நீங்கள் இப்போது வாசித்த கடிதம்கூட எமிலின் கவிதை நடைபோன்றுதான் இருக்கும். FMPB-ஐ விட்டு வெளிவந்தவுடன் நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? நான் எந்த வகையில் உங்களுக்கு உதவவேண்டும்? என்று எழுதியதற்குதான் இந்த பதில் கடிதம் எனக்கு எழுதினார். அதில் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவிலிருந்து வெளியேற வேண்டிய நிகழ்ச்சிகளையெல்லாம் அந்த கடிதத்தில் அறிவிக்கும்போது அதை தேவனின் சித்தம் என்று உணர்ந்து வருகிறேன் என்று கருதினார். மேலும் தேவன் என்னை புதிய முறையில் நடத்துவார் என்பதை ஒவ்வொரு நிமிஷமும் உணர்கிறேன் என்றும் குறிப்பிட்டார். நீங்கள் வடஇந்தியா விலிருந்து சேலம் வந்தவுடன் தயவுசெய்து நாம் இவரும் சந்தித்து பேசி ஜெபிக்க வேண்டும். அதற்காக ஒருநாளை குறிப்பிட்டு எனக்கு எழுதுவீர்களா?.......கடிதம் நீண்டுபோகிறது என்று எழுதி தன் கடிதத்தை முடித்தார்.

சகோ.எமில் அவர்கள் ஆரம்பத்தில் திட்டம் ஏதுமின்றி அழைப்பு ஏதும் இன்றி, வெறும் கையோடு FMPB-ஐ விட்டு 1977ம் ஆண்டு வெளிவந்தார். எமிலை ஆதரவு கொடுப்பவர் FMPB-ஐ விட்டு எமிலோடு செல்ல பிரியப்பட்டனர். அப்படி தன்னுடன் வர பிரியப்பட்ட யாரையும் FMPB-யிலிருந்து எமில் தன்னுடன் பிரித்துக்கொண்டு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் தேவன் மிக உயர்ந்த திட்டத்தில் சகோ.எமிலை உயர்த்தினார்.


புதிய பெயரில் பத்திரிக்கை தொடங்கினார்:

FMPB-யை விட்டு வெளிவந்தவுடன் தன் நிலையை விளக்க, தன் ஊழிய திட்டத்தை வெளியிட தனக்காக ஜெபிக்கும் மக்களோடு தொடர்பு பங்குவைக்க ஒரு பத்திரிக்கை தொடர்பு தேவை என்று உணர்ந்தார். அதன் அடிப்படையில் அவர் முதலாவது ஆரம்பித்த பத்திரிக்கைத்தான் ஆத்ம அமைதி, வான் விளக்கு என்பதாகும். அந்த பத்திரிக்கையிலும் FMPB-யைப்பற்றி ஒரு குறையையும், தான் வெளிவந்த காரணத்தைக்குறிப்பிடவேயில்லை. அது அவர் பெருந்தன்மையை காண்பிக்கிறது. அதை அச்சடிக்கும் செலவுக்கு பணம் இல்லாத நிலையில் கஷ்டப்பட்டு அந்த பத்திரிக்கையை அச்சடிக்க வெகு குறைந்த விலையுள்ள மட்டி பேப்பரைத்தான் விலைக்கு வாங்கி அதில்தான் அச்சிட்டு பத்திரிக்கையை ஜெபக்குழு தலைவர்களுக்கு அனுப்பினார். இரண்டு வருடங்கள் மட்டுமே தொடர்ந்து அந்த பத்திரிக்கையை வெற்றிகரமாக நடத்தினார். ஆனால் அந்த பத்திரிக்கையில் தன் ஊழிய திட்டம் ஏதும் அவர் அறிவிக்கமுடியவில்லை. அந்தகாலகட்டத்தில் அந்த ஆத்ம அமைதி பத்திரிக்கையில் 1979ல் ஆசிரியர் குறிப்பில் அவர் எழுதியதை மட்டும் வாசகர்களுக்காக வெளியிடுகிறேன். இது புதுவருட செய்தியாக அவர் எழுதியதாகும்.


சகோ.எமில் அவர்களின் முன்பக்க செய்தி:

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர, சகோதரிகளே,

உங்கள் ஒவ்வொருவரின் ஜெபத்திற்காகவும், உங்களுடன் அவருக்குள்ளான ஐக்கியத்திற்காகவும் தேவனைத் துதிக்கிறோம்.

வாழ்க்கை என்பது ஒரு யாத்திரை. ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட மைல் கற்களை நடந்தே தீரவேண்டும். சிலர் பத்து, பதினைந்து வருடங்கள், பலர் அறுபது அல்லது எண்பது வருடங்கள் என வாழ்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஒரு மைல் கல். 1979ம் ஆண்டு என்பது ஒரு புதிய மைல் கல். இந்த புதிய மைல் கல்லினை சுலபமாகக் கடக்க இயலுமா? பாதை குன்றும் குழியுமாக இருக்குமா? அல்லது ஒரே சீராக இருக்குமா? என்று பல எண்ணங்கள் எழும்பலாம். கவலை சற்றும் வேண்டாம். உங்கள் கண்கள் இயேசுவை நோக்கி நிற்கட்டும். கால்கள் நடக்கட்டும். கரங்கள் செயலாற்றட்டும் உங்கள் தனிப்பட்டப் பொறுப்புகள், குடும்ப பொறுப்புகள், உத்தியோகம் செய்யும் இடத்தின் பொறுப்புகள், ஊழியப் பொறுப்புகள் மற்றும் அனைத்தும் இயங்கட்டும். ஆனால் கண்கள் மட்டும் அவரையே நோக்கி நிற்கட்டும். அவரை நோக்கிப் பார்த்தவர்கள் முகம் பிரகாசம் அடைந்தது. கிறிஸ்துவின் முகத்தின் பிரகாசம் நம் கால்கள் சீராகச்செல்ல, பாதைக்கும் பிரகாசம் தருவதுமாகும். இவ்விதம் இந்த புதிய வருடத்தில் நீங்கள் இயேசுவைமட்டும் நோக்கிப் பார்ப்பீர்களா?. மனிதனையோ, சபையையோ, சபைத் தலைவனையோ, ஸ்தாபனத்தையோ, ஸ்தாபனப் பணியாளர்களையோ அல்லது சுயபக்தியையோ, சுயமுயற்சிகளையோ நோக்கும் விசுவாசிகள் மிக கலக்கத்துடனும், பாதுகாப்பு உணர்ச்சி இழந்த நிலையிலும், தங்கள் எதிர் காலத்தைக்குறித்து கவலைப்பட்டு அதிகம் வேதனையுடனும் வாழ்வதைக் காண்கிறோம்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM