தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டத்தில் அமைந்துள்ள சிறுகிராமம்தான்
சில்லாங்குளம். இங்கு சுமார் 78 ஆண்டுகளுக்கு முன்பு 1930ம் ஆண்டு ஒரு ஆரம்பபள்ளிக்கூடத்தை திரு.முத்துக்கருப்பன் என்ற
இந்து சகோதரன் தன் சொந்த பணத்தில் அந்த சுற்றுவட்டார கிராம பிள்ளைகளுக்காக தொடங்கினார். மாணவர்கள் எண்ணிக்கை பெருகினபோது அந்த மாணவர்கள் மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் முடித்து வீடு திரும்ப இருட்டாகும். ஆகவே தூரத்திலிருந்து வரும் பிள்ளைகளுக்காக அவர்கள்
தங்க விடுதி ஒன்றும் அமைத்து கொடுத்தார். இன்று மிக பிரம்மாண்டமாக ஆலம் விழுதுப்போல அந்த பள்ளிக்கூடம் வளர்ந்து அது மேல்நிலைப்பள்ளியாகமாறி 3000 மாணவ, மாணவிகளுக்கு தங்க இடமும், மூன்றுவேளை ஆகாரமும், உடையும் இலவசமாக அளித்து கல்விசேவை செய்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்த குடும்பத்தினர்
வெளிநாட்டு ஸ்தாபனத்தின் எந்த பண உதவியும் பெறாமல் முத்துக்கருப்பன் குடும்பத்தில் உள்ளவர்களே தங்களுக்குள் பணம் சேகரித்து சந்ததி சந்ததியாக இந்த கல்விப்பணியை செய்கிறார்கள். இந்த சேவையை செய்ய பள்ளி - விடுதி இவைகளை இலவசமாக நடத்த தங்கள் சொந்த சொத்துக்களிலிருந்து பணம் எடுத்துகொடுப்பதை நம்
தமிழக அரசு அறிந்து அரசாங்க செலவில் மாணவ, மாணவிகள் தங்க 9 பிள்ளைகள் தங்கும் விடுதி கட்டிடங்களை இலவசமாக கட்டிக்கொடுத்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் குறிப்பாக
கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், சேலம், ஈரோடு, இராமநாதபுரம், சென்னை இன்னும் பல்வேறு இடங்களிலிருந்து ஏழைபிள்ளைகளை எந்த (கண்டிஷனும்) நிர்பந்தமும் இல்லாமல் பள்ளியில் பிள்ளைகளை சேர்த்துக்கொள்கிறார்கள்.

1ம் வகுப்பு முதல்
12ம் வகுப்புவரை கம்ப்யூட்டர், தையல் பயிற்சிகளை இலவசமாக சொல்லி கொடுக்கிறார்கள்.
+2வில்: கணிதப்பிரிவு, அறிவியில் பிரிவு, வரலாற்று பிரிவு, கம்ப்யூட்டர் (வணிகவியல்), கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழிற்பாடபிரிவில் தணிக்கையியல் பிரிவு, வீட்டு மின்சாதனங்கள் பழுது பார்த்தலும் பராமரித்தலும்,
Pre-KG ஆங்கிலவழி கல்வியும் உண்டு. இத்தனையும்
இலவசம். யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவேண்டிய விலாசம்.
பள்ளி நிர்வாக இயக்குநர்,
முத்துக்கருப்பன் நினைவு கல்வி அறக்கட்டளை
சுப்பம்மாள்புரம், சில்லாங்குளம் - 628 718.
ஒட்டப்பிடாரம்.வட்டம், தூத்துக்குடி.மாவட்டம். தமிழ்நாடு, இந்தியா.
தொலைப்பேசி: 0461- 2262235, 2262211, 2262255.
செல்: 9442436945, 9047206125, 9486251146, 9442306825, 9486713509.
குறிப்பு: இந்த விவரத்தை ஜாமக்காரனில் அறிவிக்க காரணம் எத்தனையோ ஏழைப்பிள்ளைகள் கல்வி, தொழிற்கல்வி, கம்ப்யூட்டர், தையல் போன்ற படிப்புக்கு
சிறிய தொகைக்கூட கொடுக்கமுடியாமல் தவிப்பதை நான் செல்லும்
தமிழ்நாட்டின் பல கிராமங்களில் காண்கிறேன். இதை வாசிக்கும் கிறிஸ்தவர்கள் பணம் கட்டி படிக்க முடியாத தங்கள் பிள்ளைகள், ஹாஸ்டல் பீஸ் கட்ட முடியாத தங்கள் பிள்ளைகளை இந்த இடத்துக்கு அனுப்பி படிக்க வைக்கலாம். மாணவிகளுக்கும், மாணவர்களுக்கும் தங்கும் இடம் தனித்தனியாக அமைந்துள்ளது. இலவச உணவு விடுதிகளும், தனித்தனியாக பாதுகாப்பான சூழ்நிலையில் ஹாஸ்டல் வசதிகளும் உண்டு.
இந்த பள்ளிக்கூடம்
கிறிஸ்தவ பள்ளிக்கூடம் அல்ல - இந்த பள்ளிக்கூட நிர்வாகிகள் யாரையும் எனக்கு தெரியாது. ஆனால் நான் இதைக்குறித்து இவ்வளவு விரிவாக விளம்பரப்படுத்தியதின் காரணம்.
ஒன்று - ஏழைப்பிள்ளைகளின் பெற்றோர்கள் இதைக்குறித்து அறிந்துக்கொள்ளவேண்டும் என்பது ஆகும்.
மற்றொன்று - என்னை மிகவும் பாரப்படுத்தியது, இன்று மார்தோமா,
CSI, லூத்தரன் போன்ற ஏராளமான கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள் உண்டு. ஆனால் அனைத்து பிள்ளைகளுக்கும் மேலே குறிப்பிட்ட வசதிகளோடு உணவோடும், தங்கும் இலவச வசதிகளோடும், இலவச புத்தகங்களைக் கொடுத்து படிக்க ஏற்பாடு செய்துள்ளார்களா?
அனைத்தும் இலவசமாக அளித்து நம் ஏழைபிள்ளைகளை படிக்க வைக்கும் ஏற்பாடுகளை ஏன் நம்முடைய கிறிஸ்தவ ஸ்தாபனங்கள், சபைகள் இப்படிப்பட்ட பள்ளிக்கூடத்தை நடத்த இயலவில்லை. கத்தோலிக்க சபையினர் சில இடங்களில் இலவச பள்ளிக்கூடங்கள் நடத்துகிறார்கள். ஆனால் வரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அனைத்து பாடப்பிரிவுகளும் இவர்களைப் போல் இலவசமாக நடத்தியதையும், இலவசமாக தங்கும் இடம், உணவு அளித்ததையும் நான் கேள்விப்பட்டது இல்லை. சில இடங்களில் வகுப்புகளில் பிள்ளைகளின் சேர்க்கைக்கும் எண்ணிக்கையில் ஒரு அளவுகோல் வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இங்கோ எந்த அளவுகோலும் இல்லை. நம்
CSI சபை, லூத்தரன் சபை பள்ளிக்கூடங்களுக்கு இந்த முத்துக்கருப்பன் கல்வி நிலையம் நல்ல முன்மாதிரி ஆகும்.
இந்த கல்வி நிலையத்தைக் கண்டவுடன் என் மனம்
டேனிஷ்பேட்டை பெத்தேல் ஐக்கியத்தைதான்
நினைவுக்கூர்ந்தது. வெளிநாட்டில் ஏராளமான ஸ்தாபனங்கள் டேனிஷ்பேட்டை
பெத்தேலுக்கு பணம் கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெத்தேலிலோ நடந்துக் கொண்டிருந்த ஏழை பிள்ளைகளுக்கான
தொழிற்கல்வி நிலையங்கள், அனாதை பிள்ளைகளை வளர்த்தும் விடுதிகள், ஆஸ்பத்திரிகள் மற்ற ஸ்தாபனங்கள் யாவையும்
மூடும்விழா நடத்திக்கொண்டிருப்பது என் மனதை மிகவும் வேதனையுறச்செய்தது.
இந்த முத்துக்கருப்பன் குடும்பம் வாழையடிவாழையாய் மிகச் சிறப்பாக இத்தனை ஆயிரம் பிள்ளைகளுக்கும் இலவசமாக கல்விக் கண்களை அளிக்கும் இவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
முத்துக்கருப்பன் அவர்களின் உள்ளத்தின் பாரத்தை அவர் பெற்ற பிள்ளைகளும் சந்ததி சந்ததியாக கடந்த 78 வருடங்களாக இந்த பள்ளிக்கூடத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு, முழு அரசாங்கத்தின் பார்வையும் இந்த கல்வி நிலையத்தின் பக்கம் திரும்பசெய்து, லஞ்சம் ஏதும் வாங்காமல் அரசாங்கமே சகல விதத்திலும் உதவி செய்ய முன்வந்து செயல்படுத்தும்போது, தற்போதைய
பெத்தேலின் நிலையை இவர்களோடு ஒப்பிட்டு மனவேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை. 3000 மாணவ, மாணவிகளுக்கு அனைத்தும் இலவசம் படிப்பு, உறைவிடம், சாப்பாடு, உடை அத்தனையும் இலவசமாக கொடுக்க எப்படி இவர்களுக்கு மட்டும் முடிகிறது.
பெத்தேல் போர்டு நிர்வாகத்தினர் இங்கு வந்து இவர்களைக்கண்டு இவர்களின் வெற்றியுள்ள நிர்வாகத்தை கற்றுக்கொள்ளலாமே. இந்த குறிப்பிட்ட இந்துமத மக்கள் கடந்த 78 வருடங்களாக இத்தனை வெற்றிகரமாக இந்த கல்வி ஸ்தாபனத்தை நடத்தும்போது நம்முடைய
CSI, லூத்தரன் சபைகள்
குறிப்பாக டேனிஷ்பேட்டை பெத்தேல் போன்ற ஸ்தாபனங்கள்
ஏன் நடத்தக்கூடாது?
தூத்துக்குடி
Missionary Sponsors Fellowship என்ற பெயரில் விசுவாசிகள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட ஜெப ஐக்கிய குழுவினர்
சில்லாங்குளத்தில் இந்த பள்ளிக்கூடத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்காக, அருகிலுள்ள கிராம மக்களுக்காக பணம் சேர்த்து இடம் வாங்கி அங்கு ஒரு சிறு
ஆலயம் கட்டி ஆராதனையும் நடத்தி வருகிறார்கள். இந்த ஆலயத்தில் ஆராதிக்க
முத்துகருப்பன் கல்வி நிலையத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளை
கல்வி நிலைய பொறுப்பாளர்கள் யாரும் தடை ஏதும் சொல்லாமல்
இயேசுவை ஆராதிக்க பிள்ளைகளை இந்த சிற்றாலயத்துக்கு அனுப்புகின்றனர்.
2010 மார்ச் மாதம் என்னை இந்த மாணவ, மாணவிகள் மத்தியில்
இயேசுவை அறிவிக்கவும், பரீட்சை நேரத்தில் எப்படி தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதைக் குறித்து அவர்களோடு பகிர்ந்துக் கொள்ளவும் இங்கு கூட்ட எற்பாடுகளை செய்திருந்தார்கள். நானும் அந்த பிள்ளைகளுடன் பகிர்ந்துக் கொண்டேன். கூட்டம் முடிந்தவுடன் இரண்டு பிள்ளைகள் என்னிடம் பேசினார்கள். இந்த
கல்வி நிலையத்தினர் எங்களுக்கு இத்தனை இலவசமாக அனைத்து உதவிகளும் செய்து எங்களை படிக்க வைக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு படிப்பு தலையில் ஏறமாட்டேன் என்கிறது. நாங்கள் படித்து முன்னேற ஆசை எங்களுக்காக ஜெபிப்பீர்களா? என்று அந்த பிள்ளைகள் தங்கள் உள்ளான நிலையை கூறியபோது கலங்கிப் போனேன். அவர்களுக்கு ஆலோசனை கொடுத்து அவர்களுக்காக கைகளை வைத்து ஜெபித்தேன்.

நான் சேலம் திரும்பிய சில தினங்களில் அந்த கூட்டத்தில் நான் பேசியதின் விளைவாக பலர் என்னோடு தொலைப்பேசியில் பேசி தங்கள் சந்தேகங்களைக் கேட்டு தொலைப்பேசி மூலமாகவே ஜெபமும் செய்துகொண்டார்கள். இங்கு நான் பேசியது என் மனத்துக்கு பெரும் திருப்தியாக இருந்தது.

இந்த படத்தில் நீங்கள் காண்பது அந்த பிள்ளைகளின் ஒரு பிரிவினருக்கு நான் பிரசங்கம் செய்தது ஆகும்.
தூத்துக்குடியில்
Missionary Sponsors Fellowship என்ற பெயரில் சில குடும்பங்களாக சேர்ந்து தனிப்பட்ட முறையில் ஊழியம் செய்கிறார்கள். தங்கள் காணிக்கைகளால் பல மிஷனரிகளை தாங்கியும், கிராமங்களில்
ஆலயங்கள் கட்டிக்கொடுத்தும் சிறப்பான ஊழியம் செய்கிறார்கள்.
ஜாமக்காரன் வாசகர்கள்
சில்லாங்குளத்தில் படிக்கும் பிள்ளைகளையும், இங்கு பணிபுரிவோரையும், கிராம மக்களையும் மனதில் வைத்து
ஜெப ஐக்கியத்தினர் கட்டிக்கொடுத்த இந்த சிற்றாலயத்தில் கூடும் பிள்ளைகளுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். |