட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் போய்வரும் நிலையைகேட்டு அவர்கள் மனம் எத்தனை வேதனைப்படும். டையோசிஸ்ஸை வளர்த்த வயதுமுதிர்ந்தார் மனம் எவ்வளவு வேதனைப்படும்.

அரசியல்வாதிகளின் பணத்தில் அத்யட்சாதீனத்தின் தலையெழுத்து மாறுமானால் இரண்டு குழுவினரில் யாருடைய செயல் சரி என்று சொல்வேன்?.

இதில் ஐக்கிய உபவாச ஜெபம் வேறு. இவர்களுக்குள் ஐக்கியம் எங்கே? இந்த குழுவிலிருந்து சில குருவானவர்கள் அடுத்த குழுவுக்கு தாவுகிறார்கள். அடுத்த குழுவிலிருந்து இந்த குழுவிற்கு தாவுகிறார்கள். ஆதாயம் எங்கு இருக்கிறது எந்த குழு பதவிக்குவரும் என்ற குழப்பத்தில்தான் இந்த கட்சிமாறல் காட்சி அரங்கேறுகிறது.

Cross  இப்படிப்பட்டவர்களுக்கு திரு.வைகுந்தராஜ் அவர்கள்தான் இரட்சகர் - இயேசுகிறிஸ்து அல்ல.      அன்று யூதர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்.      இன்று உயிர்தெழுந்த இயேசுவை இவர்கள் அனைவரும் ஒருமனப்பட்டு அவரை மறுபடியும் பிடித்துவந்து கோர்ட்டில் நிற்க வைத்துள்ளனர். தீர்ப்பு வரும்முன் இவர்களே அவரை சிலுவையிலும் அறைந்து விடுவார்கள்.

ஜாமக்காரன் குறிப்பு: இரட்சிக்கப்பட்ட மனந்திரும்பின அனுபவமுள்ள ஜாமக்காரன் வாசக குடும்பத்தில் உள்ள குருமார்கள் விசுவாசிகள் யாவரும் இந்த இரண்டு குழுவினரிடமிருந்து தயவுசெய்து விலகியிருங்கள். இயேசுவா - பதவியா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அப்படியே டையோசிஸ் கவுன்சில் மெம்பர்களாகிய நீங்கள் இயேசுவைமட்டும் சந்தோஷப்படுத்த விரும்பினால் இந்த இரண்டு குழுவிலிருந்தும் தயவுசெய்து விலகியிருங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு உங்களுக்கு இயேசுவே பரிகாரியாக இருப்பார். உங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு, வேலை விஷயங்களுக்கு கர்த்தரின் சிபாரிசு போதும்.      இந்த குழுவினரின் உதவியை உதாசீனப்படுத்துங்கள். குற்றவுணர்வு நீங்கும்.

Cross  இப்படிப்பட்ட பிரச்சனைகள் தூத்துக்குடி, நெல்லையில் மட்டுமல்ல, அநேக அத்யட்சாதீனங்களிலும் உண்டு. ஆனால் அவைகள் குருவானவர்களை வீதியில் நிற்கவைக்கவில்லை.      அவர்களின் அத்யட்சாதீன விவகாரங்கள் தினசரி பேப்பர்களிலும்,         வாரப்பத்திரிக்கைகளிலும் வெளிவரவில்லை.         ஆனால் ஆவிக்குரியவர்கள் அதிகமுள்ள மிகப்பழைமையும்,      பாரம்பரியமும் உள்ள இப்படிப்பட்ட அத்யட்சாதீனத்தின் உள்விவகாரம் இந்திய பத்திரிக்கைகளில் வந்ததுதான் மிகவும் வேதனை.

Cross  கன்னியாகுமரி டையோசிஸ்ஸிலும் ஒரு காலத்தில் இதேபோல் சபை பிரச்சனை பத்திரிக்கைகளிலும், தினம்தினம் செய்திதாள்களிலும் இடம்பெற்று - முடிவில் கோர்ட்டும்   -   வக்கீலும் அந்த டையோசிஸ்ஸை ஆளும் கேவல நிலைக்கு தள்ளப்பட்டு இன்று ஒரு நல்ல நிலையை அடைந்துள்ளது. அந்த நாட்களில் அந்த செய்திகள் எல்லா தினசரி செய்திதாள்களில் வெளிவந்ததால் கேரளா, தமிழ்நாடு CSI சபைகளில் உள்ள விசுவாசிகள் பல இடங்களில் ஒன்றுசேர்ந்து கன்னியாகுமரி டையோஸிஸ்காக விசேஷ ஜெபங்களை ஏறெடுத்தன.   நானே அப்படிப்பட்ட விசேஷ ஜெபங்களை பல இடங்களில் பொறுப்பேற்று நடத்தினேன்.

இன்று,

திருநெல்வேலி டையோசிஸ்ஸின் பிரச்சனையில் கோர்ட் அத்யட்சாதீனத்தின் நிர்வாக பொறுப்பை ஏற்றெடுக்கும் நிலை வருமா? ஜாக்கிரதை! அந்தநிலை வந்துவிடாமல் இருக்க ஜெபிப்போம்.

Cross  இப்படிப்பட்ட விவரங்கள் ஜாமக்காரனில் வெளிவந்தால் பல பிஷப்மார்களுக்கு என்மேல் கோபம் உண்டாகிறது. இவைகளை எழுத இவர் யார்?            என்பார்கள்.            ஆனால் தினசரி பத்திரிக்கைகளிலும், வாரப்பத்திரிக்கைகளிலும் பொதுமக்கள் பார்க்க அத்யட்சாதீனத்தின் நாற்றம் பாரெங்கும் வீசுவதைக்குறித்து பிஷப்மார்களுக்கு பிரச்சனையில்லை. இதை என்னவென்று சொல்வது?.

Cross  நம் சபைமக்களில் உள்ள என் வாசகர்களை மட்டும் உணர்த்துவதற்காக நான் எழுதுகிறேன்.      ஆனால் மற்றவர்கள் எழுதுவது வியாபாரத்துக்காக பிரச்சனைகளை ஊதி பெரிதாக்கவும் எழுதுகிறார்கள்.      அதில் அவர்கள் லாபமும் சம்பாதிக்கிறார்கள்.

Cross  மூன்று விதமான வாரப்பத்திரிக்கைகளில் வெளிவந்த நெல்லை டையோசிஸ்ஸின் தற்போதையை விவகாரங்களைப்பற்றி வெளிவந்த செய்திகளில் எத்தனைப்பெரிய வேறுபாடுகள்.      சிலர் சின்ன விஷயத்தை பெரிதுப்படுத்தினர்.      சில பத்திரிக்கை டையோசிஸ்ஸைப்பற்றி பொய்யான தகவல்களை அள்ளிக்கொட்டின. தங்கள் குழுவினர்தான் யோக்கியம் என்பதை மக்கள் அறியவும் மற்ற குழுவினரை அவமானப்படுத்தவும் குறிப்பிட்ட குழுக்களே செய்திகளை எழுதி வாரப்பத்திரிக்கைகளுக்கு கொடுத்து இவர்களே அந்த தவறான செய்திக்கு பணமும் கொடுத்து வெளியிடவைத்தனர்.

நம் CSI சபைகளின் நிலையை பார்த்தீர்களா? இதை பார்க்கிற-கேள்விப்படுகிற நாம் கண்ணீர்விட்டு அவரவர்கள் தனிப்பட்ட முறையில் உபவாசித்து ஜெபிப்பதேயல்லாமல் வேறு ஒன்றும் செய்ய இயலாது. குறிப்பாக இரண்டு குழுக்களுக்காக ஓட்டு சேகரிக்க செல்லும் நபர்கள் மனந்திரும்ப ஜெபியுங்கள். பிரச்சனைகள் அவர்களாலேயே அதிகம் உருவாகிறது.

Cross  நெல்லையிலும் ஒருநாள் டையோசிஸ் எலக்ஷனுக்காக உபவாசித்து ஜெபித்தீர்கள் என்ன பலன் கண்டீர்கள்?. எயிட்ஸ்சுகமானது, இயேசுசொன்னார் என்று இயேசுகிறிஸ்து மேலேயே பழியை போட்ட ஊழியரைக்கொண்டு எத்தனை ஆயிரம்பேர் கூடி ஜெபித்தாலும் அந்த ஜெபம் கேட்கப்படுமா? அந்த குறிப்பிட்ட ஜெபத்துக்கு பின்தான் இந்த பிரச்சனைகள் பூதாகாரமாகிப்போனது என்பதை உணர்ந்தீர்களா?.

கர்த்தர் தலையிட்டால்தான் சமாதானம். அவர் தலையிட்டால் இரண்டாம் ஆயுதத்தை கையில் எடுப்பார்.   அது டையோசிஸ்ஸில் குறுக்குவழியில் ஜெயித்து பதவிப்பொறுப்பெடுப்பவர்களுக்கு நல்லதல்ல.

Cross  இப்போது நெல்லையில் நடக்கிற டையோசிஸ் பிரச்சனை சொந்தக்காரர்களுக்குள் நடக்கும் குடும்பப்பிரச்சனை ஆகும். அதன்மூலம் ஏற்பட்ட பழைய பகையும், வைராக்கியமும், இவர்களுக்குள் கௌரவ பிரச்சனையாகி முழு டையோசிஸ்ஸையும் அவமானத்துக்குள்ளாக்கியுள்ளது. இவர்கள் குடும்ப சண்டையில் பாவம் டையோசிஸ் படுகிறபாடு மிக அதிகம். சபை தேவனின் சரீரம். தன் சரீரத்தை துன்பப்படுத்துகிறவர்களை தேவன் சும்மா விடுவாரா?

Cross  உண்மையில் லேசெயலர் பதவி என்பது சபையில் செயல்படும் மிகமுக்கியமான ஊழியமாகும். கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியமாகும். இந்த ஊழியத்தை செய்ய இப்படியா போட்டி போடுவது? கோர்ட்டுக்குபோயா ஊழியத்தை பெறுவது?         இந்த பதவியில் நிற்பவர்கள் உண்மையான கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களானால் போட்டி போடமாட்டார்கள், விட்டுக்கொடுத்துவிடுவார்கள்.   ஒருவன் ஒரு வஸ்திரம் கேட்டால் இரண்டு வஸ்திரத்தைக்கொடு என்று இயேசு கூறிய உதாரணத்தை தியானித்துப் பாருங்கள். உங்கள் அத்யட்சாதீனம் மட்டுமல்ல, மற்ற அனைவரும் உங்களை கவனிக்கிறார்கள். இயேசுவும் கண்ணீரோடு உங்களை கவனிக்கிறார்.


பிற பத்திரிக்கையிலிருந்து

Cross  தூத்துக்குடி டையோசிஸ் பண ஊழலைக் குறித்து ஒரு குறிப்பிட்ட பத்திரிக்கை சில பிஷப்மார்களை சந்தித்து அபிப்ராயம் கேட்டு எழுதிய விவரங்களில் சில:

தூத்துக்குடி பண ஊழல் சம்பவம் சில மூடிவைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறது.

கோடிக்கணக்கான கணக்கில் காட்டப்படாத கறுப்புப்பணம்   (பல CSI) திருமண்டலங்களில் புழக்கத்தில் உள்ளது என்கிற உண்மை வெளியேவரும்போது மற்ற பேராயர்கள் அதிருகிறார்கள். இப்படிப்பட்ட பண ஊழல் எல்லா பேராயங்களிலும் நடப்பதுதான்.         புதிதாய் வந்த பேராயர்.ஜெபசந்திரன் அவர்களுக்கு இது புதுமையாக தோன்றுகிறது. தங்களைப்போல நல்ல பங்கை தெரிந்துகொண்டு அனுசரித்துபோகாமல் இப்படி அவசரப்பட்டு (மற்ற பிஷப்புகளான) தங்களையும் சிக்கலில் மாட்டி விடுகிறாரே என்று அங்கலாய்க்கிறார்கள். மற்ற பேராயர்களின் அங்கலாய்ப்பு இவ்வாறு இருக்க கருப்பு பண கும்பல்களின் பிடியிலிருந்து திருச்சபைகளை விடுவிக்கவேண்டும் என்று நாம் அங்கலாய்க்கிறோம்..... ஆனால் கருப்புபண கரங்களின் வலிமை அதிகம்.

திருமண்டலம் வாரியாக இந்த கருப்பு பண உற்பத்தி,   சுழற்சி, பயன்பாடு பற்றிய விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. திருச்சபைக்கு விடுதலை என்ற திட்டத்திற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகிறது.

மேலே உள்ள கட்டுரையை எழுதுகிறவர் மேலும் எழுதுகிறார். எழுதுகிறவரை துலைத்துக் கட்டப்படுவார் என்ற அச்சுறுத்தல்கள் தொடர்ந்து இருப்பதால் சில குறிப்புகளை உங்கள் முன் வைக்கிறேன் என்று எழுதி குறிப்பிட்டு தொடருகிறார்.

சி.எஸ்.ஐ தென்னிந்திய திருச்சபையை பார்த்தோமானால் அது கருப்பு பண மாபியாக்களின் பிடியில் சிக்கி அனுதினமும் புதைக்குழிக்குள் அங்குலம் அங்குலமாக இறங்குவதை காணமுடிகிறது.

1. இன்று சி.எஸ்.ஐ திருமண்டலங்கள் (சபைகள் ஆகியவை) வணிக நிறுவனங்களாக மாறிவிட்டன. காணிக்கைளைவிட, கல்வி நிறுவனங்களையே தனது வருமானத்திற்கு அதிகமாக நம்புகிறது.

2. புதிய ஊழியங்களையும், புதிய திருச்சபைகளையும் நிறுவுவதற்கு பதிலாக புதிய கல்வி நிறுவனங்கள் நிறுவுவதிலேயே பேராயங்களுக்கும், பேராயர்களுக்கும் கவனம் உள்ளது.

3. ஒரு காலக்கட்டத்தில் கல்வி என்பது கிடைப்பதற்கரிய சொத்தாக இருந்தது. அதனால்தான் மிஷனரிகள் கல்வி நிறுவனங்களை துவக்கினார்கள். ஆனால் இன்றைய மாறுபட்ட சூழலிலும் உலகப் பிரகாரமான கல்வி தந்தைகளுக்கும், கல்வி வள்ளல்களுக்கும் ஈடாக திருமண்டலங்களும் கல்வி சாலைகளை உருவாக்குகிறது.      அதன்மூலம் கருப்பு பணத்தையும் சம்பாதிக்கிறது.

4. கருப்புபணநாட்டம் காரணமாக சில பசையுள்ள (CSI) கல்வி நிறுவனங்களில்,   கல்வியாளர்களைவிட தாதாக்களே அதிகார மையமாக உருவெடுக்கிறார்கள்.   கருப்பு பணத்தை முதலீடு செய்து மிகப்பெரும் அறுவடை செய்வதே இவர்கள் குறியாக உள்ளது. பணபலம், அரசியல் செல்வாக்கு, அடியாட்கள் பலம் இவைகளுக்கு எதிராக (அத்யட்சாதீனத்தில்) நேர்மையாக செயல்படவிரும்புபவர்கள் நசுக்கப்படுகிறார்கள்,         ஓடஓட விரட்டப்படுகிறார்கள்.         சில பிரச்சனைகள் வெளிவரும்போதுதான் திருமண்டலங்களும் - கருப்புபணமும் இணைந்திருப்பதை அறியமுடிகிறது. இந்த உறவை அறுத்தெரியாதபட்சத்தில் திருச்சபைகள் நடத்தும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூடிவிட்டால் என்ன என்று தோன்றுகிறது எனக்கு! உங்களுக்கு? இப்படி வாசகர்களிடமே ஆலோசனைகேட்கும் வண்ணமாக இதன் கட்டுரையாளர் எழுதி முடிக்கிறார்.         இப்படி எழுதும் கிறிஸ்தவ பத்திரிக்கையாளர்கள் இன்னும் எழும்பவேண்டும்.

Cross  ஒருமுறை சகோ.எமில்பெஜசிங் (விஷ்வவாணி) அவர்கள் இப்படி எழுதினார். கர்த்தாவே! ஏன் எங்களுக்கு சொத்துக்களை தந்தீர், கல்வி நிலையங்களை தந்தீர்?, ஸ்தாபனங்களை தந்தீர்? இவைகளால் திருச்சபை மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை அறிவீரே! என்று பலவருடங்களுக்குமுன் எழுதினார். அவரின் வேதனைக்கு காரணம், வாசகர்கள் உணர்ந்திருப்பீர்கள்.

DC மெம்பர்கள், சினாட் மெம்பர்கள், குருமார்கள் இந்த பிரச்சனைகளுக்கு துணைப்போகாமல் கர்த்தரின் மனம் குளிர ஏதாவது செய்யுங்கள்.

Cross  மேலே எழுதியவர்களும், நானும் CSI சபைக்கு விரோதிகளல்ல, நாங்கள் வேற்றுசபையை சேர்ந்தவர்களுமல்ல. CSI சபையையோ-பிஷப்மார்களையோ, டையோசிஸ் செயலாலர்களையோ வெறுப்பவர்களுமல்ல.      CSI      போன்ற இப்படிப்பட்ட பிரச்சனையில் அகப்பட்ட சபைகளைக்குறித்து ஆவிக்குரிய பாரம்கொண்டவர்கள். புறமதஸ்தர்களின்முன் சபையின், சபைதலைவர்களின், குருமார்களின்,      பொறுப்பாளர்களின் சாட்சி கெட்டுப்போகிறதே என்ற ஆதங்கம்தான் இவைகளை எழுதவைத்தது.

இதை வாசிக்கும் வாசகர்கள் சிந்தியுங்கள், ஜெபியுங்கள். திருச்சபையை எப்படி இப்பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பது என்று ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

திருச்சபை தேவனின் சரீரம் அதை வேதனைப்படுத்தாதீர்கள்!
       ஏற்கனவே கர்த்தர் சிலுவையில் பட்டபாடுகள் போதும்!.

Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM