கேட்டாரே ஒரு கேள்வி

TVயில் தமிழ் பெந்தேகோஸ்தே சபை ஆராதனையை ஒரு குடும்பத்தினர் கண்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் சபையில் இரண்டு பாஸ்டர்கள் ஆராதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

TVயை சுற்றி குடும்பமே உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆராதனையில் துதி நேரம் - துதி ஆராதனை நடந்துக்கொண்டிருக்கிறது. பாடல் உச்சக்கட்டத்தில் பாடப்படுகிறது. சபை மக்கள் ஆவியில் நிறைந்து துள்ளுகிறார்கள். பலர் கீழே விழுந்து புரளுகிறார்கள். சிலருக்கு கைகள் நடுங்குகிறது, கைகளை வேகமாக தட்டுகிறார்கள். துதி! துதி! ஆராதனை ஆராதனை இந்த வார்த்தைகள்தான் மிக அதிகமாக உச்ச சப்தத்தில் கேட்கிறது. பாஸ்டர் முதல் சபை மக்கள் வரை எல்லார் வாயிலிருந்தும் பெருத்த சத்தம் வெளிவருகிறது.

இப்படி துதி என்பதாலோ, ஆராதனை என்பதாலோ கர்த்தருக்கு எப்படி மகிமை வந்து சேரும் என்பது அவர்களுக்கே புரியாத புதிர். ஆனாலும் அதில் அவர்கள் சந்தோஷம் அனுபவிக்கிறதாக பலர் சொல்லி கேட்டிருக்கிறேன்.

TVயை பார்த்துக்கொண்டிருக்கும் அந்த குறிப்பிட்ட குடும்பத்தினர்களுடன் பக்கத்துவீட்டு இந்து மத நண்பர் அவரும் அவர்களுடன் அமர்ந்து சபை ஆராதனை நிகழ்ச்சியை கவனிக்கிறார். பாஸ்டர் கூறுகிறார்!. ஏராளமான பிசாசுகள் சபையில் உள்ள பலரைவிட்டு வெளியேறுகிறதை நான் பார்க்கிறேன். இன்னும் துதியுங்கள். அப்போதுதான் பிசாசு அறவே நீங்கும் என்கிறார். சற்றுநேரம் கழித்து (எவ்வளவு நேரம் என்று இந்த சம்பவத்தை கூறிய நபர் கூறவில்லை). TVயை கண்டு கொண்டிருந்த அந்த இந்துமத நபர் நிதானமாக கேட்டராம். இது உங்கள் சபையில் நடந்த ஆராதனை நிகழ்ச்சியைத்தானே DVDயில் போட்டு டிவியில் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆமாம். ஏன் கேட்கிறீர்கள்? அடிக்கடி உங்கள் சபைக்கு வரும்படி என்னை அழைத்தீர்கள். நான் வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இயலவில்லை.

ஆனால் இப்போது எனக்கு ஒரு கேள்வி கேட்கவேண்டும்போல தோன்றுகிறது என்றார். உங்கள் சபை ஆராதனையின் DVDயை பார்த்தபின்தான் இந்த கேள்வி கேட்க தோன்றியது. உங்கள் சபை விசுவாசிகள் அத்தனை பேர்களும், பிசாசு பிடித்தவர்களா? உங்கள் சபையில் இவ்வளவு பிசாசுகள் நிறைந்திருக்கிறது என்பது எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. எல்லாரும் நடுங்குகிறார்கள்!. குதிக்கிறார்கள், உளறுகிறார்கள், உடல் நடுங்குகிறது, சிலர் விழுந்து கிடக்கிறார்கள். உங்கள் பாஸ்டரும் இதோ எல்லா பிசாசுகளும் ஓடுகிறதை நான் பார்க்கிறேன் என்கிறார்!. ஆனால் எனக்கோ என் வீட்டில் உள்ள யாருக்கும் எந்த பிசாசும் பிடிக்கவில்லை. பின் எதற்காக உங்கள் கிறிஸ்தவ சபைக்கு எங்களை அழைக்கிறீர்கள்? என்றாராம்!.

அந்த வீட்டுக்காரர் பதில் கூறமுடியாமல் தவித்தார்.

அப்படி உடல் நடுங்க, கைதட்டி, தலையை ஆட்டி, குதிப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரின் நிறைவினால் குதிக்கிறார்கள் என்று எப்படி அந்த நபருக்கு விளக்கி சொல்வேன்? அந்த இந்துமத நண்பரோ பிசாசு பிடித்தவர்களின் ஆட்டத்தை பலமுறை கண்டிருக்கிறார். அவர்களின் இந்து தெய்வங்களை ஊர்வலமாக தூக்கி வரும்போது மக்கள் இதேபோல் நடுங்குவதையும், குதிப்பதையும் அலறுவதையும், உருளுவதையும் கண்டிருக்கிறார்!. நாமும் அதை அறிவோம். அப்படியிருக்க பெந்தேகோஸ்தே சபைகளில் இப்படி உடல் நடுங்குகிறவர்கள், அலறுபவர்களை கைதட்டிக்கொண்ட உடலை ஆட்டுபவர்களை கண்டு இவர்கள் யாவரும் ஆவியானவரின் வல்லமையால் நிறைந்தவர்கள் என்று எப்படி கூறுவது? அந்த வீட்டுக்காரர் மேலும் கூறுகிறார் என் உள்ளத்தில் எழும்பிய கேள்வியை என் மனைவியிடம் கூறினேன். அவளும் எனக்கும் நீண்ட நாட்களாக இந்த சந்தேகம் உண்டு என்று கூறினார். தொடர்ந்து நாங்கள் அதே சபைக்கு ஒரு வருடம் சென்று வந்தோம்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM