வாசகர் கடிதம்

பெத்தேல் நிர்வாகி திரு.ஜெயகுமாருக்கு ஒரு திறந்த கடிதம்:

திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு,

ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

அநேக நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்களுக்கு கடிதம் எழுதும் வாய்ப்பை கர்த்தர் எனக்கு கொடுத்துள்ளார். பெத்தேல் நிர்வாகத்திலிருந்து சிலரை வெளியேற்றியும், சிலரை வேறு இடங்களுக்கு மாற்றியும் நீங்கள் நடவடிக்கை எடுக்கப்போவதாக கேள்விப்பட்டேன். இது பெத்தேல் வளர்ச்சிக்கு மிகவும் நல்ல காரியம்.

  மாடு, ஆட்டு பண்ணைகளை கவனிக்க ஒரு Veterinary Doctor-ஐ நியமித்திருக்கிறீர்கள். இதுவும் நல்ல காரியம். இன்னும் கோழிப்பண்ணை, முயல், வெள்ளைப்பன்றி என்று பண்ணைகளை விரிவுப்படுத்தினால் பெத்தேலுக்கு லாபமும் ஏற்படும். அதேசமயம், பெத்தேல் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படும். அடுத்து வெளிநாட்டு நிதியுதவியுடன் பெத்தேல் பெயரிலேயே பாக்கட் பால், தயிர் தயார் செய்து வெளி மார்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பலாம். இதனால் பெத்தேலுக்கு விளம்பரமும் பெருகும், லாபமும் வரும். இதேபோல் பெத்தேல் விவசாய பண்ணையை கவனிக்க BSc (AGRI) படித்தவரை நியமித்தால் நல்லது.

  அடுத்து பெத்தேல் மருத்துவமனையில் தேவபயத்தோடு, எந்த ஊழலிலும் ஈடுபடாமல் சேவை மனப்பான்மையோடு வேலை செய்த சில உண்மை ஊழியர்கள் வெளியேறிவிட்டார்கள் அல்லது வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். அவர்கள் யார் என்று விசாரித்து, அவர்களை மீண்டும் அழைத்துக் கொண்டால், பெத்தேல் மருத்துவமனை வளர்ச்சிக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

  பெத்தேல் பள்ளியில் Grace Mission உதவியுடன் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களில் சிலர் பெத்தேல் விடுதியில் தங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு கேன்டீனிலிருந்து உணவு தயார் செய்து கொடுக்கப்படுகிறது. கேண்டீனில் கொடுக்கும் ஆகாரம் மிகவும் மோசமாக இருக்கிறது. மூடப்பட்டுயிருக்கிற பெத்தேல் சமையல் அறையை திறந்து, முன்புபோல் அங்கிருந்து உணவு தயார் செய்துகொடுத்தால் மிகவும் நேர்த்தியாக இருக்கும். ஊழலும் இல்லாமல் இருக்கும்.

  Bethel Anderson Elementary Schoolக்காக ஒரு Van ஒழுங்குசெய்து, பஸ் கட்டணம் இலவசம் என்று அறிவித்துகூறி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பிள்ளைகளை அழைத்து வந்தால் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையும் உயரும். அரசாங்க சலுகைகள் நமக்கு நிறைய கிடைக்கும். இதனால் மேலும் சில ஆசிரிய, ஆசிரியைகளை நியமிக்கும் வாய்ப்பு நமக்கு ஏற்படும்.

  பெத்தேலுக்கு சம்மந்தமில்லாத பொதுவான ஒரு Auditorsஐ நீங்கள் நியமித்து, பெத்தேல் மருத்துவமனை, பள்ளிக்கூடம், வேதாகம கல்லூரி, கணக்குகளை தணிக்கை செய்தால் பல உண்மைகள் வெளிவரும். கெட்டபெயர்கள் நீங்கும். பெத்தேல் குழந்தைகள் காப்பகத்தின் கணக்குகளையும் தணிக்கை செய்யவேண்டும்.

  புது டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்களை உடனடியாக சேர்த்து பழையநிலைக்கு பெத்தேல் மருத்துவமனையை தூக்கி நிறுத்துங்கள் உங்களால் முடியும்.

  கலைஞர் காப்பீட்டுதிட்டத்தில், ஓமலூர் தாலுக்காவிலேயே பெத்தேல் மருத்துவமனைதான் முதன்மையாக இருந்து இருக்கவேண்டும். ஆனால் இன்று பெத்தேல் மருத்துவமனையிருக்கும் நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது.

  பெத்தேலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள Veterinary Doctor தன் பணியை சரியாக செய்ய முடியாமல் சிலர் அவருக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் கேள்விப்படுகிறேன்.

  மாரண்டஹள்ளியில் இருக்கும் Bethel Community Centreம் சரியாக இல்லை. அங்கிருந்து கிடைக்கும் தகவல்களும் மனவேதனை தருவதாகத்தான் இருக்கிறது. நீங்கள் விசாரித்தால் உங்களுக்கு உண்மைகள் தெரியும். பெத்தேலுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன்.

- கிருஷ்ணகிரி.


சகோ.ஜட்சன் ஆபிரகாம் எழுதும் அவர் பத்திரிக்கையில்
2010, ஏப்ரல் பக்கம் 20,21

கேள்வி: பரலோகம் செல்ல சரியான வழி என்ன சார்?

பதில்: பரலோகம் (சொர்க்கம்) என்றால் ஒப்பிட முடியாதது. சொர்க்கம் போவதற்கு ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை என்று வேதத்தில் இயேசு குறிப்பிடுகிறார்... மெய்யாகவே என்றால் வேறு மாற்று வழியில்லை என்று பொருள்.... சொர்க்கத்தில் ஒரு குறையும் இல்லை. உதாரணம்: நானும், என் மனைவியும் துபாய் தேசத்திற்கு சென்றிருந்தோம். அந்த தேசத்திற்கு செல்லும்போது அந்த தேசத்திலேயே உயர்ரக விமானத்தில் முதல் வகுப்பு டிக்கட் வாங்கினோம். முதல் வகுப்பு வாங்கினவர்களுக்குமட்டும் ஏர்போர்ட்டில் ஓய்வு அறை ஏற்பாடு செய்துள்ளார்கள். நாங்கள் அங்கே சென்றோம். அங்கே எல்லாம் இலவசம். விதவிதமான சாப்பாடு, தங்குவதற்கு உயர்தரமான அறைகள் அங்கு எல்லாமே இலவசம் என்று அங்கு இருந்தவர்கள் எங்களிடம் சொன்னார்கள். அது ஒரு சொர்க்கம். அதுபோலவே பரலோகத்திலும் எல்லாமே இலவசம்.

குறிப்பு: இதுதான் சொர்க்கத்துக்கு சகோ.ஜட்சன் ஆபிரகாம் கூறும் உதாரணம். ஓட்டல் சாப்பாடு எப்படியோ அப்படிதான் சொர்க்கம் இருக்கும் என்கிறார். துபாய் தேசத்திலேயே உயர்ரக விமானத்தில் அதுவும் முதல் வகுப்பில் அதாவது சாதராண விமான டிக்கெட்டைவிட நான்குமடங்கு அதிக விலையுள்ள டிக்கெட் வாங்கி மிகப்பெரிய பணக்காரர்கள்மட்டும் பயணிக்கிற அந்த முதல்வகுப்பில்தான் நாங்கள் இருவரும் பயணிக்கிறோம் என்பதை இந்த உதாரணம் மூலம் ஜட்சன் அவர்கள் ஜனங்களுக்கு அறிவிக்க விரும்புகிறார். சொர்க்கம் என்பது அந்த உயர்ரக ஓட்டலில் கிடைக்கும் இலவச உணவுப்போல இருக்கும். சொர்க்கத்தில் எதையும் விலை கொடுத்து வாங்கவேண்டாம்... எல்லாம் இலவசம். இதை வாசித்த கர்னூலில் வசிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு (நாங்களும் சின்ன வியாபாரிகள்தான்) சொர்க்கம் ஒரு ஓட்டலாகத்தான் தெரிகிறது. ஆவிக்குரிய ஜீவியத்தில் வளராத ஆனால் பரம்பரை நெல்லை கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கே இந்த உதாரணம் ஆச்சரியப்படவைத்ததே! புது கிறிஸ்தவர்கள் அல்லது இந்து மதத்தில் உள்ளவர்கள் அதை வாசிக்கும்போது பரலோகத்தைப்பற்றி என்ன நினைப்பார்கள்! மேலும் ஜட்சன் அவர்கள் எழுதுகிறார். ஞானஸ்நானம் எடுக்காமல் போனால் பரலோகம் கிடையாது. ஞானஸ்நானம் என்றால் பாவத்திற்கு முடிவு என்பதுதான் உண்மையான அர்த்தம். ஆகவே நீங்கள் உங்கள் அருகாமையில் உள்ள சபையில் போதகரிடம் சென்று... எனக்கு ஞானஸ்நானம் வேண்டும் என்று கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். பிறகு பரிசுத்தஆவி கிடைக்கும். அதன்பிறகுதான் மெய்யாகவே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பீர்கள். இதுதான் சொர்க்கத்துக்கு செல்லும்வழி என்று ஜட்சன் எழுதியிருக்கிறார். நாங்கள் நெல்லையில் சிறுபிள்ளைகளாக இருக்கையில் ஞாயிறு பள்ளியில் டீச்சராக இருந்த ஒரு அக்கா சொன்ன வசனம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

  ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் அவன் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டான். யோ 3:3. இந்த வசனத்தை மனப்பாடம் செய்துள்ளோம். நாங்கள் வளர்ந்தபின் அந்த வசனம்தான் எங்களை மனம்திரும்ப செய்தது. இரட்சிக்கப்பட்டு பிழைப்பை தேடி இங்கு ஆந்திரா மாநிலம் வந்துள்ளோம். இங்கு ஆராதிக்க எங்கள் அருகில் சரியான சபை இல்லாவிட்டாலும் நாங்கள் அனுபவித்த மனந்திரும்புதலின் அனுபவம்மூலம் சொர்க்கத்தில் அனுபவிக்கும் சந்தோஷத்தை இந்த கிராமத்திலேயே, எங்கள் வீட்டிலேயே நாங்கள் இருக்கும் இடத்திலேயே அனுபவிக்கமுடிகிறதே! இந்த மனந்திரும்புதலின் சந்தோஷத்தினால் நாங்கள் பரலோகம் (சொர்க்கம்) எப்படியிருக்கும் என்று கற்பனை செய்யக்ககூட எங்களுக்கு விருப்பம் இல்லை.

காணிக்கை ரசீது: சகோ.ஜட்சன் ஆபிரகாம் அவர்களுக்கு காணிக்கை அனுப்பினால் அவர் அனுப்பும் ரசீதில் ஆதி 26:12. ஈசாக்கு அந்த தேசத்தில் விதை விதைத்தான் நூறுமடங்கு பலன் அடைந்தான் இந்த வசனத்தை குறிப்பிடுகிறார். இந்த வசனத்துக்கும், காணிக்கைக்கும் சம்பந்தம் உண்டா? காணிக்கை கொடுத்தவர்கள் இந்த வசனத்தை வாசித்து தலையை பிய்த்துக்கொள்கிறார்கள். எங்களிடம் இதன் அர்த்தம் கேட்டபோது அவர்களிடமே எழுதிக்கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டோம். இப்படிப்பட்ட பிழையான உபதேசங்கள் ஜனங்களை ஓட்டலுக்குத்தான் அழைத்து செல்லும். ஞானஸ்நானம் பெற்றுவிட்டால்போதும் உயர்ரக விமானத்தில் முதல்வகுப்பு பிரயாணம் செய்து சொர்க்கம்போய் சேர்ந்துவிடலாம் என்ற எண்ணத்தையல்லவா கொடுக்கும். இப்படிப்பட்ட ஊழியர்கள் கையிலிருந்து மக்களை காப்பாற்றுவது யார்?

- கர்னூல், ஆந்திரா.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM