கர்த்தருக்குள் அன்பானவர்களே,
உங்கள் யாவருக்கும் உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இந்த ஜாமக்காரன் உங்கள் கைகளில் கிடைக்கும்போது கர்த்தருக்கு சித்தமானால்
மலேசியா லூத்தரன் சபைகளில் பிரசங்கித்துக் கொண்டிருப்பேன். அதை முடித்து
சிங்கப்பூர்
ANG MOQUE & செம்பவாங் மெத்தடிஸ்ட் சபைகளிலும்,
CSI மலையாள சபையிலும் பிரசங்கம் நிகழ்த்தி சூலை 17ம் தேதி இந்தியா திரும்புவேன் என்று கர்த்தருக்குள் நம்புகிறேன்.
மலேசியா-சிங்கப்பூர் ஜாமக்காரன் வாசகர்கள் கவனிக்கவும். நான் உங்கள் வீட்டை சந்திக்கும்போது அது சம்பந்தமான என் ஒழுங்குகளைக்குறித்து ஏற்கனவே பலமுறை ஜாமக்காரனில் நான் குறிப்பிட்டதுபோல வீடு சந்திப்பின்போது நான் எந்த நேரத்தில் உங்கள் வீட்டை சந்திப்பது உங்களுக்கு வசதியாக இருக்கும் என்பதை நீங்கள் முன்பதாகவே எனக்கு
E-Mail அல்லது கடிதம் அல்லது தொலைபேசி மூலம் அறிவிப்பது நல்லது. மேலும் வீடுகள் சந்திப்பின்போது காணிக்கை அல்லது அன்பு பரிசுகள், பொருள்கள் போன்ற எதையும் எனக்கு கொடுக்க முயலவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அது நான் உங்களுக்காக ஜெபிக்க
பணம் வாங்கியதுபோல் ஆகும். அப்படியே காபி, டீ, ஆகாரம் எதையும் கொடுக்க முயலவேண்டாம். உங்கள் உபசரிப்பை வெறுப்பதாக நினைக்கவேண்டாம். நான் நிறைய வீடுகளுக்கு தொடர்ச்சியாக செல்லவேண்டியிருப்பதால் என் வயிற்றை நான் காத்துக் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இதற்கு நீங்கள் தயவாய் ஒத்துழைப்பு தருவது அவசியம்.
நான் நேரில் வரும்போது நீங்கள் என்னென்ன என்னிடம் கேட்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, குறிப்பாக ஆவிக்குரிய வேதவசனத்தைக் குறித்த சந்தேகங்கள், குடும்ப விவகாரங்கள் குறித்த ஆலோசனை விவரம் அத்தனையும் வரிசைப்படுத்திக்கேளுங்கள். அது உங்கள் ஆத்துமாவுக்கு மிகப்பிரயோஜனமாக இருக்கும். என்னைப் பற்றியும், என் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் என்ன சந்தேகம் இருந்தாலும் வெளிப்படையாக நீங்கள் என்னிடம் கேட்கலாம். ஊழியக்காரன்
திறந்த புத்தகமாக இருப்பது அவசியம்.
எல்லா ஜாமக்காரன் வாசகர்களுக்காகவும் நான் தொடர்ந்து ஜெபிக்கிறேன். இம்மாதம் நமது வாசகர்களின் பிள்ளைகள் புதிய வகுப்புக்கு, பள்ளியிலும், கல்லூரியிலும் பிரவேசிக்கிறார்கள் அவர்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் பரீட்சையில் வெற்றியடைந்ததற்காக தேவனைத் துதிக்கிறேன். வெற்றியடைந்த எல்லா பிள்ளைகளையும் பாராட்டுகிறேன். இம்மாதம் புதிய வேலையில் பிரவேசிப்பவர்களுக்காகவும் வாழ்த்தி ஜெபிக்கிறேன். ஆசிரியர், ஆசிரியைகளுக்காகவும் ஜெபம் ஏறெடுக்கிறேன்.
வாசகர்களில் சிலருக்கு தடைகள் நீங்கி நல்ல திருமண வாழ்க்கை அமைந்ததை அறிந்தேன். சந்தோஷம். உங்களோடு சேர்ந்து நானும் கர்த்தரைத் துதிக்கிறேன். சமாதானத்துடன் வாழுங்கள் என்று தம்பதிகளை வாழ்த்துகிறேன்.
வேற்றுமையில் ஒற்றுமை இது தான் புது திருமண தம்பதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம். நீங்கள் ஜெபிக்கிறவர்களாக இருந்தாலும், புது குடும்ப வாழ்க்கையில் சந்திக்கவேண்டிய பிரச்சனைகள் ஏராளமுண்டு. இரண்டு வித்தியாசமான குடும்பம், வித்தியாசமான பழக்க வழக்கங்கள் அந்த வேற்றுமைகளைப் புரிந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான்
வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஆகும். அதை ஜெபத்தோடு செயல்பட்டால் நீங்கள் சமாதான வாழ்க்கை நடத்தலாம்.
கிறிஸ்தவ சபைகள் எல்லாவற்றிலும்
பிசாசு புகுந்து சபைகளின் சாட்சியை இழக்க செய்து
கர்த்தரின் மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறான். ஒவ்வொரு சபைகளில் நடக்கும் பிரச்சனைகளையும், ஊழல்களையும், குழப்பமான உபதேசங்களையும் கேட்கும்போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது.
கிறிஸ்தவ
TV சேனல்களில் அர்த்தமுள்ள கிறிஸ்தவ பாடல்களுக்கு நாட்டியம் ஆட ஏராளமான வாலிபப்பெண்கள் நுழைந்துவிட்டனர். ஒரு கூட்ட கிறிஸ்தவ மக்களும் அதை விரும்பி அந்த
TV சேனலை நடத்துபவர்களுக்கு ஏராளமான பணம் வாரி இறைக்கின்றனர். உள்ளத்தை தொட வைக்கும் பாடலை ரசிக்கும் பாடலாக மாற்றி அமைத்துவிட்டனர்.
கரிஸ்மேட்டிக் ஆராதனைகளும் பெருகிவிட்டன. சபை
பாஸ்டர்கள், குருவானவர்கள் தங்கள் இஷ்டம்போல் சபை மக்களை ஆட்டி வைக்கிறார்கள், ஆடவும் வைக்கிறார்கள். படித்தவர்களும், படிக்காதவர்களும் காவி உடையில் பெண்களை ஏமாற்றிய
சாது நித்யானந்தாவின் சம்பவம்போல கிறிஸ்தவ ஊழியர்கள், பாஸ்டர்கள் கிறிஸ்தவர்களை ஏமாற்ற துணிந்துவிட்டனர். மக்கள் தங்களை மறந்து இவர்களை கேள்வி கேட்க துணியாமல் எப்படி
நாம் ஆராதிக்கிறோம், எப்படி துதிக்கிறோம். நாம் செய்வது சரியா? என்று சற்றும் யோசிக்காமல் தொடர்ந்து இப்படிப்பட்ட சபைக்கு போய்வந்து கொண்டிருக்கிறார்கள். நானும் கிறிஸ்தவன் என்றும் இவர்கள் கூறிக்கொள்கிறார்கள். வேதம் போதிக்காத முட்டாள்தனமான ஆராதனையில் இன்று மெத்த படித்தவர்களும் கேள்வி கேட்காமல் தங்களையும் முட்டாள்களாக்கி கொண்டார்கள். கர்த்தரின் வருகையில் நாம் தேவனை சந்திப்போமா? மரணத்தை சந்தோஷத்தோடு சந்திப்போமா? என்று எதையும் மக்கள் சிந்திப்பதில்லை. ஆராதனையில் ஜனங்களை
அழவைத்து அதை புகைப்படம் எடுத்துவெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறார்கள். மிகத்திரளான கூட்டங்களை கம்யூட்டர்மூலம் மிகைப்படுத்தி பத்திரிக்கையிலும், வால்போஸ்ட்களிலும் வெளியிடும்
விளம்பர யுக்தி இன்று பெருகிவிட்டது. மக்களைக் கவர துணிந்து பொய் சாட்சிகளை வெளியிடுகிறார்கள். மக்கள் அப்படிப்பட்ட பொய் ஊழியர்களின் கூட்டத்துக்குப் போவதை பெருமையாக நினைக்கிறார்கள்
விளம்பரத்துகாகவே பல கோடிகள் செலவழிக்கிறார்கள். மக்கள் இவர்களிடம் பலவிதங்களில் ஏமாறுகிறார்கள்.
குரங்காட்டி - குரங்கை ஆட்டுவிப்பதுபோல கைத்தட்டுங்கள்,
ஆமென் சொல்லுங்கள் என்றால் உடனே இவர்களும் கைகளைத் தட்டுவதும் 5 நிமிடத்துக்கு ஒருமுறை
அல்லேலுயா கூறுவதும், வார்த்தைக்கு வார்த்தை ஆமென் கூறுவதும் பெருகிவிட்டது. ஏன் ஆமென் கூறுகிறோம் என்று கொஞ்சமாவது ஜனங்கள் யோசிப்பதில்லை. இப்படி குரங்காட்டியிடம் அகப்பட்டவர்களைப்போல ஆராதிக்கும் மக்களை
TVயில் காண்பித்து பத்திரிக்கையில் வெளியிட்டு இவர்கள் கூட்டத்தில்
பெரும் வல்லமை உண்டு என்று மக்களை நம்ப வைக்கும் விளம்பரயுக்தி இப்போது எங்கும் காணப்படுகிறது. வசனத்தை ஆராய்பவன் இல்லை, இந்த நிலையை நீடிக்கவைத்து மக்களை அப்படியே
அந்திகிறிஸ்துவின் கரத்தில் கொண்டுபோய் சேர்க்க பாஸ்டர்கள், பெரிய ஊழியர்கள் இப்படிப்பட்ட இரகசிய ஏற்பாட்டை தொடருகிறார்கள். இவர்களிடமிருந்து மக்களை காப்பாற்றவேண்டும்.
விவாகரத்து பெருகிவிட்டது, தமிழ்நாட்டில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில்தான் விவாகரத்து மிக அதிகம் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. குறிப்பாக கிறிஸ்தவ சபைகளில் மிக அதிகமாக பெருகிவிட்டது. இவைகள்
தவறு என்று பிரசங்கிக்க சபைபோதகர்கள், கன்வென்ஷன்
பிரசங்கிகள் பயப்படுகிறார்கள். சபையிலுள்ள பெரும்பணக்காரர்கள் குடும்பங்களில் விவாகரத்து நிறைந்து காணப்படுவதால் அதை சுட்டிக்காட்டினால் தன்
பதவி போகும், தனக்குவரும் காணிக்கை நின்றுபோகும் என்று இவர்கள் பயப்படுகிறார்கள். கண்டித்து பிரசங்கிக்கும் குருவானவர்களை, பாஸ்டர்களை, பிரசங்கிமார்களை இப்படிப்பட்ட சபைகள் விரும்புகிறதில்லை. செவிதினவுள்ளவர்கள் என்று இவர்களை வேதம் வர்ணிக்கிறது. இவைகளையெல்லாம் மனதில்கொண்டு பாரத்துடன் ஜெபம் ஏறெடுப்போம்.
பிள்ளைகள் பாஸ் ஆனதையும் ஜெபத்துக்கு பதில் கிடைத்ததையும் அறிவித்த யாவருக்கும் நன்றி உங்களோடு துதிப்பதில் நாங்கள் இணைந்துக்கொள்கிறோம். தொடர்ந்து ஜெபிப்போம்.
|