என் தகப்பனார் எனக்கு பெரியமலை (பெட்டமுகுளாளம்) பணிதளத்துக்கு அன்று எழுதிய கடித விவரத்தை வாசகர்கள் அறியவேண்டி இப்போது வெளியிட்டேன். அக்கடிதம்
சேலம் என் வீட்டு விலாசத்துக்கே
Re-direct செய்து திருப்பி அனுப்பப்பட்டது. என் அப்பா எனக்கு எழுதும் கடிதம் முழுவதும் இதே மாதிரியான பஞ்சப்பாட்டாக இருப்பதால் என் உள்ளம் ஊழியத்தை விட்டுவிட சொல்லுமோ என்ற பயத்தில், என் அப்பா எழுதிய பல கடிதங்களை நான் வாசிக்காமல் அப்படியே கிழித்து போட்டுவிடுவேன். என் அப்பா திரும்பவும் எனக்கு கடிதம் எழுதாததிருக்க கடிதத்தை திருப்பி வீட்டு விலாசத்துக்கே அனுப்பவிடுவேன். அப்படி திருப்பி அனுப்பப்பட்ட கடிதங்களில் ஒன்றுதான் உங்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளேன்.
இந்த நிலைகளையெல்லாம் சுட்டிக்காட்டி
சகோ.P.சாமுவேல்,
Dr.Daniel, Dr.சாம் கமலேசன், சகோ.எமில் ஜெபசிங் அன்று ஆடிட்டராக இருந்த
Rev.மோஹன் ஆகியவர்களுக்கு நானும், சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்களும் பல கடிதங்கள் எழுதினோம். அதில் இரண்டு பேர்களிடமிருந்துமட்டும் எனக்கு பதில் கடிதம் வந்தது.
1). ஆடிட்டர்.மோஹன் (Rev.Mohan), (இப்போது இவர் உயிரோடு இல்லை).
2). தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் அன்று பேராசிரியராக வேலை பார்த்த
Dr.Daniel அவர்களும் ஆவார்கள்.
இவர்கள் இருவரும் நிறைய வசனங்களை குறிப்பிட்டு அருமையான கடிதம் எனக்கு எழுதினார்கள். அந்த கடிதங்களும் அதில் குறிப்பிட்ட வசனங்களும்தான் அந்த காட்டுக்குள் வறுமையில் வாடிய எங்களுக்கு
பெலத்தையும், ஆறுதலையும் அளித்தது. (அந்த காலத்தில் அப்படி ஒரு
நல்ல கடிதம் எழுதிய
Dr.J.D.K.Daniel அவர்கள்தான் பெத்தேல் விஷயமாக நிர்வாகி
Mr.Jayakumar அவர்களைப்பற்றி ஜாமக்காரனில் நான் விமர்சித்து எழுதியதற்கு என்னோடு அவர் கோபப்பட்டுவிட்டார். நான் ஜாமக்காரனில் பெத்தேலைப்பற்றி எழுதிய என் நோக்கம், பெத்தேலைப்பற்றிய என் பாரம் இவைகளை அவர் புரிந்துக்கொள்ளாமல்
Dr.டேனியல் அவர்கள் கோபமாக எனக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அன்றைய நாளில் எனக்கு எழுதிய அவருடைய கடிதத்தையும் - இன்றைய நாளில் எழுதிய அவருடைய கடிதத்தையும் இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தேன். அதனால்தான் என் மனம்
பெத்தேல் பொறுப்பாளர்களின் இன்றைய ஆவிக்குரிய நிலையை சந்தேகப்படவைத்தது.
பெத்தேல் விஷயமாக எனக்கும் டாக்டர்.டேனியல் அவர்களுக்கும் இடையே நடந்த கடித விவரங்கள் வாசகர்களுக்கு தெரியாது.
பெரியமலை மிஷனரி விவரங்களை இன்று நான் எழுதும்போது அவரின் கடித வித்தியாசங்களை விளக்கவே இவைகளையும் இப்போது குறிப்பிடவேண்டி வந்தது).
FMPBயின் முதல் மிஷனரிகளில் ஒருவனாய் நான் சென்றது கொஞ்சகால அனுபவமாக இருந்தாலும் அதன் ஆவிக்குரிய அனுபவத்தின் ருசி மிகப் பெரியது. பணக்குறைவினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மிஷனரி ஊழியம் மறுபடியும் தொடங்கப்பட்டது. மீண்டும் மிஷனரி பணி தொடங்கப்பட்டபோது என்னால்
பெரியமலை சென்று மிஷனரி பணியில் இணையமுடியவில்லை. என் வீட்டின் சூழ்நிலை, என்
குடும்ப பொறுப்பு ஆகியவைகள் காரணமாக மீண்டும் மிஷனரி ஊழியத்தை என்னால் தொடரமுடியாமல் போனது. ஆனால் மிஷனரி ஊழியபாரம்மட்டும் என்னிலிருந்து நீங்காமல் ஒவ்வொருநாளும் கூடிக்கொண்டே வந்தது. ஆகவே என்
வைத்திய தொழிலோடும், சபை கன்வென்ஷன் ஊழியத்தோடும்,
மிஷனரி ஊழியத்தையும் இணைத்துக்கொண்டேன். மாதத்தில் 3 வாரங்கள் சபைகளை வசனத்தில் நடத்தும் கன்வென்ஷன் பிரசங்கியாக செயல்பட்டேன், வானொலியில் வேதப்பாடம் நடத்தும் ஊழியத்தையும் செய்தேன், அப்படியே மாதத்தில் ஒருவாரம் முழுவதும்
ஆதிவாசிகள் வாழும் காடுகளில் ஆதிவாசிகளுக்கு இலவச வைத்திய பணியும், அவர்களுக்கு
சுவிசேஷமும் இன்றுவரை தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருக்கிறேன்.
பல ஊர்களிலிருந்தும், பல நாடுகளிலிருந்தும், பலவித சபைமக்கள் என் ஊழியம் மூலமாக தொடப்பட்டவர்கள் என்னோடு கடிதத் தொடர்புக்கொண்டு சந்தேகங்களையும், ஆலோசனைகளையும் கேட்பார்கள் அவர்களுக்கு பதில் எழுதவே ஜாமக்காரன் பத்திரிக்கையை ஆரம்பித்தேன். லட்சக்கணக்கான வாசகர்களுக்கு ஜாமக்காரன்மூலம் தவறான ஊழியத்தைப்பற்றியும், தவறான உபதேசங்களைப்பற்றியும், பிழையான சாட்சியில்லாத ஊழியர்களைப்பற்றியும் வாசகர்களுக்கு அறிவித்து அவர்களை எச்சரிக்கவும், ஆலோசனை கொடுக்கவும், அவர்களின் ஆவிக்குரிய கேள்விகளுக்கு பதில் கொடுக்கவுமே ஜாமக்காரன் பத்திரிக்கை மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது. ஜாமக்காரன் பத்திரிக்கையை 1969ம் வருட முதல் இதுவரை நிறுத்தாமல் முற்றிலும் இலவசமாக என் வாசகர்களுக்கு அனுப்பிக்கொண்டு இந்த பத்திரிக்கை ஊழியத்தையும் வெகுநேர்த்தியாய் நடத்த கர்த்தர் உதவுகிறார்.
ஆவியானவரின் உதவியோடும், என் வாசகர்களின் ஒத்தாசையுடனும் பத்திரிக்கையை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திவருகிறேன்.
Tribal
Mission ஊழிய ஸ்தாபனத்தையும் நானே ஆரம்ப நாட்களில் முன்னின்று நடத்தினேன். அது ஆலமரம்போல பெரிய ஸ்தாபனமாக மாறியது. அதில் ஆரம்ப நடத்துதல்மட்டுமே என்னுடைய பங்காக இருந்தது. அதன்பின் அந்த ஊழியம் கர்த்தருடைய பிள்ளைகளால் வளர்க்கப்பட்டு டாக்டர்.முரளிதர்.MD, அவர்களின் பொறுப்பில் சேர்ந்து பிரகாசித்தது.
மனிதனுக்கு வேதம் அனுமதித்த வயது இப்போது எனக்கு நடந்துகொண்டிருக்கிறது. இந்த வயதிலும் நான் என்
தனிப்பட்ட ஊழியத்தையும், மிஷனரி ஊழியத்தையும் எந்த சபையின் உதவியும் அல்லது எந்த ஸ்தாபன உதவியும் இல்லாமல் இந்த ஊழியத்தை தனிப்பட்டமுறையில் என்னை புரிந்துக்கொண்ட எனக்காக ஜெபிக்கிற விசுவாசிகளின் உதவியோடு தொடர்ந்து நிறைவேற்ற கர்த்தர் எனக்கு அருள்புரிகிறார். ஆகவே
கலப்பையில் கைவைத்த நான் பின்னிட்டு பாராதவனாக அதே
மிஷனரி ஊழியத்தையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன். மாதம் ஒருவாரம் முழுவதும் காட்டுக்குள் தங்கி இலவச வைத்தியமும், மிஷனரி பணியையும் செய்துகொண்டுவருகிறேன். எல்லா சபைகளையும் மிஷனரிகளை தாங்கும் சபைகளாக உணர்வடையும்வகையில், கன்வென்ஷன் கூட்டங்களிலும் பிரசங்கிக்கிறேன். மாதத்தில் 3 வாரங்கள் சபை கன்வென்ஷனில் பிரசங்கித்து, வசனத்தைவிட்டுவிலகி, பரவச உணர்வுகளில் மூழ்கிப்போனவர்களை வசனத்துக்குநேராக திருப்பும் பணியையும் தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன்.
மிஷனரி ஊழியபாரம் தொடர்ந்து என் உள்ளத்தில் எரிந்து பிரகாசிக்கிற ஒளியாக நிறைந்திருப்பதற்காக நான் தேவனைத்துதிக்கிறேன்.
என் மரணம் வரை அந்த மிஷனரி பாரம் என்னில் தொடரவேண்டும் என்றும் ஜெபிக்கிறேன்.
1967 ஜுன் 9,
FMPB-நண்பர்கள் சுவிசேஷ ஜெபக்குழுவின் முதல் மிஷனரிகளை அனுப்பியநாள் ஆகும். அந்த நாளுக்காக இந்தமுறை பெரியமலைக்கு அழைக்கப்பட்டேன். ஆனால் போகமுடியவில்லை. ஆகவே இந்த
ஜுன் மாத ஜாமக்காரன் பத்திரிக்கை வெளியிடும்போது
பெரிய மலையை விசேஷமாக நினைவு கூறுகிறேன். நீங்களும் உங்கள் ஜெபத்தில் பெரியமலை ஊழியத்துக்காக ஜெபியுங்கள்.
இந்த மலையில்தான் இருமாநிலங்களை கலங்க வைத்த சந்தனகட்டை
வீரப்பன் என்பவன் வாழ்ந்தான் என்பது நீங்கள் அறிந்ததே.
அன்று அந்த பெரியமலையில் நாங்கள் குடியிருந்த
பன்றி குடிசையானது இன்று நல்ல கட்டிடமாக மாறியுள்ளது. அங்கு ஆலயமணி ஓசை கேட்கிறது. பெரியமலையில் உள்ள ஆதிவாசிகள் இயேசுவை ஏற்றுக்கொண்டு
வாராவாரம் அந்த ஆலயத்தில் கூடும் காட்சிகள் மிகவும் சந்தோஷமானது. அருகே நிரந்தரமான நல்ல
மிஷன் ஆஸ்பத்திரி ஒன்று உருவாகியுள்ளது என்பது சந்தோஷமான செய்தியாகும். அங்கு ஊழியம் செய்ய தன்னை அர்பணித்த
Dr.ஜெயசந்திரன்.MS.Mch அவர்களும் உதவி டாக்டராக அவர் மனைவியும் அந்த மலையில் இணைந்து ஊழியம் செய்வதை பாராட்டுகிறேன். பெரியமலையில் அற்புதமான வளர்ச்சிகளை அறிகிறேன். இவைகளைக் கண்டு உள்ளத்தில் தேவனை துதிக்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஒவ்வொரு வருடமும் நான் எங்கிருந்தாலும்
ஜுன் மாதம் 9ம் தேதியை நினைவுகூர்ந்து ஜெபிக்க மறப்பதில்லை. கர்த்தர்தாமே எல்லா மிஷனரிகளையும், எல்லா மிஷனரி ஸ்தாபனங்களையும் ஆசீர்வதிப்பாராக. என் ஆரம்ப ஊழியம்
அன்று மிக வறுமையிலும், கஷ்டத்திலும் நடந்தேறியது. ஆனால் இப்போதோ
கர்த்தர் என்னையும், என் ஊழியத்தையும், என் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையில் சமாதானத்துடன் வாழ வைத்துள்ளார்.
கர்த்தர் என்னை எப்படியெல்லாம் ஊழியத்தில் உயர்த்தியுள்ளார் என்பதையும் நீங்கள் அறியவேண்டும்.
கர்த்தர் என்னை இப்போது உலக பிரசித்திப்பெற்ற ஊழியக்காரனாக உயர்த்தியுள்ளார்.
வானொலி செய்தியாளனாகவும் ஊழியம் செய்கிறேன்.
TVயில்
சத்தியவசனம் நிகழ்ச்சிமூலம் கர்த்தருடைய வார்த்தையை அறிவிப்பதை உலகமக்கள் அனைவரும் காணும் வகையில் என்னை வளர்ந்த ஒரு ஊழியக்காரனாக கர்த்தர் மாற்றியுள்ளார்.
அநேக மிஷனரிகளை அனுப்புகின்ற
Tribal Mission என்ற மிஷனரி ஸ்தாபனத்தை ஆரம்பித்தவன் என்ற பெயர் எனக்கு சந்தோஷத்தையும், பெருமையையும் அளிக்கிறது.
பல்வேறு இடங்களில் அநேகர் எனக்கு கொடுக்கும் காணிக்கைகளைக்கொண்டு பல கிராமங்களில் பல ஆலயங்களை கட்டினேன். எதிலும் என் பெயர் வாரமல் பார்த்துக் கொண்டேன்.
எனக்கு கிடைக்கும் தொகையிலிருந்து அநேக ஊழியர்களுக்கும் அவ்வப்போது தேவையான உதவிகளை என்னால் விளம்பரம் இல்லாமல் செய்யமுடிந்தது. என்னால் பெரிய அளவில் உதவி செய்ய இயலாது என்றாலும் உதவி செய்பவர்களை தேவை உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்கள் மூலமாக உதவி தேவையுள்ளவர்கள் பயனடைய முடிகிறது. இப்படிப்பட்ட ஊழியத்தையும் நிறைவேற்றுகிறேன்.
அநேக ஊழியங்களுக்கு, மிஷனரிகளுக்கு, மிஷனரி ஸ்தாபனங்களுக்கு, பல்வேறு சபைகளுக்கு, சபைத்தலைவர்களுக்கு, மேய்ப்பர்களுக்கு, ஊழியர்களுக்கு சபைமக்களுக்கு
ஆலோசனை கொடுக்கும் ஆலோசகனாகவும், ஊழியனாகவும் நான் செயல்பட கர்த்தர் நல்ல தாலந்துகளை எனக்கு அள்ளிக்கொடுத்து அதன்மூலம் பல குடும்பங்களுக்கு ஊழியர்களுக்கு நான் ஆசீர்வாதமாக விளங்க வைத்துள்ளார். அதற்கு ஆவியானவர் எனக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். அதற்காக தேவனைத் துதிக்கிறேன். அவரை மகிமைப் படுத்துகிறேன். என்னை புழுதியிலிருந்து உயரத்தில் தூக்கி நிறுத்திய தேவனைத் துதிக்கிறேன்.
ஆனாலும்
என் ஆரம்பத்தையும், ஆரம்பகால அனுபவங்களையும், மலைகளிலும், கிராமங்களிலும் பல மைல்கள் நடந்துச்சென்று ஊழியம் செய்ததையும்,
மரத்தடியில் கையை தலையணையாக வைத்து படுத்து உறங்கியதையும், நான் மறக்காதபடி அந்த நிகழ்ச்சிகள் எதுவும் என் உள்ளத்திலிருந்து நீங்காதபடியும் ஆவியானவர் என்னை கிருபையாக வழிநடத்துகிறார்.
நான் இப்போது பிரபலமாக வளர்ந்த ஊழியனாக இருந்தாலும், இப்படித்தான் என் படுக்கை இருக்கவேண்டும், என் அறை இப்படித்தான் இருக்கவேண்டும், என் பயணம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கண்டிஷன்கள் இடாமல், ஆகார விஷயத்திலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் எல்லா சூழ்நிலையிலும் மனரம்மியமாக வாழ கர்த்தர் எனக்கு கற்றுக்கொடுத்து என்னை நடத்துகிறார்.
என் தேவன் தொடர்ந்தும் அப்படியே என்னை வழிநடத்தவேண்டும் என்று ஜெபிக்கிறேன்.
மரணம்வரை அப்படியே அவர் வழிநடத்துவார் என்று விசுவாசிக்கிறேன். தாழ்ந்திருக்கவும் எனக்கு தெரியும், திருப்தியாயிருக்கவும், பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் நான் எந்த நிலையிலிருந்தாலும் குறைவுபடவும்
போதிக்கப்பட்டேன்.
எல்லா சூழ்நிலையிலும் மனரம்மியமாக இருக்க கற்றுக்கொண்டேன். என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப்பெலனுண்டு. பிலி 4:11,12,13. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.
|