விக்கிரகப் படையலைக் கிறிஸ்தவன் சாப்பிடலாமா?
  சகோ.ராபின் சாம்

இந்த கேள்விக்குப் பதில் சொல்வதற்குமுன் நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒரு நிமிடம் மனதில் நினைவுக்கூறக் கேட்கிறோம். விநாயகர் சதுர்த்திக்கும், தீபாவளிக்கும், பொங்கலுக்கும் வரிந்து கட்டிக்கொண்டு முன்னேபோய் வாழ்த்துத் தெரிவிக்கும் கிறிஸ்தவர்களை நாம் நம் அலுவலகங்களிலும், தெருக்களிலும், ஏன் நம் சபைகளில் கூடப் பார்த்திருக்கிறோம். அவர்கள் அந்தப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை என்றாலும் அதற்கு வாழ்த்துத் தெரிவிக்கலாமா? வாழ்த்துத் தெரிவிப்பதனால் நாம் அந்தப் பண்டிகைகளையும் அவை உருவான பின்னணியையும் ஆமோதிக்கிறோம் என்றாகிவிடுமா? இது ஒரு புறம் இருக்கட்டும், நாம் தலைப்பில் எழுப்பியுள்ள கேள்விக்கே திரும்ப வருவோம். விக்கிரகப் படையலைக் கிறிஸ்தவன் சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா?.

இந்த கேள்வியை நீங்கள் உங்களுக்குத் தெரிந்த நான்கு கிறிஸ்தவர்களிடத்தில் கேட்டால் நான்கு விதமான பதில்கள் வரும். நம் மனதுகளில் விசுவாசத்தைக்குறித்தும் வேதாகம போதனைகளைக்குறித்தும், கிறிஸ்தவ வாழ்க்கை நெறிகளை குறித்தும் இன்னும் சந்தேகங்கள் எழுந்த வண்ணம் இருப்பதினால்தான் இந்த விஷயத்தை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று தீர்மானித்தோம். மேலும் இனி வரும் நாட்களில் (கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல்) அதிகமாக விக்கிரகப் படையல்கள் நம் வீட்டிற்கு வரும். அப்போது அவற்றை ஏற்பதா அல்லது மறுப்பதா என்பதை தீர்மானிக்க நமது முயற்சி உதவும் என்றும் நாம் விசுவாசிக்கிறோம்.

விக்கிரகப் படையலைக்குறித்து வேதம் என்ன கூறுகிறது? வெளிப்படுத்தின விசேஷம் 2:20 வசனத்திலே ஆண்டவர் இயேசு தியத்தீரா சபையின் பேரில் தமக்கு இருக்கும் குறையை இப்படி வெளிப்படுத்தினார்... "தன்னை தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்".

தியத்தீரா சபையோர் விக்கிரங்களுக்குப் படைத்தவைகளைப் புசித்ததும் வேசித்தனம் செய்ததும் தவறு என்று சொன்ன ஆண்டவர், அந்த செயல்களைச் செய்யத் தூண்டிய தவறான வஞ்சனையான போதனைகளுக்கு இடங்கொடுத்ததையும் கடுமையாக விமர்சிக்கிறார் என்பதை கவனியுங்கள்.

வேசித்தனம் செய்ததும், விக்கிரகங்களுக்கு படையலைப் புசித்ததும் கண்டிப்பாகத் தவறு - ஆனால் இவைகளை செய்ய அவர்களைத் தூண்டின போதனைகளை சபையிலே அனுமதித்தது அதைவிட பெரிய தவறு.

மீட்கப்பட்ட தம்முடைய ஜனம் - "மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேத வாக்கியங்களை" ஆராய்ந்து பார்த்த பெரோயா பட்டணத்தாரைப்போல (அப் 17:11) இருக்கவேண்டும் என்றுதான் இயேசு கிறிஸ்து எதிர்ப்பார்க்கிறார். அதனால் நூதனமாக எந்த உபதேசத்தையோ, போதனையையோ கேட்டாலும் அவைகளை வேத வாக்கியங்களின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்கிறவர்களாக நாம் இருக்கவேண்டும்.

சீரியா நாட்டின் அந்தியோகியாவிலிருந்த ஆதித்திருச்சபையிலே, புறஜாதியிலிருந்தும், யூதர்களிலுமிருந்து இரட்சிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள். இவர்களிடையே நாம் எழுப்பிய இதே கேள்வி அன்று விவாதிக்கப்பட்டது. பேதுருவும், யாக்கோபும், பவுலும், பர்னபாவும் மற்ற அப்போஸ்தலர்களும், மூப்பரும் எருசலேமில் கூடியிருந்த இடத்திலே இந்த தர்க்கத்தை முடிக்க விரும்பிய யாக்கோபு எடுத்த தீர்மானத்தை அப் 15:18-20ல் வசனங்களில் நாம் வாசிக்கிறோம்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM