சகோ.எமில் ஜெபசிங்கின் பிரசித்திப் பெற்ற பாடல்கள்:

தமிழ்நாட்டில் பொன்னம்மா சன்னியாசினி பாடல்கள் அன்றைய காலத்தில் எல்லா சபைகளிலும் பாடப்பட்டது.

அவருக்குபின் சகோ.சாராள் நவரோஜி அவர்களின் பாடல்கள் மிக வேகமாக பிரபலமாகி அனைத்து சபைகளிலும் பாடப்பட்டன.

அவருக்குப்பின் சகோ.எமில் இயற்றின ஆழமான அர்த்தமுள்ள பாடல்கள் சகல சபைகளிலும் பாடப்பட்டன. எமில் இயற்றிய பாடல்களை அந்தக்காலத்தில் (L.P)Long Play Record-ல் பதித்து HMV கம்பெனி விற்பனை செய்ய முயன்றபோது FMPB நிர்வாக குழுவில் எத்தனைப்பேர் அதை எதிர்த்தார்கள் என்பது எனக்கு தெரியும். எப்படியோ பாடல் வெளிவந்தவுடன் தடைசெய்தவர்கள் எல்லாரும் எமிலையும் பாடல்களையும் மிகவும் புகழ ஆரம்பித்தனர். அதற்கு HMV கம்பெனி கொடுத்த ராயல்ட்டி முழுவதும் FMPB-க்கே கொடுத்துவிட்டார். FMPB-யின் பெருமை, ஊழியம் யாவும் இவர் பாடல் ரிக்கார்ட்மூலம் இந்தியாவில் பிரபலமானது. இப்படி புதிய புதிய பல திட்டங்கள் எமிலின் உள்ளத்தில் கொப்பளித்துக்கொண்டிருந்தன.

கர்த்தரின் கிருபை சகோ.எமிலின் கூட இருந்ததால் தடைகளையும் கடந்து அவர் மிஷனரி பணியில் சரித்திரம் படைக்கும் பெரிய செயல்களை FMPB-யிலும், விஷ்வவாணியிலும், TWR ஊழியத்திலும் செய்துமுடித்து தன் ஓட்டத்தை வெற்றிகரமாக ஒடி முடித்தார்.


கிதியோனியர் முகாம்:

அவர் தொடங்கின கிதியோனியர் முகாம் மூலம் மிஷனரிபாரம் அனைத்து மக்களுக்குள்ளும் வியாபித்து, ஆங்காங்கு ஜெபகுழுக்கள் உருவாக ஆரம்பித்தது. அந்த குழுக்கள் வழியாக ஏராளமானவர்கள் மிஷனரி பணிக்கு தங்களை ஒப்படைத்தனர். அவர்கள் தங்கள் பட்டம், பணம், பதவி எல்லாவற்றையும் துச்சமாக கருதி தங்கள் வேலையைவிட்டு, சிலர் தங்கள் தொழிலைவிட்டு முழுநேர மிஷனரிகளாக ஊழியம் செய்ய காடுகளுக்குள் புறப்பட்டார்கள். அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சொற்ப உதவி பணத்தில் காடுகளுக்குள்ளும், மலைகளுக்கும், கிராமங்களுக்கும் சென்று வசதியே இல்லாத இடங்களில் தங்கி இயேசுவே தெய்வம் என்று காட்டுவாசி மக்களுக்கு அறிவித்தனர். அது பெரிய சாட்சியும், தியாகமுமாகும்.


மிஷனரி பணியின்அடுத்த கட்டம்:

FMPB மிஷனரிகள்மூலம் வடஇந்தியாவில் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் ஞானஸ்நானம் பெற்றனர். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் மந்தைக்குள் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்களை தொடர்ந்து வசனத்தில் வழிநடத்த ஆராதனை வேண்டுமே!, சபை வேண்டுமே!, மேய்ப்பன் வேண்டுமே!, அப்போதும் சிலர் முட்டுக்கட்டை போட்டார்கள்.

கர்த்தர் நம்மை ஆத்துமாக்களுக்காக ஜெபிக்கத்தான் அழைத்தார். அதனால்தான் நம் ஸ்தாபனத்துக்கு பெயரே நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு என்று சூட்டப்பட்டது. ஆகவே ஜெபம் செய்து சுவிசேஷம் அறிவித்தால்போதும் அதோடு நாம் நிறுத்திக்கொள்ளவேண்டும். சபை கட்டிடம், ஆலயம், பாஸ்டர், ஆயர்(மேய்பன்) இந்த வளர்ச்சி இப்போது வேண்டாம் என்றனர். இப்படி உண்டான பலவித தடைகளுக்கு மத்தியிலும் சகோ.எமிலின் விடாமுயற்சியினால் FMPB ஆலமரமாக வளர்ந்து கிளைவிட்டது. சபைகள் உருவாகின, ஆலயங்கள் எழும்பின, மிஷனரிகள் ஆயர்களாக அபிஷேகிக்கப்பட்டனர். அடர்ந்த காட்டுக்குள் ஆலயமணி ஒலித்தது. எத்தனை சந்தோஷம்.

FMPB-யின் மிஷனரிகளின் ஊழியங்கள் பணிதள செய்திகள் அறைகூவல் பத்திரிக்கை மூலமாக அறிந்து கொக்கோ கோலா போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் பண உதவிகள் செய்ய அவர்களாகவே FMPB ஸ்தாபனத்தை தேடிவந்து கொடுத்தார்கள். அப்படி கோடிக்கணக்கில் வந்த வெள்ளைக்கார ஸ்தாபனங்கள் கொடுத்த காணிக்கையை வாங்கலாமா? வேண்டாமா? என்ற பிரச்சனை பூதாகரமானது. இந்தியாவை இந்தியர்கள்தான் சந்திக்கவேண்டும், இந்திய ஊழியத்தை இந்தியர்களே தாங்கவேண்டும் என்ற FMPB-யின் அஸ்திபார கொள்கையைப்பற்றி பெரும் சர்ச்சை உண்டானது. அதன் காரணமாக அன்றைய நிர்வாகக் கமிட்டியில் அபிப்ராய வித்தியாசம் உண்டானது. சகோ.எமிலின் ஊழிய திட்டவேகத்துக்கு இணையாக அன்றை நிர்வாகிகள் எமிலோடு ஒத்துழைக்க இயலாத தடைகள் மீண்டும் உண்டானது.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM