ஜெபத்தில் எல்லா கதவுகளும், மூடப்பட்ட நிலை காணவேண்டியிருக்கும். கர்த்தரிடமிருந்து ஒரு பதிலும் வராது. உன் வீட்டார் உனக்கு சத்துருவாக மாறுவார்கள், கை கூடிவரும் பல காரியங்கள் கடைசி நேரத்தில் தோல்வியாக நிராசையாக மாறும். இந்த தாழ்வு காலங்களில் கர்த்தருடைய பிள்ளைகள் தங்களை பரிசோதிக்க இந்த நாட்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். காரணம் தேவன் மனப்பூர்வமாய் அல்லது நாம் வேதனைப்பட்டு துடிக்கவேண்டும் என்று எந்த பிரச்சனைகளையும், துன்பங்களையும் நமக்கு அனுமதிப்பதில்லை. புல 3:33. நம் தேவன் மிகவும் நல்லவர். தாழ்வுகாலங்களில் நாம் கர்த்தரை எந்ததெந்த விதங்களில் வேதனைப்படுத்தியிருக்கிறோம், எந்த வசனத்துக்கு நாம் கீழ்ப்படியாமலிருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க நாம் தாழ்வுற்ற காலம் மிகவும் பிரயோஜனமாக இருக்கும். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது அதில் நான் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டேன் என்று சங்கீதக்காரன் தன் அனுபவத்தை சங்கீதத்தில் பதிவு செய்திருக்கிறார். ஆகவே மேலே குறிப்பிட்ட வசனத்தின்படி தாழ்வு காலத்தில் முறுமுறுக்காமல் சிந்தனை செய்வோம்!.

அந்த வசனத்தில் அடுத்த வார்த்தை மனிதன் தனக்கு பின்வருவதொன்றையும் அறியான் என்று எழுதியிருக்கிறது. எந்த மனிதனுக்கும் பிற்காலத்தில் நம் வாழ்க்கையில் நம் வியாபாரத்தில், நம் திருமண வாழ்க்கையில் நாம் விரும்பின வேலையில் அல்லது பதவியில் என்னவெல்லாம் நடக்க போகிறது என்ன மாற்றங்கள் வீட்டில் நடக்கப்போகிறது. வீட்டில் யார் மாமியார், யாருக்கு என்ன வியாதி வரும் நம் பிள்ளைகளுக்கு என்ன நேரப்போகிறது இவை ஒன்றும் தெரியாது. பிற்காலத்தையும், நமக்கு நடக்க போவதையும் குறித்து முக்காலத்தையும் அறிந்த ஒரே ஒருவர் உண்டென்றால் அது நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மட்டுமே. ஆகவே இயேசுவை நம்பினவர்கள் எந்த தாழ்வை குறித்தும் தோல்வியை குறித்தும் கவலைப்படமாட்டார்கள். இந்த பிரச்னையில் நான் படிக்க வேண்டிய பாடம் என்ன? நான் எதை சரி செய்யவேண்டும். யாரிடம் ஒப்புரவானால் தேவன் சந்தோஷப்படுவார் என்பதை தான் கர்த்தரை நேசிப்பவர்கள் யோசிப்பார்கள்.

வாசகர்கள் யாவரும் என்னையும் சேர்த்து நம் வாழ்க்கையில் உயர்வு, தாழ்வு எல்லாவற்றையும் சந்திக்க வேண்டியிருக்கும். கர்த்தரை உறுதியாக பற்றிக்கொள்வோம்.

எப்படி வாழ்ந்தால் நம் கர்த்தர் பிரியப்படுவார் என்பதை மட்டும் அறியமுற்பட்டால் போதும். யாரும் நமக்கு உபதேசிக்கவேண்டாம். தாவீது கூறியபடி கர்த்தாவே உம்மை பிரியப்படுத்த என்னை போதியும். சங் 143:10 என்று கேட்டு உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியும் எடுத்து வையுங்கள்.

பின் நாட்களில் உனக்கு நன்மை செய்யும் பொருட்டு இப்போது உன் நிலைமையை மற்றவர்களுக்கு முன் தாழ்த்தியிருக்கலாம் அல்லது மற்றவர்கள் உன்னை அலட்சியம்படுத்தும் நிலையில் நீ கூனி குறுகிபோகும் நிலைக்கு இப்போது நீ தள்ளப்பட்டிருக்கலாம். பிற்காலத்தை அறிந்தவர் கர்த்தர் ஒருவரே. அதனால்தான் பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும் பொருட்டு உன்னை சிறுமைப்படுத்தி உன்னை சோதிக்க (உபா 8:15) அனுமதித்திருக்கலாம். வேதம் கூறுகிறது. கர்த்தர் மனபூர்வமாய் மனுபுத்திரைச் சிறுமையாக்கி சஞ்சலப்படுத்துகிறதில்லை. புல 3:33 என்று எழுதியுள்ளது. ஆகவே யாரும் எதைக்குறித்தும் குறிப்பாக இப்போதுள்ள கஷ்டங்களைக்குறித்து சோர்ந்து போகவேண்டாம். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. அது நீண்டுபோகாது. நீதி 23:18. வசனத்தில் பெலப்படுவோம். நம் கர்த்தர் மிகவும், நல்லவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவர்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM