பாவம், ஒப்புரவு ஆகாதது, கர்த்தரையும், கர்த்தரின் வசனத்தையும் சரியாய் விளங்கிக் கொள்ளாது வசனத்துக்கு கீழ்ப்படியாமை ஆகியவைகள்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று யாராவது வசனத்தை சுட்டிக்காட்டி பிரசங்கித்தால் அதை கேட்க மக்களுக்கு பிரியம் இல்லையே!. உன் துக்கம் சந்தோஷமாக மாறும், இப்போதே அந்த அற்புதத்தை பெற்றுக் கொள்வாய், இப்போது இப்போது கர்த்தரின் கரம் இறங்கி வருகிறது என்றால் அப்படிப்பட்ட பொய்களை கேட்க மக்களுக்கு ஆவல் மிக அதிகம். அப்படிப்பட்ட வெற்று ஆறுதல் வார்த்தை மக்களை திருப்திப்படுத்துகிறது. ஆகவே ஆறுதல் பிரசங்கம், செழிப்பு உபதேசம், கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கிறார் என்று பிரசங்கிகள் கூறுவதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். குறைவுகளை குற்றங்களை சுட்டிக்காட்டுவதை மக்கள் விரும்புவதில்லை.

மக்களின் இந்த பலவீனத்தை புரிந்துகொண்ட இப்போதுள்ள எல்லா ஊழியர்களும், அவர்களின் பிரசங்கமும், ஜெபமும் ஆறுதலைப்பற்றியும், அற்புதங்களைப்பற்றியும் மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அதற்கு சாதகமாக கூட்டத்தில் நன்றாக அழும் பெண்களின் அல்லது ஆண்களின் முகங்களை திரும்ப திரும்ப டிவியில் காண்பிப்பார்கள். வீடியோக்காரர்களுக்கு அழுகிறவர்களின் கூட்டத்தைமட்டும் படம் பிடிக்க இப்படிப்பட்ட ஊழியர்கள் கட்டளையிடுவார்கள். ஏராளமான பொய் சாட்சிகளை மேடையில் அரங்கேற்றுவார்கள்.

இப்படிப்பட்ட டிவி நிகழ்ச்சிகளை விரும்புபவர்கள்தான் இப்படிப்பட்ட பொய் ஊழியர்களுக்கு பணம் அள்ளிக்கொடுப்பார்கள். அவர்கள் நடத்தும் டிவி காட்சிகள் ஒரு ஆவிக்குரிய வியாபார விளம்பரம் என்று கிறிஸ்தவர்கள் விளங்கிக்கொள்ள விரும்புவதில்லை. இப்படிப்பட்ட அறியாமையுள்ள மக்கள் கூட்டத்தில் நல்ல ஆவிக்குரிய செய்திகள் மட்டும் அல்லது நல்ல வேத பாடம் மட்டும் நடத்தினால் எடுபடாது!. இப்போது Good News சேனல் மூலமாக பல பெயர்களில் டிவி நிகழ்ச்சிகள் வெளிவந்துகொண்டிருக்கிறது.

இந்த Good News TV நிகழ்ச்சி நடத்தும் நபர்களில் உள்ள ஒரு குடும்பம் அநேக ஆண்டுகளுக்குமுன் சென்னை தாம்பரத்தில் என்னை நேரில் சந்தித்து தாங்கள் கிறிஸ்தவ TV சேனல் ஆரம்பிக்க போவதைக்குறித்து என்னிடம் கூறினார்கள். அவர்கள் மிக நல்ல ஆவிக்குரிய செய்திகளை அளிக்கும் ஊழியர்களின் நிகழ்ச்சிகள் மட்டும் எங்கள் டிவி சேனலில் வெளியிடப்படும் என்ற வைராக்கியத்தில் இருந்தார்கள். நிச்சியமாக அது ஒரு நல்ல முயற்சிதான் நானும் ஜெபித்து அவர்களை அனுப்பினேன். நானும் அவர்களுக்காக அவர்கள் முயற்சிக்காக தொடர்ந்து ஜெபித்து வந்தேன். ஆனால் நடந்து என்ன? நல்ல வசன அடிப்படையில் செய்தி கொடுக்கும் ஊழியர்களிடம் தொடர்ந்து பணம் கொடுத்து Sponsor செய்து தங்கள் நிகழ்ச்சிகளை Good News சேனலுக்கு கொடுத்து தொடர்ந்து வெளியிட இயலவில்லை. அற்புத ஊழியர்கள், தீர்க்கதரிசனம், ஆராதனை, துதி ஆராதனை கைகளை உயர்த்திக்கொண்டே ஆடுவது, குதிப்பது இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்துபவர்களுக்கு நிறைய பணம் கொடுக்க மக்கள் தயாராக இருந்தனர்.

நல்ல நோக்கத்தோடு தொடங்கிய Good News டிவி ஸ்தாபனம் மெள்ள மெள்ள மேடை மேஜிக் நடத்தும் அந்நியபாஷை பேசும் ஆட்களிடம் தங்களின் நல்ல டிவி சேனல் ஸ்தாபனத்தை அடகுவைக்க வேண்டியதானது. இதை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால் மக்கள் விரும்புகிறபடி, பொய் ஆறுதல் செய்தியை பிரசங்கிப்பவர்களுக்கு மக்கள் காணிக்கை கொடுத்து உற்சாகப்படுத்த பணத்தோடு ஆயத்தமாக இருக்கிறார்கள்.

ஆனால் நல்ல வசன அடிப்படையில் செய்யும் ஊழியங்களுக்கு இவர்கள் காணிக்கை கொடுக்க மனம் வருவதில்லை.

5 அப்பம், 2 மீன்கள் ஆகிய அற்புதம்போல் இப்போதே அற்புதம் உங்களுக்கு கிடைக்கும் என்றால் உடனே பணம் அனுப்ப ஆட்கள் உண்டு!. என்ன செய்ய!


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM