ஞாயிறு பள்ளியின் துவக்கம் 1780-ம் வருடம்
  (நன்றி: THE CHRISTIAN MESSENGER)

ராபர்ட் ரைக்ஸ் என்ற பெயரை நாம் கேட்டிருக்கமாட்டோம். இங்கிலாந்தில் உள்ள குளோஸெஸ்டர் என்ற இடத்தில் ராபர்ட் ரைக்ஸ் என்ற பத்திரிக்கை பதிப்பாளருக்கும், மேரிடிரு என்பவருக்கும் மூத்தக் குழந்தையாக ராபர்ட் ரைக்ஸ் ஜூனியர் செப்டம்பர் 14, 1736-ம் வருடம் பிறந்தார்.

தன்னுடைய 21வது வயதில் ராபர்ட் ரைக்ஸ் ஜூனியரின் தந்தை காலமானார். அதைத்தொடர்ந்து தந்தை நடத்திவந்த குளோஸெஸ்டர் ஜர்னல் என்ற பத்திரிக்கையையும், அச்சகத்தையும் ரைக்ஸ் ஜூனியர் பொறுப்பாக ஏற்று நடத்த துவங்கினார்.

பத்து வருடங்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பர் 23, 1767 வருடம், ரைக்ஸ் ஆன் டிரிக்கே என்பவரை தன் துணைவியாக ஏற்றுக் கொண்டார்.

இன்று கிட்டத்தட்ட கிறிஸ்தவம் பரவியுள்ள எல்லா உலக நாடுகளிலும் நடத்தப்படும் ஞாயிறு பள்ளிகளை சுமார் 230 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தவர் ராபர்ட் ரைக்ஸ். ஞாயிறு பள்ளி இயக்கத்தின் தந்தை என்று இவரை கிறிஸ்தவ உலகம் அழைக்கின்றது.

பத்திரிக்கையாளராக இருந்தபோது லண்டன் மாநகரிலுள்ள சிறைச்சாலைகளை அவ்வப்போது சென்று பார்வையிடுவதும், அங்குள்ள கைதிகளை நலம் விசாரிப்பதும் அவர் வழக்கமாக இருந்தது.

ஆனால், ஒருமுறை லண்டன் நகரிலுள்ள சேரிப்பகுதியொன்றில் அவர் சென்றபோது அங்கு கண்டகாட்சி அவர் மனதை நொறுக்குவதாக இருந்தது. காற்றோட்டமில்லாத குடிசை வீடுகள், குறுகலான பாதைகள், வீடுகளுக்கு அருகிலேயே ஓடும் துர்நாற்றம் எடுக்கும் ஓடைகள், அதிலிருந்து தண்ணீரை எடுத்து மற்றவர்கள்மேல் தெளிக்கும் குரும்புகார பையன்கள் கட்டிப் பிடித்து சண்டைபோட்டு சகதியில் உருளும் பிள்ளைகள், பாவத்தில் விழுந்து மீண்டு வரமுடியாமல் தவிக்கும் மனிதர்கள், குடிகாரக் கணவனின் அக்கிரமங்களைப் பொறுக்க முடியாமல் எரிமலைபோல் குமுறிக்கொண்டிருக்கும் பெண்கள் என வாழ்க்கையில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லாது மனம்போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கும் அங்குள்ள மனிதர்களைப் பார்த்த ராபர்ட் ரைக்ஸின் மனம் செய்வதறியாது தவித்தது, பாவமும், ஒழுக்கக்கேடும், சாபமும், வன்முறையுமே வாழ்க்கையாக மாறிவிட்ட மனிதர்களை மாற்ற இது பிள்ளைகளிடம் தான் தன்வேலையைத் துவங்கவேண்டும் என்பதைமட்டும் அவர் உணர்ந்தார். வாரத்தில் ஆறு நாட்களும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சிறுவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் ஓய்வுநாள் என்பதைபறிந்த ரைக்ஸ் சிறுவர்களுக்கு ஞாயிறு பள்ளியொன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டார். அதன்படி ஜீலை மாதம், 1780ம் வருடம் மெரிடிக் என்ற பெண்மணியின் வீட்டில் முதன்முதலில் ஞாயிறுபள்ளி துவங்கியது. ஆரம்பத்தில் சிறுவர்கள் மட்டும் ஞாயிறு பள்ளிக்கு வந்தனர். நாளடைவில் சிறுமிகளும் வர ஆரம்பித்தார்கள். ஞாயிறுபள்ளி ஆரம்பித்த சில நாட்களிலேயே சிறுவர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் தென்பட்டன.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM